படுக்கையறையில் ஸ்மார்ட் சாதனங்கள்: உங்களது அந்தரங்கம் என்னாகிறது?

உங்கள் படுக்கையறை ரகசியங்கள் இணையத்தில் கசிகிறதா? உடனடியாகத் தெரிந்து கொள்ளுங்கள்!
டிஜிட்டல் பாதுகாப்பு - Digital Security,
டிஜிட்டல் பாதுகாப்பு - Digital Security,
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 7 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு நூல், ஒரு கட்டுரை நூல், ஒரு ஆய்வுக் கட்டுரை நூல், 5 சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதை மற்றும் நாவல் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். பொருளாதாரம் உட்பட பல்வேறு பிரிவுகளில் இவரது கட்டுரைகள் மற்றும் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் கல்கி ஆன்லைனில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

Updated on: 

இரவில் உறங்குவதற்காகப் படுக்கைக்குச் செல்லும்போது சிலர் அங்கேயே அலைபேசியில் சமூக வலைத் தளங்களைப் பார்க்கிறார்கள். சில வீடுகளில் படுக்கையறைச் சுவரில் ஸ்மார்ட் டிவி பொருத்தப் பட்டிருக்கிறது. வீட்டிலிருந்தே அலுவலகப் பணிகளைச் செய்பவர்களில் சிலர் மடிக்கணினியையும் படுக்கையறைக்குக் கொண்டு செல்கிறார்கள்.

படுக்கையறைக்குள் இந்தச் சாதனங்கள் பயன் படுத்தப்படுவது தனியுரிமைக்கு எந்த அளவுக்குப் பாதுகாப்பானது?

அலைபேசி நமக்குப் பொழுதுபோக்கையும் தகவல் களையும் தருகிறது. மடிக்கணினி வேலைகளை எளிதாக்குகிறது. ஸ்மார்ட் டிவி விரும்பிய நிகழ்ச்சிகளைப் பார்க்க உதவுகிறது. ஆனால் இவற்றில் கேமரா, ஒலிவாங்கி (Microphone), இணைய இணைப்பு போன்ற வசதிகளும் இருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்து வதற்கான அனுமதியைத் தவறான நபர் பெற்றுவிட்டால், நமது தனிப்பட்ட வாழ்க்கைக்கு ஊறுவிளையலாம்.

டிஜிட்டல் பாதுகாப்பு:

ஒரு சாதனம் ஹேக்கரின் கட்டுப்பாட்டுக்குச் சென்றால்?

ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள். படுக்கையறையில் மடிக்கணினியைப் பயன் படுத்திவிட்டு, அதை மூடாமல் அப்படியே வைத்துவிட்டுச் செல்கிறீர்கள். அல்லது அலைபேசியில் தெரியாத இணைய இணைப்பைத் திறக்கிறீர்கள்; நம்பகமற்ற செயலி ஒன்றைப் பதிவிறக்குகிறீர்கள். இத்தகைய செயல்களால் எல்லோருடைய சாதனங்களும் உடனடியாக ஊடுருவப்படுவதில்லை. ஆனால், பாதுகாப்புக் குறைபாட்டைப் பயன்படுத்தியோ, தீங்கிழைக்கும் செயலியை நிறுவச் செய்தோ, ஒருவரின் சாதனத்திற்குள் ஊடுருவ முடிந்தால் நிலைமை மோசமாவிடும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் ஸ்மார்ட்போன் உங்களை ஒட்டுக் கேட்கிறதா? கூகுளின் ரகசிய கண்காணிப்பை நிறுத்தும் வழி!
டிஜிட்டல் பாதுகாப்பு - Digital Security,

சாதனத்தில் உளவு மென்பொருள் (Spyware) அல்லது தொலைநிலைக் கட்டுப்பாட்டு மென்பொருள் (Remote Access Trojan) நிறுவப்பட்டு, அதற்குத் தேவையான அனுமதிகளும் கிடைத்திருந்தால், தாக்குதல் நடத்துபவர் சில செயல்பாடுகளைத் தொலைவிலிருந்தே மேற்கொள்ளக்கூடும்.

