

அமிலம் என்றாலே அனைவருக்கும் அமில வீச்சு என்பது தான் ஞாபகத்திற்கு வரும். நம் வாழ்க்கையில் அன்றாட தேவைகளில் அமில பயன்பாடு உண்டு. மற்றும் தொழிற்சாலைகளிலும் அமில பயன்பாடு இருக்கிறது. அவை நம் வாழ்க்கையில் எப்படி பயன்படுகின்றன என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் பல அமிலங்கள் அடங்கியிருக்கின்றன. நம் உடல்நலனுக்கு அவை மிகவும் அத்தியாவசியமானவை மற்றும் சில அமிலங்கள் வேறு வழிகளில் நமக்கு பணிபுரிகின்றன. மருந்துகள், வர்ணங்கள், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பதற்கும் பயன்படுகின்றன. அமிலங்களில் உயிர்பொருட்கள் சம்பந்தப்பட்டவை, உயிர் பொருட்கள் சம்பந்தப்படாதவை என்று இரண்டு உண்டு.
உயிர்ப் பொருள் சம்பந்தப்பட்ட அமிலங்கள்:
திராட்சையை புளிக்க வைத்து மதுபானம் தயாரிப்பதில் அமிலங்கள் வேலை செய்கின்றன . இதற்கு அசிட்டிக் அமிலம் தேவைப்படுகிறது. நாம் அருந்தும் சோடா பானங்களிலும் அமிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கரியமில வாயுவில் இருந்து கார்போனிக் அமிலத்தை தயாரித்து சோடா பானங்களில் சிறிதளவு சேர்க்கப்படுகிறது. இது உயிரற்ற ஒன்றிலிருந்து தயாரிக்கப்படும் அமிலம் ஆகும்.
ஆப்பிளில் இருந்து மதுவை புளிக்க வைத்து தயாரிப்பதற்கும் லாக்டிக் அமிலம் பயன்படுகிறது. வெல்லத்தை பாலில் புளிக்க வைத்தால் லாக்டிக் அமிலம் கிடைக்கிறது. அதுதான் பாலையும் புளிக்க வைக்கிறது. பாலாடைக் கட்டியைத் தயாரிக்கவும் லாக்டிக் அமிலத்தை உபயோகிக்கிறார்கள்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு அமினோ அமிலங்கள் பயன்படுகின்றன. அவை புரத உணவுகளில் இருந்தும் கிடைக்கின்றன. ஆரஞ்சுப் பழங்கள், எலுமிச்சைப் பழங்கள் ஆகியவற்றில் அஸ்கார்பிக் அமிலம் அடங்கியிருக்கிறது. விட்டமின் சி ஊட்டச்சத்துக்கு இதுவே வேதியியல் சம்பந்தமான பெயர்.
உயிர்ப் பொருள் சம்பந்தப்படாதவை:
ஹைட்ரோ குளோரிக் அமிலம் மிகவும் வீரியம் உள்ளது. அதை கந்தக அமிலத்தில் இருந்தும், உணவு தயாரிப்பதற்கான சாதாரண உப்பிலிருந்தும் தயாரிக்கிறார்கள். மற்ற ரசாயன பொருட்களை உற்பத்தி செய்யவும், உலோகங்களை சுத்தம் செய்யவும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் பயன்படுகிறது.
நமது உடலும் சிறிதளவு வீரியமற்ற ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை தயாரிக்கிறது. இந்த அமிலம் நமது உணவு ஜீரணமாவதற்கு உதவி புரிகிறது. கந்தக அமிலம் தொழிற்சாலைகளின் உற்பத்தி பொருட்களுக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. அவை நமது கண்களுக்கும், தோலுக்கும் பெரும் தீங்கை விளைவிக்கும் என்றாலும் அதை தேவையான அளவு பயன்படுத்தி நன்மையாக மாற்றலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
நைட்ரிக் அமிலம்: பீங்கான் பொருட்கள், சிமெண்ட், சாயப் பொருட்கள், அழகு சாதனங்கள் தயாரிப்பதற்கும், கிருமிகளை அழிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. இந்த அமிலமும் மிகவும் வீரியம் உள்ளது. இது நமது கண்களுக்கும் உடலுக்கும் தீங்கிழைக்கும். ஆதலால் மிகவும் கவனத்துடன் இதை பயன்படுத்தி வருகிறார்கள்.