Lithium
Lithium

"பூமிக்கு அடியில் புதைந்து கிடந்த 36 கோடி டன் புதையல்!" - கனடாவில் நடந்த அதிசயம்.

Published on

இன்றைய டிஜிட்டல் உலகில் 'டேட்டா' தான் புதிய எண்ணெய் என்பார்கள். ஆனால், எலக்ட்ரிக் வாகனங்களின் சகாப்தத்தில் 'லித்தியம்' தான் புதிய தங்கம். உலக நாடுகள் அனைத்தும் லித்தியம் வளத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் வேளையில், கனடாவில் ஒரு பிரம்மாண்டமான கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. 

அதுவும் மனிதர்களால் அல்ல, விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோள்களும், செயற்கை நுண்ணறிவும் (AI) இணைந்து நடத்திய வேட்டையில் இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது. கனடாவின் கியூபெக் மாகாணத்தில் பூமிக்கடியில் மறைந்திருக்கும் இந்த வளத்தை வெளிக்கொண்டு வந்த தொழில்நுட்பம் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

பொதுவாகச் சுரங்கத் தொழில் என்றாலே, பல மாதங்கள் அல்லது வருடங்கள் ஆய்வு செய்து, ஆங்காங்கே துளையிட்டுப் பார்த்துதான் கனிமங்கள் இருப்பதை உறுதி செய்வார்கள். ஆனால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 'பிளீட் ஸ்பேஸ்' என்ற நிறுவனம் அந்தப் பழைய முறையையே மாற்றியமைத்துள்ளது. இவர்கள் விண்வெளித் தொழில்நுட்பத்தை, பூமியின் ஆழத்தை ஆய்வு செய்யப் பயன்படுத்தியுள்ளனர்.

இதற்காக, நிலத்தின் அதிர்வுகளைக் துல்லியமாக உணரக்கூடிய அதிநவீன சென்சார்களைக் காட்டுப்பகுதிகளில் பொருத்தியுள்ளனர். இந்த சென்சார்கள் சேகரிக்கும் நுணுக்கமான சத்தங்கள் மற்றும் தரவுகள், நேரடியாக விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களுக்கு அனுப்பப்படுகின்றன. அங்குள்ள செயற்கை நுண்ணறிவு மென்பொருள், பூமிக்கு அடியில் என்ன இருக்கிறது என்பதை ஒரு 'எக்ஸ்-ரே' போலப் படம்பிடித்துக் காட்டிவிடுகிறது.

இதையும் படியுங்கள்:
5 நிமிடத்தில் நாவூறும் 10 வெஜ் உணவுகள்... பேச்சுலர்களுக்கு இது ஒரு வரம்!
Lithium

48 மணி நேரத்தில் கிடைத்த முடிவு!

இந்தத் தொழில்நுட்பத்தின் மிகச்சிறந்த அம்சமே அதன் வேகம் தான். பாரம்பரிய முறையில் மாதக்கணக்கில் இழுத்தடிக்கும் ஆய்வுப் பணிகளை, இந்தத் தொழில்நுட்பம் வெறும் 48 மணி நேரத்தில் முடித்துக் காட்டியுள்ளது. கனடாவின் சிஸ்கோ பகுதியில் அமைந்துள்ள பாறைகளுக்கு அடியில், சுமார் 36 கோடி டன் லித்தியம் தாதுக்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. எங்குத் தோண்டினால் கனிமம் கிடைக்கும் என்பதை இது துல்லியமாகக் காட்டுவதால், தேவையற்ற இடங்களில் பள்ளம் தோண்டி இயற்கையைச் சேதப்படுத்துவது தவிர்க்கப்படுகிறது.

ஏற்கனவே கியூபெக் மாகாணம் நீர்மின்சக்திக்குப் பெயர் பெற்றது. எனவே, இங்குச் சுரங்கம் அமைத்து லித்தியம் எடுக்கும்போது கரியமில வாயு வெளியேற்றம் மிகக் குறைவாகவே இருக்கும். இது எலக்ட்ரிக் வாகனங்களின் நோக்கமான 'பசுமைப் புரட்சிக்கு' மேலும் வலுசேர்ப்பதாக அமையும். உலக அளவில் எலக்ட்ரிக் கார்களுக்கும், சோலார் பேனல் பேட்டரிகளுக்கும் தேவை அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற தொழில்நுட்பங்கள் சுரங்கத் துறையின் காலதாமதத்தைக் குறைக்கின்றன. பொதுவாக ஒரு சுரங்கம் முழுமையாகச் செயல்பட 10 ஆண்டுகள் ஆகும் என்றால், இந்தத் தொழில்நுட்பம் அந்த நேரத்தைப் பாதியாகக் குறைக்கும் வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
இது சாம்பார் வடை அல்ல; சம்பார் வடை! - ஒரு சுவையான அறிமுகம்!
Lithium

தற்போதைய சூழலில் இது ஒரு கணிப்பு மட்டுமே என்றாலும், கனடாவின் சுரங்கத் துறைக்கு இது மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இனிவரும் காலங்களில், பூமியைத் துளைக்காமலே, அதற்கு அடியில் இருக்கும் வளங்களைக் கண்டறியும் இது போன்ற 'ஸ்மார்ட்' தொழில்நுட்பங்களே சுரங்கத் துறையின் எதிர்காலமாக இருக்கப்போகின்றன. 

இந்த 36 கோடி டன் லித்தியம் மட்டும் பயன்பாட்டுக்கு வந்தால், அது உலக எலக்ட்ரிக் வாகனச் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

logo
Kalki Online
kalkionline.com