உதாரணமாக, கேமராவை அணுகும் திறன் கிடைத்தால், சாதனத்தின் முன்புறம் அல்லது பின்புறக் கேமரா மூலம் சுற்றுப்புறக் காட்சிகளைப் பதிவு செய்ய முயற்சிக்கலாம். மடிக்கணினியின் வெப் கேமரா வழியாக அறையில் நடப்பவற்றைப் படமாக்கவும், ஒலிவாங்கி வழியாக உரையாடல்களைப் பதிவு செய்யவும் வாய்ப்புள்ளது. இதனால் குடும்ப உறுப்பினர்களின் உரையாடல்கள், தனிப்பட்ட சந்திப்புகள், படுக்கையறையில் நடைபெறும் அந்தரங்கச் செயல்பாடுகள் போன்றவை மற்றொருவரின் கைகளுக்குச் செல்லக்கூடும்.

இது வெறும் தனியுரிமைப் பிரச்னையோடு முடிந்து விடுவதில்லை. அந்தரங்கப் பதிவுகளை பாலியல் தளங்களில் வெளியிடும் அபாயம் இருக்கிறது. அல்லது, அதை வைத்து மிரட்டிப் பணம் பறிக்கலாம்; அல்லது பெண்களைத் தம் இச்சைக்குப் பணியவைக்கலாம்.

அறையில் வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள், அடையாள அட்டைகள், வங்கித் தகவல்கள் போன்றவை கேமராவில் பதிவானாலோ, சாதனத்திலிருந்து திருடப்பட்டாலோ நிதி மோசடிக்கும் வழிவகுக்கலாம்.

ஆனால், ஒரு சாதனத்தில் இணைய இணைப்பு இருக்கிறது என்பதற்காக மட்டும் யாராலும் அதன் கேமராவைத் தானாக இயக்கிவிட முடியாது. அதற்குச் சாதனத்தின் பாதுகாப்பை மீறும் அணுகல் அல்லது தேவையான அனுமதிகளைப் பெறும் வகையிலான ஊடுருவல் தேவை. எனவே, ஆபத்தைப் புரிந்துகொள்வதோடு தேவையற்ற அச்சத்தையும் தவிர்க்கவேண்டும்.

டிஜிட்டல் பாதுகாப்பு - Digital Security,
டிஜிட்டல் பாதுகாப்பு - Digital Security,

நாம் கவனிக்க வேண்டியவை என்ன?

படுக்கையறையில் மடிக்கணினியைப் பயன் படுத்துபவர்கள், வேலை முடிந்ததும் அதை முழுமையாக மூடி வைப்பதுடன், வெப் கேமராவுக்குச் சிறிய மூடி பொருத்தலாம். இது கேமரா வழிப் பதிவைத் தடுக்கும் கூடுதல் பாதுகாப்பு. ஆனால் ஒலிவாங்கியைப் பாதுகாக்காது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒலிவாங்கிப் பாதுகாப்புக்கு அதற்குரிய தடுப்புகளைச் செய்துகொள்வது அவசியம்.

இதையும் படியுங்கள்:
உங்க டிவி ரிமோட் வேலை செய்யலையா? குப்பையில் போடுறதுக்கு முன்னாடி இதை படிங்க!
டிஜிட்டல் பாதுகாப்பு - Digital Security,

அலைபேசியில் தேவையற்ற செயலிகளை நிறுவுவதைத் தவிர்க்கவேண்டும். எந்தச் செயலிக்கு கேமரா, ஒலிவாங்கி, புகைப்படங்கள் போன்றவற்றை அணுக அனுமதி வழங்கியிருக்கிறோம் என்பதை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். ஆண்ட்ராய்டு 12 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் கேமரா அல்லது ஒலிவாங்கி பயன்படுத்தப்படும்போது திரையின் மேல்பகுதியில் பச்சை நிறக் குறியீடு தோன்றும். அதைத் தொட்டால் எந்தச் செயலி பயன்படுத்துகிறது என்பதைப் பார்க்கலாம்.

