தற்போதைய காலத்தில் இருந்து 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதனுக்கு இந்த தனித் திறன் இருந்தது. பிற்காலத்தில் அந்த தனித் திறன் அழிந்து போனது. ஆயினும் அரிதாக மனிதர்களில் சிலர் இந்த திறனை பெற்றுள்ளனர். சிங்கம், புலி , ஆடு, மாடு, யானை, நாய், பூனை குதிரை போன்ற விலங்குகள் ஏதேனும் சப்தம் கேட்டால் உடனடியாகக் காதுகளை அசைக்கும். வீட்டுப் பிராணிகளான ஆடு, மாடு, நாய், பூனை ஆகியவை காது அசைப்பதை நாம் பார்த்திருப்போம். மனிதர்களும் இது போல காதினை அசைக்க முடியுமா? மனிதர்களால் பெரும்பாலும் இதை செய்ய முடியாது என்று நாம் அறிவோம்.
அறிவியலின் படி, மனிதனின் மூதாதையர்களால் தங்கள் காதுகளை அசைக்க முடியும். தற்போது ஒரு புதிய ஆராய்ச்சி முடிவின்படி, 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களின் மூதாதையர்கள் தங்கள் காதுகளை அசைக்கும் சக்தியை பெற்றிருந்தனர் என்று கண்டுபிடித்துள்ளனர். ஆனால், இந்த சக்தியை பெரும்பாலான மனிதர்கள் முற்றிலும் இழந்து விட்டார்கள். எவ்வளவு முயன்றாலும் காதினை தன்னிச்சையாக அசைக்கவே ஆட்டவோ முடியாது. ஆனாலும் சுமார் 10 - 20 சதவீத மக்களிடம் இன்னும் இந்த காதினை அசைக்கும் சக்தி உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஜெர்மனியின் சார்லாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் மனிதர்களின் கேட்கும் திறன்களை பற்றி ஆய்வு செய்தனர். இதற்காக இவர்கள் எலக்ட்ரோமோகிராபி என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர். இந்த நுட்பத்தின் மூலம், மனிதர்களின் காதில் உள்ள தசை செயல்பாடுகள் அளவிடப்படுகின்றன. ஆய்வின் போது 20 பேருக்கு ஆடியோ புக்குகள் மற்றும் கவனத்தை சிதறடிக்கும் பாட்காஸ்ட்கள் வாசிக்கப்பட்டன. ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு கடினமான ஒலி எழுப்பப்பட்டபோது, அவர்களின் காதுகளில் உள்ள செயலற்ற தசைகள் சற்று சுறுசுறுப்பாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஆய்வில் பங்கேற்ற அனைத்து வயதுவந்தோரின் காதுகளிலும் மின்முனைகள் பொருத்தப்பட்டு காதுகளை நகர்த்தும் தசைகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதைக் ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தனர்.
காதினை அசைக்க மண்டை ஓடு தோலுடன் இணைக்கும் பகுதியில், நகர்த்தும் மூன்று முக்கிய தசைகள் உடலில் இன்னும் இருப்பதால் மனிதர்கள் காதினை அசைப்பது சாத்தியமாகிறது.
அதிக இரைச்சல் கேட்கும் போது எல்லாம் காதில் மறைந்திருக்கும் இந்த தசைகள் கடினமாக வேலை செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு நமது காதுகளில் உள்ள தசைகள் வேலை செய்கின்றன. உதாரணத்திற்கு அமைதியான உணவகத்தில் யாராவது சொல்வதை நாம் எளிதில் கேட்கலாம். ஆனால், சத்தம் நிறைந்த உணவகத்தில் மற்றவர்கள் சொல்வதை கேட்க முயற்சி செய்யும் போது காதின் தசைகள் கூர்ந்து கவனிக்க வேலை செய்கின்றன.
விலங்குகளுக்கு காதுகளின் இயக்கம் மிகவும் முக்கியமானது. இது ஒரு குறிப்பிட்ட ஒலியில் கவனம் செலுத்த உதவுகிறது. விலங்குகள் வாழ்க்கைக்கும் ஒலியினை கூர்ந்து கவனிப்பது மிகவும் அவசியமாகிறது. அவை வேட்டையாடவும் மற்ற விலங்குகளால் ஆபத்து வருவதை உணரவும் காதின் கூர்மையான கேட்கும் திறன் அவசியமாகிறது. மனிதர்கள் சிலரிடம் இந்த கூர்ந்து கேட்கும் ஆற்றல் உள்ளது. அவர்களுக்கு காதுகளின் தசைகள் நன்கு இயங்குகிறது. இது பற்றி பெரிய அளவில் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர். ஆராய்ச்சியில் இழந்ததை கண்டுபிடிக்க முடியுமே தவிர, பரிணாம வளர்ச்சியில் நாம் இழந்த காது அசைக்கும் திறனை மீண்டும் பெற முடியாது.