

"தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்" என்கிறது திருக்குறள்.
கோபம் என்பது மனித உடலின் இயல்பான உணர்ச்சி. ஆனால், அந்த கோபம் ஏற்படும்போது மூளையில் நிகழும் நரம்பியல் (Neurological) மாற்றங்களும், வேதியியல் வினைகளுமே அதற்குக் காரணமாகிறது. அது எப்படி வினைபுரிகிறது என்பதைப் பற்றியும், அடிக்கடி மற்றும் அதிக அளவில் கோபப்படுவது மூளை மற்றும் இதயத்தின் செயல்பாடுகளைப் படிப்படியாகப் பாதித்து, பல கடுமையான நீண்டகால ஆரோக்கியச் சிக்கல்களுக்கு எப்படி வழிவகுக்கிறது என்பதைப் பற்றியும் இப்பதிவில் காண்போம்.
கோபத்தின் ஆபத்துகள்:
யாராவது எதையாவது பேசிவிட்டாலோ, பிடிக்காததை செய்து விட்டாலோ மூளையின் உணர்ச்சி மையமான அமிஜ்தலா என்பது, ஆபத்து அல்லது அச்சுறுத்தலை உணர்ந்தவுடன் உடனடியாகச் செயல்படத் தொடங்குகிறது. அப்பொழுது இது யோசிப்பதற்கு நேரத்தைக் கொடுக்காமல், உடனடியாகக் கோபம் அல்லது பய உணர்வைத்தூண்டி உடலைத் தயார்படுத்துகிறது.
ப்ரீஃப்ரொன்டல் கார்டெக்ஸ் தர்க்க மையம்:
ப்ரீஃப்ரெண்டல் கார்டெக்ஸ் என்பது மூளையின் முன்பகுதியில் உள்ள யோசிக்கும்/தர்க்க ரீதியான பகுதி (Logical Brain) ஆகும். கோபம் வரும்போது, அமிஜ்தலா அதிக ஆற்றலை எடுத்துக்கொள்வதால், ப்ரீஃப்ரொன்டல் கார்டெக்ஸின் செயல்பாடு தற்காலிகமாகக் குறைகிறது. இதனால்தான் கோபத்தில் சரியான முடிவு எடுக்க முடிவதில்லை.
ஹார்மோன் பெருக்கம்:
அமிஜ்தலா தூண்டப்படும்போது, உடலின் அட்ரினல் சுரப்பி அட்ரினலின் (Adrenaline) மற்றும் கார்டிசோல் (Cortisol) ஆகிய மனஅழுத்த ஹார்மோன்கள் ரத்தத்தில் கலக்கிறது.இதனால் இதயத் துடிப்பு அதிகரித்து , ரத்த அழுத்தம் உயர்ந்து, தசை நார்கள் இறுகுகிறது.
நரம்பு வழிகாட்டிகள்:
செரடோனின் (Serotonin): இப்பொழுது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் வேதிப்பொருளான செரடோனின் அளவு குறையும் போது கோபம் விரைவாக வெளிப்படுகிறது .
டோபமைன் (Dopamine): அந்த கோபத்தின்போது உடனடி எதிர்வினை ஆற்றத் தூண்டுகிறது.
அமிஜ்தலாவின் உடனடி உணர்ச்சித்தூண்டல் ப்ரீஃப்ரொன்டல் கார்டெக்ஸின் தர்க்கரீதியான சிந்தனையைக் கட்டுப்படுத்துவதால் கோபத்தின்போது மூளையின் நிதானம் இழக்கப்படுகிறது. அப்படி இழக்கப்படுவதால் மூளைக்கு பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அந்தப் பாதிப்புகள் என்னென்ன? அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள இதோ:
மூளைக்கு ஏற்படும் பாதிப்புகள்:
நினைவாற்றல் குறைதல் (Hippocampus Damage): கோபத்தின்போது சுரக்கும் கார்டிசோல் (Cortisol) என்ற மன அழுத்த ஹார்மோன் மூளையின் நினைவாற்றல் மையமான 'ஹிப்போகாம்பஸ்' பகுதியில் உள்ள நரம்புச் செல்களைப் பாதிக்கிறது. இதனால் கவனச்சிதறல், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் சிரமம் மற்றும் நினைவாற்றல் இழப்பு ஏற்படும்.
