உங்கள் பகுதியில் அமோனியா வாயு கசிந்தால் இந்தத் தவறை மட்டும் செய்யாதீர்கள்!

திருவள்ளூர் தொழிற்சாலையில் 5 உயிர்களைப் பறித்த ஆபத்தான அமோனியா வாயு கசிவால் ஏற்படும் பயங்கர பாதிப்புகள் மற்றும் தற்காத்துக்கொள்ள உதவும் முக்கிய முதலுதவி குறிப்புகள்.
Ammonia gas leak
Ammonia gas leak
Updated on

சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் நடந்த ஒரு துயரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்குள்ள ஒரு தனியார் கடல் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கரமான அமோனியா வாயு கசிவால் 5 தொழிலாளர்கள் பரிதாபமாகத் தங்கள் உயிரை இழந்துள்ளனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுத் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பல மணி நேரம் போராடி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொழிற்சாலைகளில் ஐஸ் கட்டிகளைத் தயாரிக்கப் பயன்படும் இந்த ரசாயனம், மனிதர்களின் உயிரைக் குடிக்கும் எமனாக மாறுவது எப்படி மற்றும் இதிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Ammonia gas leak
Ammonia gas leak

அமோனியா வாயு ஏற்படுத்தும் பயங்கர பாதிப்புகள்!

பொதுவாக இந்த அமோனியா வாயு காற்றில் அதிக அளவில் பரவினால், அது மனிதர்களின் சுவாச மண்டலத்தை உடனடியாகச் சிதைத்துவிடும். இது காற்றில் கசிந்த சில நொடிகளிலேயே கண்கள், தொண்டை மற்றும் நுரையீரலில் கடுமையான எரிச்சலையும் ஆறாத புண்களையும் உண்டாக்கும். தோலில் ஆசிட் பட்டது போலப் பெரிய கொப்புளங்கள் தோன்றும். இதனைத் தொடர்ந்து சுவாசிக்கும் போது தொண்டை பகுதி முழுமையாக வீங்கிச் சுருங்கிவிடும். 

இதனால் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் மனிதர்கள் மூச்சுத் திணறி இறக்க நேரிடும். இதில் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்தவர்களுக்கும் கூட எதிர்காலத்தில் நாள்பட்ட ஆஸ்துமா, நுரையீரல் செயலிழப்பு போன்ற வாழ்நாள் முழுவதுமான சவாலான பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

அமோனியா வாயு கசிந்தால் செய்ய வேண்டிய முதலுதவி!

விஷத்தன்மை கொண்ட இந்த அமோனியா வாயு உடலுக்குள் சென்றால், அதை முறிக்க மருத்துவ உலகில் இதுவரை தனிப்பட்ட மாற்று மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. உடலில் ஏறிய விஷத்தை வெளியேற்றிவிட்டு, நோயாளியின் அறிகுறிக்கு ஏற்ப வெண்டிலேட்டர் போன்ற ஆதரவு சிகிச்சைகளை மட்டுமே மருத்துவர்கள் அளிப்பார்கள். 

இதையும் படியுங்கள்:
அனுபவச் சுவடுகள் - 23 விமானப் பயணமும் வீட்டுக்கு வரும் தந்தியும்!
Ammonia gas leak

ஒருவேளை நீங்கள் இருக்கும் பகுதியில் இது போன்ற வாயுக்கசிவு ஏற்பட்டால், முதலில் நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை உடனடியாகக் கழற்றி எறிய வேண்டும். ஆடைகளைத் தலை வழியாகக் கழற்றக் கூடாது, அப்படிச் செய்தால் துணியில் உள்ள விஷம் கண்கள் மற்றும் வாயில் நேரடியாகப் படும். உடனே வெதுவெதுப்பான தண்ணீரைக் கொண்டு சோப்புப் போட்டு உடல் முழுவதையும் நன்றாகக் கழுவ வேண்டும்.

அமோனியா வாயு எதற்காகப் பயன்படுகிறது!

இவ்வளவு ஆபத்தான அமோனியா வாயு எதற்காகத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். விவசாயத்திற்குத் தேவையான உரங்கள் தயாரிப்பது முதல் பிளாஸ்டிக், வெடிபொருட்கள் மற்றும் வீட்டைச் சுத்தம் செய்யும் பினாயில் போன்ற திரவங்கள் தயாரிப்பது வரை அனைத்திற்கும் இதுவே முக்கிய மூலப்பொருளாகும். 

குறிப்பாக மீன் மற்றும் இறால் போன்ற கடல் உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்க, அவற்றை உறைநிலையில் வைக்கும் பெரிய குளிர்பதனக் கிடங்குகளில் இது பயன்படுத்தப்படுகிறது. கடந்த காலங்களில் உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகளிலும் இதேபோல வாயுக்கசிவு ஏற்பட்டுப் பல உயிர்கள் பறிபோயின.

இதையும் படியுங்கள்:
உடனுக்குடன் சூடா கிடைக்கும் உணவு... ஆனால் அதில் ஒளிந்திருக்கும் நோய்கள்! - உஷார் மக்களே!
Ammonia gas leak

மனிதர்களின் வாழ்வாதாரத்திற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ரசாயனங்கள் பல நேரங்களில் மனித இனத்திற்கே மாபெரும் எமனாக மாறிவிடுகின்றன. தொழிற்சாலைகளை நடத்தும் நிர்வாகத்தினர் முறையான பாதுகாப்பு உபகரணங்களைத் தொழிலாளர்களுக்கு வழங்கி, எரிவாயு குழாய்களைத் தொடர்ந்து பராமரிப்பது மட்டுமே இது போன்ற கோர விபத்துகளைத் தடுக்கும் ஒரே வழியாகும். 

ஆபத்தான ரசாயனங்கள் பற்றிய விழிப்புணர்வை நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com