

"சமைப்பது என்றாலே மணிக்கணக்கில் காய்கறி நறுக்க வேண்டும், மசாலா அரைக்க வேண்டும்" என்ற ஒரு தவறான பிம்பம் நம்மில் பலரிடம் உள்ளது. குறிப்பாக வேலைக்குச் செல்லும் அவசரத்தில் இருப்பவர்களுக்கும், தனியாக வசிக்கும் பேச்சுலர்களுக்கும், சமையல் செய்வது சில நேரங்களில் சவாலாகத் தோன்றலாம். பசி வரும்போது ஸ்விக்கியிலோ, ஜொமேட்டோவிலோ ஆர்டர் செய்து சாப்பிடுவது சுலபம் தான். ஆனால், அது உடலுக்கு ஆரோக்கியமானதா? நிச்சயம் இல்லை.
உங்கள் சமையலறையில் இருக்கும் மிகச் சாதாரணப் பொருட்களை வைத்தே, வெறும் 5 நிமிடங்களில் ருசியான சைவ உணவைச் சமைக்க முடியும்.
1. தாளித்த தயிர் சாதம்
உலகிலேயே மிகவும் எளிமையான, அதே சமயம் மனதிற்கு நிறைவைத் தரும் உணவு தயிர் சாதம் தான். இதைச் சரியாகச் செய்தால், பிரியாணியை விட ருசியாக இருக்கும்.
தேவையானவை: வடித்த சாதம் அல்லது மீதமான சாதம், கெட்டித் தயிர், பால் சிறிது, கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மாதுளை.
செய்முறை: சாதத்தை நன்கு கரண்டியால் மசித்துக்கொள்ளுங்கள். அதில் தயிர் மற்றும் சிறிது காய்ச்சிய பால் சேர்த்துத் தளர்வாகப் பிசையுங்கள். பால் சேர்ப்பது தயிர் சாதம் புளிக்காமல் இருக்க உதவும். இப்போது ஒரு சிறிய கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சாதத்தில் கொட்டுங்கள். கடைசியாகச் சிறிது மாதுளம் பழங்களை அல்லது திராட்சையை மேலே தூவினால், சாப்பிடும்போது இனிப்பும் காரமும் கலந்து சுவை அருமையாக இருக்கும்.
சமைக்க அடுப்பில் அதிக நேரம் நிற்க விரும்பாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
தேவையானவை: அவல் - 1 கப், வெங்காயம், கடுகு, உளுத்தம் பருப்பு, மஞ்சள் தூள், வேர்க்கடலை, எலுமிச்சை.
செய்முறை: அவலைத் தண்ணீரில் கழுவி, 2 நிமிடம் மட்டும் ஊற வைத்து நீரை வடித்துவிடுங்கள். அது மென்மையாகிவிடும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் மிளகாயை வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், ஊற வைத்த அவலைக் கொட்டி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் பிரட்டினால் சுவையான அவல் உப்புமா தயார்.
முட்டைக்கோஸ் அல்லது கேரட் வெட்ட நேரமில்லை என்றால், பன்னீர் தான் பெஸ்ட் சாய்ஸ். இது முட்டை பொரியலுக்கு இணையான சைவ மாற்று.
தேவையானவை: பன்னீர் - 100 கிராம் (துருவியது), வெங்காயம் - 1, தக்காளி - 1, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது இருந்தால் சிறிது சேர்க்கலாம். பிறகு மிளகாய் தூள், சிறிது கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும். மசாலா வாசனை போனதும், துருவி வைத்துள்ள பன்னீரைச் சேர்த்துக் கிளறவும். இரண்டு நிமிடத்தில் பன்னீர் வெந்துவிடும்.
மதியம் வடித்த சாதம் மீந்துவிட்டதா? அதை வீணாக்காமல் 5 நிமிடத்தில் புது உணவாக மாற்றலாம்.
தேவையானவை: சாதம், எலுமிச்சைப்பழம், மஞ்சள் தூள், கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை.
செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். பின்னர் அடுப்பை 'சிம்'மில் வைத்து மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் போடவும். உடனே சாதத்தைக் கொட்டிக் கிளறவும். அடுப்பை அணைத்த பிறகுதான் எலுமிச்சைச் சாறு மற்றும் உப்பு சேர்த்துக் கிளற வேண்டும்.
