

திறன்பேசியில் (Smartphone) யாருடனாவது பேசும்போது ஏதேனும் விற்பனைப் பொருள்கள், தயாரிப்புகள், நிறுவனங்கள் பற்றிக் குறிப்பிட்டால், பேசி முடித்த பிறகு அலைபேசியில் இணையத்தில் உலவும்போது அதே பொருள்கள் பற்றிய விளம்பரங்கள் இடம்பெறுவதைப் பார்க்க முடியும். எந்தத் தளத்துக்குச் சென்றாலும், எந்த ஆன்லைன் சேவையைப் பயன்படுத்தினாலும் இது நடக்கும். இத்தகைய விளம்பரங்கள் அப்போதைக்கு மட்டுமல்ல; அடுத்தடுத்த நாட்களிலும் தொடரும்.
இது திறன்பேசியில் பேசுவது தொடர்பாக மட்டுமல்ல; வலைத்தளங்களில் பார்ப்பது, கூகுளில் தேடுவது ஆகியவற்றுக்கும் பொருந்தும். கணினி, மடிக்கணினி ஆகியவற்றிலும் இதே போன்ற விளம்பரங்கள் வரும்.
இது எப்படி நடக்கிறது?
இணையம், கூகுள், அல்காரிதம் ஆகியவை பற்றி ஓரளவுக்காவது அறிந்தவர்களுக்கு இதற்கான காரணம் புரியும். கணினி, திறன்பேசி ஆகியவற்றுக்கு ஆதாரமாக உள்ளது இணையம்.
இணையத்தைக் கோலோச்சிக்கொண்டிருப்பதும், பெரும்பாலான முக்கிய செயலிகளைக் கைவசம் வைத்திருப்பதும் கூகுள். இந்த இரண்டையும் பயன்படுத்தி, கூகுள் நிறுவனம் செய்கிற பல்வேறு தொழில்நுட்பத் தந்திரங்களில் ஒன்றுதான் இது.
ஆன்லைன் தனியுரிமை:
திறன்பேசியில் நாம் பேசுவதை அதில் உள்ள செயலிகள் (apps) எப்போதும் ஒட்டுக் கேட்பதில்லை. ஆனால், "OK Google", "Hey Siri" போன்ற விழிப்புச் சொற்களுக்காகக் காத்திருப்பது, பின்னணிச் செயல்பாடுகள், மற்றும் தரவு சேகரிப்பு ஆகியவை மூலம் நம்மைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
கணினியில் செய்யும் இணைய நடவடிக்கைகளை, அதில் உள்ள மென்பொருள்கள் கண்காணிக்கின்றன. இதற்கெல்லாம் முதன்மைக் காரணம் கூகுள் மட்டுமல்ல; மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம்), அமேசான், மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்களும் இதே போன்ற தரவு சேகரிப்பில் ஈடுபடுகின்றன.
உண்மையில் இது ஒட்டுக் கேட்பதா?
"சாத்தானை நினைத்தால் அது உடனே வந்துவிடும்" என்று கிறிஸ்துவ வழக்கில் சொல்வார்கள். இந்து புராணத்தில், கற்பக விருட்சத்தின் அடியில் இருந்து நாம் விரும்புவது நிறைவேறும் எனச் சொல்லப்படும். இவற்றை நினைவூட்டக்கூடிய விதமான இந்த இணைய மாயாஜாலம் நிகழ்வது, கூகுளின் தொழில்நுட்பத் தந்திரங்கள் மூலமாகத்தான். ஆனால், இது உண்மையில் மாயாஜாலம் அல்ல; புள்ளிவிவரங்கள் மற்றும் அல்காரிதம்களின் விளைவு.
வியாபார உலகில் விளம்பரங்கள் தவிர்க்க முடியாதவை. வாடிக்கையாளர்களுக்கும் விளம்பரங்கள் மூலமாகவே வியாபார ரீதியிலான விஷயங்கள் தெரிய வரும். எனவே, விளம்பரங்கள் செய்யப்படுவது தவறல்ல.
ஆனால், வாடிக்கையாளர்கள் அறியாமல், அவர்களின் அந்தரங்கத்துக்குள் நுழையும் தரவு சேகரிப்பு உரிமைமீறல் செயலாகும். பயனர்களாகிய நாம், அறியாமலேயே இதற்கெல்லாம் கூகுளுக்கு உரிமை கொடுத்து வைத்திருக்கிறோம். அதாவது, அவ்வாறு கூகுளில் செட்டிங்ஸ்கள் செய்து வைக்கப்பட்டுள்ளன.
எப்படித் தடுப்பது?
இத்தகைய தரவு சேகரிப்பைத் தடுக்க விரும்பினால், திறன்பேசி அல்லது கணினியில், செட்டிங்ஸுக்குச் சென்று, "டேட்டா & ப்ரைவசி" (Data & Privacy) பகுதியில் உள்ள "வெப் & ஆப் ஆக்டிவிட்டி" (Web & App Activity) பகுதியில் தடுப்பு செய்துகொள்ளலாம். கூகுள் க்ரோம் உலாவியில் "ப்ரைவசி & செக்யூரிட்டி" (Privacy & Security) பகுதியில் உள்ள "ஆட்ஸ் ப்ரைவசி" (Ads Privacy) பகுதியிலும் தேவையான தடுப்புகளைச் செய்துகொள்ளலாம்.
இந்த அமைப்புகள் பெரும்பாலும் கூகுள் கணக்குடன் இணைக்கப்பட்டிருப்பதால், ஒரு சாதனத்தில் செய்தால் மற்ற சாதனங்களிலும் பொருந்தும். ஆனால், சில அமைப்புகள் சாதனத்திற்கு ஏற்ப மாறுபடும்.
இது தொடர்பாக விவரங்கள் தேவைப்படுகிறவர்கள் யூடியூப் காணொளிகள், ஏ.ஐ. உரையாடல்கள் மூலம் வழிகாட்டுதல்களைப் பெறலாம். இவற்றைச் செய்வது மிக எளிது.
தனியுரிமைப் பாதுகாப்பு உங்கள் கையில்
இணையத் தேடலில் சுமார் 90% கூகுள் மூலமே நடக்கிறது. இதில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சேவையும் நம்மைப் பற்றிய தரவுகளைச் சேகரிக்கிறது. அதைத் தடுப்பது நம் கையில்தான் இருக்கிறது. உங்கள் தனியுரிமையைப் பாதுகாத்துக்கொள்ள நீங்களே நடவடிக்கை எடுக்க வேண்டும்.