பக்கவாதம் (Brain Stroke): கோபப்படும்போது மூளையின் ரத்த நாளங்களில் அழுத்தம் திடீரென அதிகரிக்கும். இது ரத்தக் குழாய்களில் வெடிப்பையோ அல்லது ரத்த உறைவையோ (Blood Clots) ஏற்படுத்தி பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்.
முடிவெடுக்கும் திறன் இழப்பு: மூளையின் முன்பகுதியான ப்ரீஃப்ரொன்டல் கார்டெக்ஸ் (Prefrontal Cortex) செயலிழந்து, நிதானமாக யோசிக்கும் மற்றும் தர்க்கரீதியாக முடிவெடுக்கும் திறனை நிரந்தரமாகப் பலவீனப்படுத்தும்.
மன அழுத்தம் மற்றும் பதற்றம் (Anxiety & Depression): தொடர்ச்சியான கோபம் மூளையில் உள்ள செரடோனின் (Serotonin) போன்ற மகிழ்ச்சித் தரும் வேதிப்பொருட்களின் அளவைக்குறைத்து, மனச்சோர்வு மற்றும் தீவிர பய உணர்வை உண்டாக்கும்.
இதயத்திற்கு ஏற்படும் பாதிப்புகள்:
உயர் ரத்த அழுத்தம் (Hypertension): அடிக்கடி கோபப்படும் போது சுரக்கும் அட்ரினலின் ஹார்மோன் ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து, இதயத்துடிப்பையும் ரத்த அழுத்தத்தையும் நிரந்தரமாக உயர்த்திவிடும்.
மாரடைப்பு (Heart Attack): கோபப்பட்ட 2 மணி நேரத்திற்குள் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 5 மடங்கு அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. தொடர் கோபம் இதய ரத்த நாளங்களில் அடைப்பை (Plaque buildup) வேகப்படுத்தும்.
சீற்றமற்ற இதயத் துடிப்பு (Arrhythmia): கோபம் இதயத்தின் மின் சமநிலையைப் பாதித்து, இதயம் சீரற்ற முறையில் வேகமாகக் துடிப்பதற்கு (Irregular heartbeat) வழிவகுக்கும்.
இதயச் தசைகள் பலவீனமடைதல்: நீண்டகால மன அழுத்தமும் கோபமும் இதயத்திற்குப் போதுமான ஆக்சிஜன் செல்வதைத் தடுத்து, இதயச் தசைகளைப் பலவீனப்படுத்தி 'இதய செயலிழப்பு' (Heart Failure) அபாயத்தை அதிகரிக்கும்.
இப்படி கோபம் அதிகரிப்பதால் நம் உடலில் மாற்றம் ஏற்பட்டு நம்மை நிலைகுலைய வைத்துவிடுகிறது என்கிறது அறிவியல்.
ஆதாரம்: தொடர்ச்சியான கோபத்தால் சுரக்கும் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் ஹார்மோன்கள் மூளையின் நரம்புச் செல்களைச் சிதைப்பதுடன், இதய ரத்த நாளங்களைச் சுருக்கி மாரடைப்பு மற்றும் பக்கவாத அபாயத்தை பலமடங்கு உயர்த்துகின்றன.
இக்காரணங்களால்தான் கோபத்தை அடக்கு. ஓவரா கோபப்படாதே. அது உடம்புக்கு ஆகாது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். ஆதலால் அதிகமாக கோபப்படுபவர்கள் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இதன் மூலம் உணரலாம்.
இந்தத் தகவல்களை அறிந்துகொள்வதன் மூலம், கோபம் ஏற்படும் தருணங்களில் உங்கள் உடலுக்குள் நிகழும் ஆபத்தான மாற்றங்களை உணர்ந்து, உணர்ச்சிகளை உடனடியாகக் கட்டுப்படுத்தும் நிதானத்தையும், நீண்டகால நல்வாழ்வுக்கான மன அமைதியையும் பெற முடியும்.