BHIM செயலி: வேகமான, பாதுகாப்பான பணப் பரிவர்த்தனைகளுக்கு தயார்!

BHIM 3.0
BHIM 3.0
Published on

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த டிஜிட்டல் புரட்சியில் முக்கிய பங்காற்றி வரும் செயலிகளில் BHIM செயலியும் ஒன்று. இந்நிலையில், தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) பிம் செயலியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பான பிம் 3.0 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பதிப்பு, பயனர்களின் பணப் பரிவர்த்தனை அனுபவத்தை மேலும் எளிதாக்கும் வகையில் பல்வேறு புதிய வசதிகளுடன் வந்துள்ளது.

பிம் 3.0 செயலியில், முந்தைய பதிப்புகளில் இல்லாத பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பயனர்கள் தங்கள் செலவுகளை எளிதாக நிர்வகிக்கவும், பணப் பரிவர்த்தனைகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ளவும் முடியும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செலவுகளைப் பகிர்வது, அவற்றை கண்காணிப்பது போன்ற வசதிகள் புதிய செயலியில் மேம்படுத்தப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த செயலி, தற்போதுள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பிம் 3.0 செயலி படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை மேலும் எளிதாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிம் 3.0 செயலியில் உள்ள சிறப்பம்சங்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.

இந்த செயலி 15க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் கிடைக்கிறது. இதனால், நாட்டின் பல்வேறு மொழி பேசும் மக்களும் தங்களது தாய்மொழியிலேயே செயலியைப் பயன்படுத்த முடியும். இரண்டாவதாக, இணைய இணைப்பு குறைவாக இருக்கும் சமயங்களிலும் கூட விரைவான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்பது இதன் முக்கிய சிறப்பம்சம். மேலும், பயனர்கள் தங்கள் மாதந்திர செலவுகளை முழுமையாக கண்காணிக்கவும், எந்தெந்த வகையில் அதிகம் செலவு செய்கிறோம் என்பதை அறிந்து கொள்ளவும் முடியும்.

அதுமட்டுமின்றி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செலவுகளைப் பிரிப்பது இப்போது மிகவும் எளிதாகிவிட்டது. வாடகை, உணவு அல்லது குழுவாக வாங்கிய பொருட்களுக்கான பில்களைப் பகிர்ந்து, யார் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை எளிதாகக் கணக்கிடலாம். குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஒரே கணக்கின் கீழ் கொண்டு வந்து, அவர்களின் செலவுகளைக் கண்காணிக்கவும், குறிப்பிட்ட தொகையை ஒதுக்கீடு செய்யவும் முடியும். நிலுவையில் உள்ள கட்டணங்கள் மற்றும் குறைந்த இருப்பு போன்றவற்றை நினைவூட்டும் வசதியும் இதில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
என்னது! இந்தியாவில் இத்தனை இடங்களில் மொபைல் நெட்வொர்க் வசதி இல்லையா?
BHIM 3.0

வணிகர்கள் மற்றும் கடைக்காரர்களுக்காக பிரத்யேகமாக BHIM Vega என்ற கட்டண வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எந்தவொரு மூன்றாம் தரப்பு செயலியையும் பயன்படுத்தாமல் நேரடியாகவே பணத்தை செலுத்த முடியும். இது பணப் பரிவர்த்தனைகளை வேகமாகவும் பாதுகாப்பாகவும் ஆக்குகிறது.

பிம் 3.0 இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும். இது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மேலும் உள்ளடக்கியதாகவும், பாதுகாப்பானதாகவும், எளிமையானதாகவும் மாற்றும் என்பதில் சந்தேகமில்லை. 2025 ஏப்ரல் மாதத்திற்குள் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் இந்த புதிய செயலி, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மற்றும் நிதி மேலாண்மை ஆகிய இரண்டையும் முன்பை விட மிகவும் சுலபமாக்கும் என்று நம்பலாம்.

இதையும் படியுங்கள்:
மிகவும் பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்!
BHIM 3.0

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com