அடுப்பைப் பற்ற வைக்காமலே செய்யக்கூடிய ஒரு அருமையான காலை அல்லது மாலை உணவு.
தேவையானவை: பிரெட் துண்டுகள், வெண்ணெய், வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம், மிளகுத் தூள்.
செய்முறை: பிரெட் துண்டுகளின் ஒரு பக்கம் வெண்ணெய் தடவுங்கள். வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை மெல்லிய வட்ட வடிவத் துண்டுகளாக நறுக்கி பிரெட்டின் மேல் வையுங்கள். அதன் மேல் மிளகுத் தூள் மற்றும் உப்பு தூவுங்கள். மற்றொரு பிரெட் துண்டால் மூடி அப்படியே சாப்பிடலாம். அல்லது தோசைக்கல்லில் வைத்து டோஸ்ட் செய்தும் சாப்பிடலாம்.
பருப்பு வேக வைக்கத் தேவையில்லை. ரசப் பொடி தேவையில்லை. 5 நிமிடத்தில் ஜீரண சக்தி தரும் ரசம் ரெடி.
தேவையானவை: தக்காளி - 1, புளி தண்ணீர், பூண்டு, மிளகு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய்.
செய்முறை: தக்காளியை மிக்ஸியில் அடிக்காமல், கைகளால் நன்கு கரைத்து, புளித் தண்ணீருடன் சேர்த்துக்கொள்ளுங்கள். பூண்டு, மிளகு, சீரகத்தை உரலில் இடித்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், இடித்த மசாலாவைத் தாளித்து, தக்காளித் தண்ணீரைக் கொட்டுங்கள். உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேருங்கள். நுரைத்துக்கொண்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடுங்கள்.
தேங்காய் திருகக் கூட நேரமில்லையா? இதோ மிக்ஸியில் 1 நிமிடத்தில் அரைக்கக்கூடிய சட்னி.
தேவையானவை: பொட்டுக்கடலை - அரை கப், பூண்டு - 2 பற்கள், பச்சை மிளகாய் - 2, உப்பு.
செய்முறை: மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நைஸாக அரைக்கவும். தேவைப்பட்டால் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக் கொட்டலாம். தாளிக்காமலும் சாப்பிடலாம்.
தேவையானவை: பாசுமதி அரிசி சாதம், நெய், சீரகம், முந்திரி , பச்சை மிளகாய்.
செய்முறை: வாணலியில் தாராளமாக நெய் ஊற்றுங்கள். நெய் காய்ந்ததும் சீரகம் போடுங்கள். சீரகம் பொரிந்ததும், கீறிய பச்சை மிளகாய் மற்றும் முந்திரியைச் சேர்த்து வறுக்கவும். பின்னர் உதிரியாக வடித்த சாதத்தைக் கொட்டி, தேவையான உப்பு சேர்த்து லேசாகக் கிளறவும். அரிசி உடையாமல் கிளற வேண்டும்.
தேவையானவை: பொரி - 2 கப், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேங்காய் எண்ணெய், பூண்டு சிறிதளவு.
செய்முறை: வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, தோலோடு தட்டிய பூண்டு, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, கறிவேப்பிலை ஆகியவற்றை வறுக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, அந்தச் சூட்டிலேயே மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போடுங்கள். உடனே பொரியைக் கொட்டிக் கிளறுங்கள்.
தேவையானவை: வாழைப்பழம் - 2, பால் - 1 கப், தேன் அல்லது சர்க்கரை, ஏலக்காய்.
செய்முறை: மிக்ஸி ஜாரில் தோல் உரித்த வாழைப்பழம், காய்ச்சிய பால், இனிப்புக்குத் தேவையான தேன் சேர்த்து நன்கு நைஸாக அரைக்கவும். தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம். ஜிம் செல்பவர்களுக்கு அல்லது காலையில் அவசரமாகக் கிளம்பும் மாணவர்களுக்கு இது மிகச்சிறந்த காலை உணவு. பசியைத் தாங்கும்.
மேலே சொன்ன 10 ரெசிபிக்களும் செய்வதற்கு மிக எளிமையானவை மட்டுமல்ல, ருசியானவையும்கூட. "நேரமில்லை" என்று காரணம் சொல்லித் துரித உணவுகளைசாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு, சமையலறைக்குச் சென்று இவற்றில் ஒன்றை முயற்சித்துப் பாருங்கள்.