

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (TAHDCO) சார்பில் எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள், சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர எஸ்சி, எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.
இளைஞர்களை சுயதொழில் செய்ய ஊக்குவிக்கவும், திறன் பயிற்சி மூலம் வேலைவாய்ப்பை பெற்றுத் தரவும் தாட்கோ தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது எஸ்சி, எஸ்டி பிரிவினர் செய்யும் சுயதொழிலுக்கு மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் அடிப்படையில் விளம்பரம் செய்ய மானியம் வழங்கும் புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது தாட்கோ.
ஏற்கனவே சுயதொழில் செய்து கொண்டிருக்கும் எஸ்சி, எஸ்டி சமூகத்தினர் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்யவும், மேம்படுத்திக் கொள்ளவும் இந்தப் புதிய திட்டம் உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை தொழில் முனைவோராக்க முனைப்போடு செயல்பட்டு வரும் தாட்கோ, அவ்வபோது புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தொழில் முனைவோர்களுக்காக ‘பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவு மானியம்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது தாட்கோ.
இத்திட்டத்தின் படி, ஏற்கனவே சுயதொழில் செய்து கொண்டிருக்கும் எஸ்சி, எஸ்டி சமூகத்தினர் தங்கள் தொழில் மற்றும் தயாரிப்பு குறித்து பொதுவெளி மற்றும் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வதற்கு மானியம் வழங்கப்படும். இதன்படி அதிகபட்சமாக ரூ.60,000 வரை மானியம் வழங்கப்படும்.
இந்தப் புதிய திட்டம் குறித்து தாட்கோ அதிகாரிகள் கூறுகையில், “எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு தொழில் ஆதரவை வழங்குவதோடு, மார்க்கெட்டிங் செய்வதற்கும் தற்போது தாட்கோ உதவ திட்டமிட்டுள்ளது.
இதன்படி தனியார் நிறுவனங்களின் உதவியுடன் எஸ்சி, எஸ்டி சமூகத்தினர் செய்யும் சுயதொழிலுக்கு லோகோ வடிவமைப்பு, சமூக வலைதள விளம்பரம், பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட பல வசதிகள் செய்து தரப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ.60,000 மானியம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் பயன்பெற எஸ்சி, எஸ்டி தொழில்முனைவோர்கள் தங்களது பங்களிப்பாக ரூ.20,000 செலுத்த வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்துள்ளனர்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
* பதிவு செய்யப்பட்ட பட்டியலின (SC) மற்றும் பழங்குடியின (ST) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSEs).
* தற்போது செயல்பாட்டில் இருக்கும் வணிகங்கள் (MSEs).
* தயாரிப்பு (Product) அல்லது சேவை (Service) சார்ந்த நிறுவனங்கள்.
மார்க்கெட்டிங் பணிகள் முழுமையாக முடிவடைந்து, பயனாளிகள் தங்களது பங்களிப்பைச் செலுத்தியதும், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகே மானியம் (Grant) வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் https://tahdco.com/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 70101 83527 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்