3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் ரோபோக்கள் கட்டிய அஞ்சலகம்!

A post office built by robots using 3D print technology.
A post office built by robots using 3D print technology.
கிரி கணபதி

கிரி கணபதி, 8 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட எழுத்தாளர். Quora போன்ற தளங்களில் எழுதிய அனுபவம் உண்டு.. வீடியோ, பாட்காஸ்ட் வெளியிட்ட அனுபவமும், AI கருவிகளை கையாளும் திறனும் கொண்டவர். ஆரோக்கியம், தன்னம்பிக்கை, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வுப்பூர்வமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

பெங்களூருவில் முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் தபால் நிலையக் கட்டிடத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று திறந்து வைத்தார். 

கொரோனாவுக்குப் பிறகு உலகம் முழுவதும் கட்டிடம் கட்டுவதற்கான செலவுகள் எக்கச்சக்கமாக கூடிவிட்டது. செலவுகளைக் குறைப்பதற்கு மக்கள் பல வழிமுறைகளை பின்பற்றி வந்தாலும், தொழில்நுட்பமும் தன்னால் முடிந்த உதவியை 3D பிரிண்டிங் மூலம் செய்துள்ளது. இந்தியாவில் பாரம்பரிய கட்டிட முறை என்றால் செங்கல் சிமெண்ட் மற்றும் சில மூலப் பொருட்களை பயன்படுத்தி கட்டப்படும் கட்டிடங்கள் தான். 

இதற்கு அப்படியே மாற்றாக முழுக்க முழுக்க ரோபோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் 3D பிரிண்ட் முறையில் அஞ்சல் அலுவலகம் கட்டப்பட்டு பெங்களூருவில் திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தை சென்னை ஐஐடி வழிகாட்டுதலின் கீழ், பிரபல லார்சன் & டூப்ரோ லிமிடெட் நிறுவனம் உருவாக்கியுள்ளது. பெங்களூருவில் அமைந்துள்ள இந்த கட்டிடம் 1021 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 

இந்தியாவிலேயே முதல் 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தால் கட்டப்பட்ட தபால் நிலைய கட்டிடத்தை நேற்று வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கோலாகலமாகத் திறந்து வைத்தார். அங்கே அவர் பேசியதாவது, " நம்முடைய வளர்ச்சியை நோக்கிய ஆர்வம், நமது நாட்டின் சொந்த தொழில்நுட்பத்தை உருவாக்கும் மனப்பான்மை, சாத்தியமில்லாத ஒன்றை செய்து காட்டும் மனப்பான்மை ஆகியவற்றால் இந்தக் கட்டிடம் தற்போது சாத்தியமாகியுள்ளது. 

இந்தக் கட்டுமானமுறை முற்றிலும் புதுமையான 3D கான்கிரீட் பிரின்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முழுவதும் தானியங்கி முறையில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடம் ஆகும். இந்தத் தொழில்நுட்பத்தில் ஒரு ரோபோடிக் பிரிண்டர் ஒவ்வொரு அடுக்காக கான்கிரீட்டுகளை டெபாசிட் செய்து கட்டிடத்திற்கான வடிவமைப்பைக் கொடுக்கிறது. ஒவ்வொரு அடுக்குகளும் உறுதியாக இருப்பதற்கு விரைவாகக் காயக்கூடிய கான்கிரீட் இதில் பயன்படுத்தப்படுகிறது".  என இதைப்பற்றி அவர் விவரமாக விவரித்தார். 

இந்தத் தொழில்நுட்பம் ஏற்கனவே வெளிநாடுகளில் பிரபலமாக இருந்தாலும். இனிவரும் காலங்களில் இந்தியாவில் இது பயன்படுத்தப்பட்டால், கட்டுமானத்துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.