WhatsApp, Google Meet, Google Assistant, பேசித் தட்டச்சு, ஒலிப் பதிவு போன்ற தேவைகளுக்கு ஒலிவாங்கி அனுமதி தேவை. அத்தகைய செயலிகளுக்கு “Allow only while using the app” என்ற அமைப்பை வைப்பது சிறந்தது. இதனால், அந்தச் செயலியைப் பயன்படுத்தும்போது மட்டுமே ஒலிவாங்கி அணுகல் கிடைக்கும்; செயலியை மூடிவிட்டால் அணுகல் நின்றுவிடும்.

கேம்கள், ஃபோட்டோ எடிட்டர்கள், கடைகளின் செயலிகள், வங்கிச் செயலிகள், அறிமுகமில்லாத செயலிகள் போன்றவற்றுக்கு ஒலிவாங்கி அனுமதி தேவையில்லை என்றால், அவற்றை “Don’t allow” ஆக வைக்கலாம். இதனால் தேவையற்ற செயலிகள் ஒலிவாங்கியைப் பயன்படுத்தும் வாய்ப்பு குறையும்.

ஸ்மார்ட் டிவியில் கேமரா அல்லது குரல் கட்டுப்பாட்டு வசதி இருந்தால், அதன் தனியுரிமை அமைப்புகளைச் சரிபார்த்து, தேவையற்ற அனுமதிகளை முடக்க வேண்டும். நாம் பார்க்கும் நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் சில கண்காணிப்பு வசதிகளையும் முடக்கலாம். ஸ்மார்ட் டிவியின் மைக், கேமரா, தனிப்பட்ட தரவுச் சேகரிப்பு அமைப்புகளை அவ்வப்போது சரிபார்ப்பது நல்லது.

மேலும், ஒவ்வொரு சாதனத்திற்கும் தனித்துவமான கடவுச்சொல் பயன்படுத்துவது, மென்பொருள்களைப் புதுப்பிப்பது, தெரியாத இணைப்புகளைத் திறக்காமல் இருப்பது, நம்பகமான செயலிகளை மட்டுமே நிறுவுவது போன்றவை அடிப்படைப் பாதுகாப்பு நடவடிக்கைகள்.

அந்தரங்கம் நமது கைகளில்தான்!

வீட்டின் கதவுகளைப் பூட்டிவிட்டு நிம்மதியாக உறங்குகிறோம். ஜன்னல்களையும் திரைகளையும் மூடுகிறோம். ஆனால், நமது தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்ட டிஜிட்டல் சாதனங்களின் பாதுகாப்பைப் பற்றி அதே அளவுக்கு யோசிக்கிறோமா?

தொழில்நுட்பத்தை எந்த அளவுக்கு அறிந்திருக்கிறோம், எவ்வாறு பயன்படுத்துகிறோம், எத்தகைய அனுமதிகளை வழங்குகிறோம், எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறோம் என்பதில்தான் நமது தனியுரிமைப் பாதுகாப்பு அடங்கியிருக்கிறது. நமது படுக்கையறை நமக்கான அந்தரங்கமான இடமாகவே இருக்கவேண்டும். அங்கே இருக்கும் சாதனங்கள் நமது வசதிக்காகச் செயல்பட வேண்டுமே தவிர, நமது அந்தரங்கத்தை வெளியுலகிற்குக் காட்டும் ‘மூன்றாம் கண்ணாக’ மாறிவிடக் கூடாது.

இதையும் படியுங்கள்:
உஷார்! நீங்க மாட்டுன CCTV கேமரா உங்களை வேவு பார்க்க அதிக வாய்ப்புள்ளது!
டிஜிட்டல் பாதுகாப்பு - Digital Security,