இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் என்பது நமது உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாங்கும் போனைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். குறிப்பாக அதன் 'டிஸ்ப்ளே' உடைந்தால், அதை மாற்றுவதற்கு ஆகும் செலவு போனின் பாதி விலைக்குச் சமமாக இருக்கும்.
இதைத் தவிர்க்க நாம் நாடுவது ஸ்கிரீன் ப்ரொடெக்டர். ஆனால் சந்தையில் பல வகைகள் இருப்பதால், எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் பலருக்குக் குழப்பம் உள்ளது. உங்கள் போனுக்குச் சிறந்த பாதுகாப்பு எது?
1. டெம்பர்டு கிளாஸ்:
இதுவே இன்று உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு முறை. சாதாரண கண்ணாடியை அதிக வெப்பப்படுத்தி உருவாக்கப்படுவதால், இது மிகவும் வலிமையானது.
விழுந்தால் போன் ஸ்கிரீன் உடையாமல் இதுவே தாங்கிக் கொள்ளும். தொடுவதற்கு ஒரிஜினல் ஸ்கிரீன் போலவே இருக்கும். கீறல்களைத் தடுப்பதில் இதுவே முதன்மையானது. இது கொஞ்சம் தடிமனாக இருக்கும். ஓரங்களில் அடிபட்டால் சீக்கிரம் விரிசல் விழும் வாய்ப்பு உண்டு.
2. ஹைட்ரோஜெல் ப்ரொடெக்டர்:
வளைவான திரைகளைக் (Curved Displays) கொண்ட போன்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இது மென்மையான ரப்பர் போன்ற தன்மையைக் கொண்டது. இதில் 'செல்ஃப்-ஹீலிங்' (Self-healing) வசதி உண்டு. அதாவது சிறிய கீறல்கள் விழுந்தால், அது தானாகவே மறைந்துவிடும். திரையின் வளைவுகளில் கச்சிதமாகப் பொருந்தும்.
இது விழுந்தால் ஏற்படும் பலமான பாதிப்புகளை தடுக்காது. அதிக விசை கொடுத்தால் கிழிந்துவிட வாய்ப்புள்ளது.
3. பிளாஸ்டிக் ஸ்கிரீன் கார்டு (PET/TPU Film):
விலை குறைவாக இருக்க வேண்டும் என்பவர்களுக்கு இது ஏற்றது. மெல்லிய பிளாஸ்டிக் படலமாக இது இருக்கும். மிகவும் மெல்லியது என்பதால் போனில் ஒட்டியிருப்பதே தெரியாது. மிகவும் மலிவானது.
கீறல்களில் இருந்து மட்டுமே பாதுகாக்கும். போன் கீழே விழுந்தால் ஸ்கிரீன் உடைவதை இது தடுக்க முடியாது. சீக்கிரமே மஞ்சள் நிறமாக மாறக்கூடும்.
4. பிரைவசி ஸ்கிரீன் ப்ரொடெக்டர் (Privacy Screen Protector):
நீங்கள் போனில் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பக்கத்தில் இருப்பவர்கள் பார்க்கக் கூடாது என்று நினைப்பவர்களுக்கு இது சிறந்தது. போனை நேராகப் பார்த்தால் மட்டுமே திரை தெரியும்.
பக்கவாட்டில் இருந்து பார்த்தால் திரை கருப்பாகத் தெரியும். பேருந்து அல்லது ரயிலில் பயணம் செய்யும்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதோடு, இது திரையின் வெளிச்சத்தை சற்றே குறைக்கும். கண்கள் விரைவில் சோர்வடைய வாய்ப்புண்டு.
நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், உங்கள் போனின் பாதுகாப்பிற்கு டெம்பர்டு கிளாஸ் தான் எப்போதும் நம்பகமானது. ஆனால், நீங்கள் ஒரு லேட்டஸ்ட் 'கர்வ் டிஸ்ப்ளே' (Curved Display) போன் வைத்திருந்தால் ஹைட்ரோஜெல் சிறந்த தேர்வாக இருக்கும்.C