
அறிவியல் சாதனங்கள் பலவும் நமது அன்றாட வாழ்க்கையை, தொழிலை, உற்பத்தியை உயர்த்தியும், மேம்படுத்தியும் சாதனை செய்துள்ளன. பல வேலைகளைச் சுலபமாக்கியும் வேகப்படுத்தியும் உள்ளன. நாம் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளினால் வரமாக இருக்க வேண்டியது சாபமாக மாறி நிற்கிறதோ என்ற ஐயம் தோன்றுகிறது.
சமையல் செய்வதை எடுத்துக் கொள்வோம். எத்தனை உபகரணங்கள் வந்து எவ்வளவு எளிமையாக்கி, வேகமாக்கி உதவியுள்ளன சமையலை. அரைப்பதற்கோ, வெப்பப்படுத்துவதற்கோ, பல வித அரைப்பான்களும், அடுப்புகளும் குவிந்துவிட்டன. பலர் பல மணிநேரம் எடுத்துக்கொண்டு உடல் உழைத்துச் செய்த வேலைகள் எல்லாம் ஒரு சுவிட்ச் தட்டினால், திருகினால் சுலபமாக சில மணித்துளிகளில் செய்து விட முடிகிறது.
மேலும் சுலபமாக்க திடீர் சாம்பார், திடீர் சட்னி என்று வந்துவிட்டது. அன்றாடமும் நேரத்தைச் சாட்டையாக்கிச் சுழற்றியபடி வாழ்க்கை விரைவதால் இவையெல்லாம் அவசியமாகிவிட்டது. இந்த அவசரம் கூடிப்போனதால், சுவையும் மணமும் தொலைந்து போய் ஆரோக்கியமும் கெட்டு விட்டதே என்று சொல்பவர்களும் உண்டு.
எனது அறுபது வயது நண்பர் என்னிடம் இப்படிப் புலம்பினார்... ‘எங்கப் பாட்டி செய்த சாப்பாட்டிலிருந்த சுவையும் மணமும் எனது அம்மாவிடம் பாதியானது, எனது மனைவியிடம் அது கால் பங்காகி எனது மகளிடம் தொலைந்தே போனது என்றார்’. ‘வசதியும் வாய்ப்பும் கிடைக்கும் போது அனுபவிக்காமல் இப்படிப் புலம்புகிறீர்களே’ என்று கேட்டேன். ‘அது சரிதான் ஆனால் ஆரோக்கியமாக வாழ்கிறோமா’ என்றார். ‘மருத்துவமனைக்குச் செல்வது பாட்டி காலத்தில் இல்லாமலும், பிறகு அரிதாகவும், அப்புறம் அடிக்கடியும் இப்போது தினந்தோறும் என்று ஆகிவிட்டதே’ என்று வேதனைப்பட்டார்.
பரவலாக வளர்ந்து நிற்கும் தொலைதொடர்பு மற்றும் பொழுது போக்கும் சாதனங்களான கைபேசியும் தொலைக்காட்சியும் நம் வாழ்க்கையை எப்படி ஆக்கிரமித்து கொண்டுள்ளன. வீட்டுக்கு ஒன்று என்று இருந்த இவையிரண்டும் ஆளுக்கு ஒன்று என்று ஆகிவிட்டது. குடும்பமாக அமர்ந்து பேசி, பார்த்து மகிழ்ந்த சாதனங்களும் தனியுடமையாகி அருகிலேயே அமர்ந்தாலும் அருகாமையை உணராமல் செய்கின்றன.
ஒரே வீட்டில் வெவ்வேறு அறைகளில் அமர்ந்து அதே நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறோம். நம்மை இணைக்க வேண்டிய சாதனங்கள் நம்மை பிரித்து மேய்வதை நாம் உணர்ந்து உள்ளோமா. வலைதளங்களில் சுற்றும் காணொளி ஒன்றில், பாட்டியை ஊருக்கு வந்து பார்க்க வந்த சொந்தங்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு மொபைலில் மூழ்கி இருப்பதும், பாட்டி மட்டும் தனியாக இருப்பதாக காட்டும். நம்மை நாம் அந்த சாதனங்களுடன் இணத்துக் கொண்டதால் நம் உறவுகளை தொலைத்ததை நாம் அறியவில்லையா?
நண்பர்களோ உறவினர்களோ வீட்டுக்கு வருவதை யாரும் இப்போதெல்லாம் பெரிதாக விரும்புவதில்லை. அவர்கள் நம் சுயத்தை நேரத்தை பறிப்பதாக கருதுகிறோம். அதனால் நட்பு மலர்வதையோ உறவு நெருங்குவதையோ நாம் தவிர்த்து விடுகிறோம். இந்த உபசரிப்பு குறைந்து போனதற்கு மனோதத்துவ மருத்துவர் ஒரு காரணத்தை விளக்கினார்.
அரிசி சோறும், இட்லி தோசையும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்களுக்கு உலக உணவுகளான பீட்சாவும், நூடுல்ஸூம், பாஸ்தாவும் செய்து தருகிறோமே அது உங்களுக்கு உரைக்க வில்லையா? என்கின்றனர் இளைய தலைமுறையினர். அரிதாக என்றால் பரவாயில்லை. தினந்தோறும், என்றால் நாக்கு செத்துவிட்டது என்று புலம்புகின்றனர் மூத்த தலைமுறையினர்.
நமது ஆர்வமும், பழக்கமும் குறைந்தால் ஒரு நடைமுறை வழக்கொழிந்து போகும். உதாரணமாக கல்லூரி காலம் முடிந்தவுடன் நம் எழுத்து பழக்கம் குறைந்து போய் எழுதுவதையே நிறுத்திவிட்டோம். கணிப்பொறியிலும், கைபேசியிலும் டைப் செய்து விபரங்களை கடத்துகிறோம். உபகரணங்கள் சுலபமாகவும் விரைவாகவும் வேலையை முடிக்கிறது. ஆனால், இத்தனை வருடம் பழகிய ஒரு திறமை அழிந்து போவதை உணர்ந்தோமா?
புது சாதனங்களில் நாம் சேமிக்கும் நேரங்களை என்ன செய்கிறோம். நடந்தோ சைக்கிளிலோ செல்வதற்கு பதில் இயந்திர வாகனங்களில் செல்கிறோம். அப்படி மிச்சப்படுத்தும் நேரத்தை காலை அல்லது மாலையில் நடைபயிற்சியாக அல்லது டிரட்மிலில் உடற்ப்பயிற்சியாக தொடர்கிறோம்.
இதில் உள்ள முரண் நமக்கு விளங்குவதில்லை. சாதனங்கள் வாழ்க்கையை சுலபமாக்கி இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. மகிழ்ச்சியாக வளமூட்டியதாக ஆரோக்கியமானதாக ஆக்கி இருக்கிறதா என்ற வேதாளத்தின் கேள்விக்கு விக்ரமாதித்யனின் பதில் என்ன?