அமெரிக்க ஜனாதிபதி ஜொ பைடன் 2025 ஜனவரி 4ம் தேதி, 19 சாதனையாளர்களுக்கு 'ப்ரெஸிடென்ஷியல் மெடல் அஃப் ஃப்ரீடம்' என்ற உயரிய விருதை வழங்கினார்.
இதில், விண்வெளி ஆர்வலர்களும் குழந்தைகளும் அறிவியல் பற்றி அறியத் துடிப்போரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தது ‘ஸயின்ஸ் ஆள் - ஸயின்ஸ் கை (Science Guy) என்று உலகெங்கும் அறியப்படும் பில் நை (Bill Nye - வயது 79) இந்த விருதை வாங்கியதில்தான்.
அமெரிக்காவில் அறிவியலை அனைவரிடமும் குறிப்பாகக் குழந்தைகளிடம் பரப்பி வருபவர் இவர். 'பல தலைமுறைகளுக்கு அறிவியல் ஆர்வத்தை ஊட்டியவர்' என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட ஒரு அறிக்கை இவரைப் பாராட்டுகிறது.
ப்ளானிடரி சொஸைடி என்ற நிறுவனத்திற்கு தலைமை அதிகாரியாக இருக்கும் இவர், விண்வெளி பற்றிய ஆராய்ச்சிக்கும் சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் பாடுபட்டு வருபவர்.
செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட் ஹிலாரி க்ளிண்டன், பேஸ்கட்பால் பிரபலம் எர்வின் ‘மாஜிக்’ ஜான்ஸன், உலகெங்கும் உள்ள வளத்தைப் பாதுகாக்கும் ஆர்வலரான ஜேன் குடால், பிரபல நடிகரான டென்ஸல் வாஷிங்டன் உள்ளிட்ட 19 அமெரிக்கர்களுக்கு அவர்களது சாதனையை மெச்சி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
பல லட்சம் அமெரிக்க குழந்தைகளுக்கு தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாக அறிவியல் ஆர்வத்தை ஊட்டி விண்வெளி பற்றிய செய்திகளைப் பல வருடங்களாக வழங்கிப் பாராட்டைப் பெற்றவர் பில் நை. செல்லமாக ‘அறிவியல் ஆளு’ என்று அறியப்படும் இவர், சியாட்டில் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட ‘அல்மோஸ்ட் லைவ்’ (Almost Live) என்ற தொடரால் பிரபலமானார். நெட்ஃப்ளிக்ஸில், பில் நை சேவ்ஸ் தி வோர்ல்ட் என்ற இவரது சீரியலும் பிரபலமான ஒன்று.
சியாட்டில் காமடியனான புகழ் பெற்ற ஜான் கெய்ஸ்டரை ஒரு நிகழ்ச்சியில் gigawattஐ Jiggawatt என்று அவர் உச்சரிக்க பில் அதை சுட்டிக்காட்டி சரியாக உச்சரிக்க, “நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய் ஸயின்ஸ் கை” என்றார் கெய்ஸ்டர். அன்றிலிருந்து இந்த ‘ஸயின்ஸ் கை’ பெயர் பிரபலமாகி விட்டது.
1977ல் கார்னெல் பல்கலைக்கழகத்தில் மெகானிகல் எஞ்ஜினியரிங்கில் பட்டம் பெற்ற இவர் போயிங் விமானக் கம்பெனியில் ஹைட்ராலிக்ஸ் சிஸ்டம் அமைப்பதில் வல்லுநரானார். பின்னர் அறிவியல் விஷயங்களைச் சுவைபடத் தொகுத்து வழங்குவதில் நிபுணரானார்.
19 எம்மி விருதுகளை இவர் பெற்றது ஒன்றே அறிவியலில் இவருக்குள்ள ஆர்வத்தையும் திறமையையும் காட்டும்.
எந்தக் கேள்வி கேட்டாலும் இதோ பதில் என்று இவர் பதிலை நகைச்சுவையுடனும் சுவையான விளக்கங்களுடனும் தந்ததால் இவர் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கென்றே ஒரு பெரும் தொலைக்காட்சி பார்வையாளர் குழு உருவானது. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் ஸ்டாண்ட் அப் காமடி இவருக்குள்ள ஒரு தனித் திறமையாகும்.
பல புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.
நம்ம 'ஸயின்ஸ் ஆளுக்கு' பாராட்டுகள்!