விண்வெளிப் பயணம் செய்தவர்கள் அனைவரது உடையும் பார்க்கும் போது ஒரேத் தோற்றத்தில் இருக்கிறதே... ஏன்? என்கிற கேள்வி நமக்குள் எழுவது இயல்புதான். விண்வெளி உடைகள் (Space Suit) பார்ப்பதற்கு ஒரேத் தோற்றத்தில் இருந்தாலும், அவை பயன்படுத்தத் தொடங்கிய ஆண்டுகளில் இருந்து படிப்படியாக மிகப் பெரிய அளவில் மாற்றங்களைச் சந்தித்துள்ளன. இருப்பினும், வெளித்தோற்றத்தில் மாற்றங்கள் எதுவும் தெரிவதில்லை.
தொடக்கக்காலத்தில் விண்வெளி உடைகள், விமானிகள் உடையின் இறுக்கமான வடிவைக் கொண்டிருந்தன. சோவியத் ரஸ்யாவின் விண்வெளி வீரரான அலெக்ஸி லியநோவ் என்பவர் 1965 ஆம் ஆண்டில் வாஸ்கோட் 2 எனும் விண்கலத்தில் சென்று விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றவர்.
இவரின் முதல் விண்வெளியிலான நடையின் போது, இவர் அணிந்திருந்த விண்வெளி உடையின் உள்ளே ஏற்பட்ட கடுமையான அழுத்தத்தால், அந்த விண்வெளி உடை ஊதிப் பெருக்கத் தொடங்கியதுடன் சிக்கலை உண்டாக்கியது. விண்வெளியில் ஏற்பட்ட கடுமையான அழுத்தத்தால், லியநோவ் நகர இயலாமல் திணறிப் போனார். அந்தப் படிப்பினையினைத் தொடர்ந்து, அப்பல்லோ விண்கலத் திட்டங்களுக்கு உருவாக்கப்பட்ட ஏ7எல் விண்வெளி உடைகள் அழுத்தச் சமநிலையைப் பாதுகாக்கும் வகையில், அந்த உடைகள் விரிவடையும்படி வடிவமைக்கப்பட்டன. மேலும், அந்த உடையில் காற்றை மறுசுழற்சி செய்யும் அமைப்பும், உடைக்குள் 100 மில்லி குளிர்ந்த நீரும் சுழன்று கொண்டே இருக்கும் அமைப்புகளும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டன.
பொதுவாக, விண்வெளி உடை என்பது வெப்பமான மற்றும் உறை கடுங்குளிர் போன்ற வேறுபட்ட வெப்பநிலை நிலவும் வெற்றிடமான விண்வெளியில் மனிதனின் உடல் வெப்பநிலையைச் சீராகப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு ஆடையாகும். மேலும் இது பாய்ந்து வரும் விண் தூசுகளில் இருந்தும், விண்வெளி வீரரின் உடலைப் பாதுகாக்கும் வகையிலும், வீரரின் உடலுக்குத் தேவைப்படும் காற்று, நீர், வெப்பம் ஆகியன கிடைக்கும் விதத்திலும், விய்ர்வை, சிறுநீர், கரியமில வாயு ஆகியவற்றை அகற்றும் விதத்திலும் விண் உடை வடிவமைக்கப்படுகிறது.
வான்வெளியில் உள்ளவர்களோடும், தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தில் உள்ளவர்களோடும் பேசுவதற்குச் சிறப்புக் கருவிகள் இந்த உடையில் பொருத்தப்பட்டிருக்கும். இவ்வுடையின் முதுகில் சுவாசிக்கத் தேவைப்படும் ஆக்சிஸன் தொட்டி இருக்கும். விண்வெளி உடையானது, ஒவ்வொரு விண்வெளி வீரருக்கும், அவரது உடல் அமைப்புக்கு ஏற்ப சிறப்பாகத் தயாரிக்கப்படும். பெரும்பான்மையாக, ஒவ்வொருவருக்கும் மூன்று உடைகள் தயாரிக்கப்படும்.
அதில் பயிற்சிக்கு ஒன்று, விண்வெளிப் பயணத்தின் போது ஒன்று, மாற்று உடை ஒன்று என்று இருக்கும். விண்வெளி உடைகளின் எடை புவியைப் பொறுத்தவரை மிகக் கூடுதலாக இருக்கும். ஆனால், இவை ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் பயன்படுத்தும் போது எடை தெரியாது. விண்வெளி உடை ஒன்றின் சராசரி விலை மூன்று கோடிக்கும் அதிகமான விலை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.