

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் கரூர் சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்று பணமோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்து உள்ளார்.
கரூரில் பிரியாணி கடை நடத்தி வந்த கிருஷ்ணன் என்பவரிடம், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்காகப் பெறப்பட்ட ₹7 லட்சம் பணமோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், சவுக்கு சங்கர் 2-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய விக்னேஷ் மற்றும் சவுக்கு சங்கர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், முதலமைச்சர் விஜய்க்கு 2 கோரிக்கைகளை விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தவெக அரசு பதவியேற்று கிட்டதட்ட ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. விஜய் அவர்களை இந்த மண்தான் கோட்டையில் அமர்த்தி உள்ளது. அதனை மறுக்க முடியாது. பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்தனர்.
அப்போது இருந்த திமுக அரசு போதுமான பாதுகாப்பு வழங்காத காரணத்தால் விஜய்யால் சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட முடியாத சூழலும், அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்ல கூட பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்ததால், அவர்களை மகாபலிபுரத்திற்கு வரச் சொல்லி ஆறுதல் கூறினார்.
தற்போது முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. பதவி ஏற்றதும் கரூருக்கு சென்று உயிரிழந்த மக்களின் படத்திற்கு அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நடக்கவில்லை. இப்போதாவது முதலமைச்சர் விஜய் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்த்து ஆறுதல் சொல்ல வேண்டும்.
அதுதான் ஒரு தலைவனுக்குரிய பண்பான செயல் என்று நான் கருதுகிறேன். இதை ஒரு வேண்டுகோளாகவும் விடுக்கிறேன்.
இரண்டாவது கோரிக்கையாக, கடந்த திமுக அரசு பாஜக எதிர்ப்பு என்ற பெயரில் ஊழல்வாதிகளை பாதுகாப்பதற்காகவே தமிழகத்தில் சிபிஐ விசாரணையை நடத்துவதற்கான அனுமதியை ரத்து செய்தது.
தமிழகத்திலும் சிபிஜ விசாரணை நடத்துவதற்கான அனுமதியை முதலமைச்சர் விஜய் உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க விரும்புகிறேன். அதற்கான காரணம் என்னவென்றால் மாநில அரசு அலுவலகங்களில் எப்படி ஊழல் அதிகரித்துள்ளதோ அதேபோல் மத்திய அரசு அலுவலகங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
பாஜக எதிர்ப்பு என்ற ஒரே காரணத்தை வைத்து சிபிஐ வழக்கு விசாரணை நடத்துவதற்கான அனுமதியை திமுக அரசு ரத்து செய்தது. இதெல்லாம் முதலமைச்சருடைய கவனத்திற்கு சென்றிருக்காது. உடன் இருக்கக்கூடிய ஆலோசகர்களும், அதிகாரிகளும், முதல்வரிடம் இதை எடுத்துசொல்லி அந்த அனுமதியை உடனடியாக வழங்க வேண்டும். தற்போதுள்ள அரசு நினைத்தால் உடனடியாக முடிவுக்கு வரும். அதேபோல் கடந்த ஆட்சியில் அவர்களை எதிர்த்துப் பேசியதால் என் மீதும் மேல் அவர்கள் போட்ட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கரூர் சம்பவம் திமுகவின் கவனக்குறைவு, பாதுகாப்பு குறைவு காரணமாக நடந்தது என்று பேசியவர்கள் அத்தனை பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அரசுகள் அவ்வளவு எளிதில் வீழ்ந்து விடாது. அதிகாரம் அந்த அரசுகளை நீடிக்க வைக்கும் தன்மை படைத்தது. அதையும் மீறி எதிர்கட்சிகள் எல்லா வேலைகளையும் செய்வார்கள். வேகமாக அரசியல் சூழ்நிலைகள் மாறினாலும் கூட இந்த அரசு நீடிக்கும் என்றே தோன்றுகிறது. வரும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்க கூடிய நிலையில் திமுகவும், அதிமுகவும் இல்லை. இந்த ஆட்சி மீது மக்களுக்கு இன்னும் கோபம் எல்லாம் இன்னும் வரவில்லை என்பதால் எவ்வளவு சூழ்ச்சிகள் நடந்தாலும் இந்த தவெக அரசு நீடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
ஆனால் விமர்சனம் செய்தார் என்பதற்காக மாரிதாஸை கைது செய்துள்ளது பாசிச அரசு போல் மாறிவிடும். எனவே இதனை விஜய் திருத்தி கொள்ள வேண்டும் என்றார்.