

பண்டைய காலத்திலிருந்தே மனிதர்களுக்கு ஒரு விசித்திரமான ஆசை இருந்தது. அதுதான் மலிவான உலோகங்களை விலையுயர்ந்த தங்கமாக மாற்றும் வித்தை. இதை 'ரசவாதம்' என்று அழைப்பார்கள். இதற்காகப் பல சித்தர்களும், அறிவியல் முன்னோடிகளும் தங்கள் வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்து தோல்வியைத் தழுவினார்கள்.
ஆனால், இன்று அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், அந்தப் பழைய கனவு நனவாகும் தருணம் வந்துவிட்டது போல் தோன்றுகிறது. 'மேரத்தான் பியூஷன்' என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், அணுக்கரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பாதரசத்தைத் தங்கமாக மாற்ற முடியும் என்று நிரூபிக்கத் தயாராகி வருகிறது. இது சாத்தியமானால், உலகப் பொருளாதாரத்தையே இது புரட்டிப்போடும் என்பதில் சந்தேகமில்லை.
அணுக்கரு வினை!
தங்கம் என்பது ஒரு தனிமம். அதை ஆய்வகத்தில் உருவாக்க முடியாது என்றுதான் இத்தனை நாட்களாக நாம் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் அணுக்கரு இயற்பியல் விதிகளின்படி, ஒரு தனிமத்தின் அணு அமைப்பை மாற்றுவதன் மூலம் அதை வேறொரு தனிமமாக மாற்ற முடியும். இந்த நிறுவனம் முன்வைக்கும் தொழில்நுட்பத்தின்படி, பாதரசம்-198 என்ற ஐசோடோப்பை எடுத்து, அதை ஒரு அணுக்கரு இணைவு உலைக்குள் செலுத்துவார்கள். அங்கு நடைபெறும் வினையில் அது முதலில் பாதரசம்-197 ஆக மாறும். இது ஒரு நிலையற்ற தன்மை கொண்ட அணுவாகும். இது தானாகவே சிதைவுற்று, இறுதியில் நாம் ஆபரணமாக அணியக்கூடிய தங்கம்-197 ஆக உருவெடுக்கும்.
இரட்டிப்பு லாபம்!
பொதுவாக அணுமின் நிலையங்கள் மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்யும். ஆனால் இந்தத் தொழில்நுட்பம் வெற்றி பெற்றால், மின்சாரம் தயாரிக்கும் அதே நேரத்தில் உபரி வருமானமாகத் தங்கத்தையும் உற்பத்தி செய்ய முடியும். ஒரு ஜிகாவாட் திறன் கொண்ட உலையில், ஆண்டுக்குச் சுமார் 5000 கிலோகிராம் வரை தங்கம் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இது அந்த மின் உற்பத்தி நிலையத்தின் வருவாயை இரண்டு மடங்காக உயர்த்தும். தங்கம் மட்டுமல்லாமல், மருத்துவத் துறைக்குத் தேவைப்படும் அரிய வகை ஐசோடோப்புகள், நீண்ட காலம் உழைக்கும் அணு பேட்டரிகள் மற்றும் பல்லேடியம் போன்ற மற்ற விலையுயர்ந்த உலோகங்களையும் இதே முறையில் தயாரிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
சவால்கள்!
கேட்பதற்கு இது மிகவும் எளிமையாகத் தோன்றினாலும், இதில் நடைமுறைச் சிக்கல்கள் நிறையவே உள்ளன. இவ்வாறு அணு உலையில் உருவாக்கப்படும் தங்கத்தில் கதிரியக்கத் தாக்கம் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, உலைக்குள்ளிருந்து வெளியே எடுத்த உடனே அதை விற்பனைக்கோ அல்லது பயன்பாட்டிற்கோ கொண்டு வர முடியாது.
அந்தக் கதிரியக்கத் தன்மை முழுமையாக நீங்கும் வரை, அதாவது சுமார் 14 முதல் 18 ஆண்டுகள் வரை அந்தத் தங்கத்தைப் பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். அதன் பிறகே அது பாதுகாப்பான தங்கமாக மாறும். மேலும், அணுக்கரு இணைவு மூலம் மின்சாரம் தயாரிப்பதே இன்னும் முழுமையான வெற்றி அடையாத நிலையில், இந்தத் திட்டம் மிகப்பெரிய சவாலாகவே பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து முதலீட்டாளர்கள் மற்றும் அரசு தரப்பிலிருந்து கோடிக்கணக்கான டாலர்கள் நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இது வெறும் காகிதத்திலான திட்டமாக நின்றுவிடாமல், செயல்பாட்டிற்கு வந்தால் அறிவியல் உலகில் அது ஒரு மைல்கல்லாக அமையும்.