
ஒரு கிரகம் முழுக்க தங்கமும் பிளாட்டினமும் கொட்டிக் கிடந்தால் எப்படி இருக்கும்? அந்த கிரகத்தை கைப்பற்றுவதன் மூலம் உலகின் பெரும் செல்வத்தினை அடைய முடியும். அப்படிப்பட்ட ஒரு கிரகத்தைதான் வானியல் ஆய்வாளர்கள் நூற்றாண்டு காலமாக தேடிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் ஆச்சரியமான ஒரு விஷயம் என்னவென்றால் அப்படிப்பட்ட ஒரு கிரகத்தை கண்டுபிடித்து ஒன்றரை நூற்றாண்டுகள் ஆகின்றது. பிறகு இன்னும் ஏன் அந்த கிரகத்தினை மனிதர்கள் விட்டு வைத்தார்கள்? என்று யோசனை தோன்றலாம். மற்ற கிரகங்களில் அடையும் தொழில்நுட்பத்தில் சர்வதேச நாடுகள் இன்னும் ஆரம்ப காலகட்டத்தில்தான் உள்ளன. அவர்கள் முன்னேற இன்னும் பல தசாப்த காலங்கள் ஆகலாம்.
தங்கமும் பிளாட்டினமும் உறைந்து கிடக்கும் இந்த கிரகத்தை மார்ச் 17, 1852 அன்று இத்தாலிய வானியலாளர் அன்னிபேல் டி காஸ்பாரிஸ் என்பவர் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்த காலத்தில் அதிக அளவு தங்கம் இருப்பதாக கண்டறியப்படவில்லை. தற்போது மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஞ்ஞானிகள் இந்த
சிறு கோள் முழுக்க தங்கம், பிளாட்டினம், இரும்பு, நிக்கல் போன்ற உலோகங்கள் அளவுக்கு அதிகமான அளவில் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்த கிரகத்திற்கு 16 சைக் என்று பெயரிட்டுள்ளனர். 16 சைக் கிரகத்தில் ஏராளமான விலை உயர்ந்த தனிமங்கள் உள்ளன. விஞ்ஞானிகள் சிலர் இதை தங்கக்கிரகம் என்று அழைக்கின்றனர்.
இது சூரியனைச் சுற்றி வரும் ஒரு சிறிய கிரகமாகும். இந்த கிரகம் ஒரு முறை சூரியனை சுற்றிவர 5 ஆண்டுகள் ஆகிறது. 16 சைக் கிரகத்தின் மேல் பகுதி தங்கம் மற்றும் பிளாட்டினத்தினால் ஆனது. அதன் மையப்பகுதி முதன்மையாக நிக்கல் மற்றும் இரும்பினால் ஆனது. 16 சைக் கிரகத்தில் ஏராளமான விலைமதிப்பற்ற உலோகங்கள் உள்ளதால் அவற்றை பூமிக்குக் கொண்டு வந்தால் பெரும் செல்வத்தினை அள்ளி விடலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த சிறு கோளில் 100,000,000,000 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் உள்ளது. இதில் எடுக்கப்படும் உலோகங்களை பூமியில் உள்ள 800 கோடி மக்களுக்கு பிரித்து கொடுத்தால் அனைவரும் கோடிஸ்வரர் ஆக முடியும் என்று சொல்கின்றனர். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி அங்குள்ள தங்கத்தை எடுத்து வந்து அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தால் ஒவ்வொரு நபரும் சுமார் ₹763 பில்லியன் செல்வத்தைப் பெற முடியும் என்று கூறுகிறார்கள்.
நாசாவின் சைக் மிஷன்:
அக்டோபர் 13, 2023 அன்று 16 சைக் கிரகத்தை ஆராய நாசா ஒரு சிறப்புப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பணி 16 சைக்கின் அமைப்பு மற்றும் அதில் உள்ள உலோகப் படிவுகள் குறித்து ஆழமான ஆய்வை மேற்கொள்ளும். இந்தப் பயணத்தின் கீழ், நாசாவின் விண்கலம் ஜூலை 2029 க்குள் 16 சைக்கின் சுற்றுப்பாதையை அடையும். இந்தப் பயணத்தின் நோக்கம் சைக்கில் உள்ள உலோகங்களின் அளவு, அவற்றின் அமைப்பு மற்றும் அவற்றின் பயன்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்வதாகும்.
இந்த கோளினால் இவ்வளவு நன்மை இருக்கிறதா என்று நினைக்கலாம். ஆனால், இது பொருளாதார ரீதியில் பார்த்தால் வேறு மாதிரி மாறும். முதலில் அந்த கிரகத்தில் இருந்து தங்கத்தை டன் கணக்கில் வெட்டி எடுத்து பூமிக்கு கொண்டு வர பல நூற்றாண்டுகள் ஆகலாம். அப்படியே கொண்டு வந்தாலும் அளவுக்கு அதிகமாக பொருள், பொருளாதாரத்தில் அதன் மதிப்பை முற்றிலும் இழந்து விடும். அனைவரிடமும் 500கிராம் தங்கம் இருந்தாலே அதன் மதிப்பு கவரிங்கிற்கும் கீழே சென்றுவிடும்.