

SCoPEx Project: சமீப காலமாக பெங்களூரு, கர்நாடகா உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் திடீரென பருவகாலத்திற்கு சம்பந்தமே இல்லாமல் பெருமழையும், ஆலங்கட்டி மழையும் வெளுத்து வாங்கி வருகிறது. இதை வைத்து சமூக வலைத்தளங்களில் ஒரு பெரிய வதந்தி புயல் வேகத்தில் பரவி வருகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தான் ரகசியமாக சில பரிசோதனைகள் செய்து இந்த வானிலையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்பதுதான் அந்த வைரல் செய்தி. இதன் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
SCoPEx திட்டத்தின் உண்மையான நோக்கம்!
இணையத்தில் பரவும் பெரும்பாலான வீடியோக்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்தும் ஸ்கோபெக்ஸ் (SCoPEx) என்ற ஒரு அறிவியல் திட்டத்தை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளன. பூமியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பத்தைக் கட்டுப்படுத்த, வளிமண்டலத்தின் மிக உயரமான ஸ்ட்ராடோஸ்பியர் (Stratosphere) அடுக்கில் பலூன்கள் மூலமாக கால்சியம் கார்பனேட் துகள்களைத் தூவுவதுதான் இந்த திட்டம்.
இதன் மூலம் சூரிய ஒளியை மீண்டும் விண்வெளிக்கே திருப்பி அனுப்ப முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஆனால், இதற்கும் நமது ஊரில் பெய்யும் திடீர் மழைக்கும் எந்த ஒரு சிறு சம்பந்தமும் கிடையாது. இந்த ஆய்வு நடக்கும் உயரமான இடம், மேகங்கள் உருவாகும் ட்ரோபோஸ்பியர் (Troposphere) பகுதியை விட பல கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது. எனவே இது மழையையோ புயலையோ உருவாக்கும் வாய்ப்பே கிடையாது.
பில் கேட்ஸ் Vs கிளைமேட் கண்ட்ரோல்!
பில் கேட்ஸ் எப்போதுமே உலகளாவிய பருவநிலை மாற்றம் தொடர்பான பல ஆராய்ச்சிகளுக்கு அதிக அளவில் நிதி உதவி செய்து வருகிறார். அந்த ஒரு காரணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு, அவர் தான் உலகத்தின் மழையைத் தீர்மானிக்கிறார் என நெட்டிசன்கள் தேவையில்லாமல் கதைகட்டி விடுகிறார்கள். மழையை உருவாக்குவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது.
கடும் வறட்சி நிலவும் காலங்களில் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற நமது மாநிலங்களிலேயே செயற்கை மழைக்கான பல முயற்சிகளை அரசாங்கம் செய்துள்ளது. அந்த சிறு அளவிலான முயற்சிகளுக்கே சரியான பலன் கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அப்படி இருக்கும்போது ஒரு தனி நபர் மொத்த வானிலையையும் தனது கண்ட்ரோலில் வைத்திருப்பது துளியும் சாத்தியமில்லாத ஒன்று.
மாம்பழச் சாரல்!
தற்போது தென்னிந்தியாவில் பெய்யும் இந்த எதிர்பாராத மழைக்கு மிக முக்கியமான காரணம் இயற்கையாக நடக்கும் பருவநிலை மாற்றங்கள் மட்டுமே. இதை ‘மாம்பழச் சாரல்’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மிகத் தெளிவாகக் கூறுகிறது. காற்றில் உள்ள ஈரப்பதம், காற்றின் திசை மற்றும் வெப்பநிலையில் ஏற்படும் வழக்கமான மாறுபாடுகள் தான் இந்த மழைக்கு முக்கியக் காரணம். மேலும் இணையத்தில் சொல்லப்படும் அந்த ஸ்கோபெக்ஸ் திட்டம் கூட சில சுற்றுச்சூழல் சிக்கல்கள் காரணமாக முழுமையாகப் பரிசோதிக்கப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
எதற்கெடுத்தாலும் மனிதர்கள் மீது பழி போடுவது இணையத்தில் இப்போது ஒரு புது ட்ரெண்ட் ஆகிவிட்டது. வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் வரும் இப்படிப்பட்ட எந்த ஒரு அறிவியல் முகாந்திரமும் இல்லாத ஃபார்வர்டு மெசேஜ்களை நாம் அப்படியே கண்மூடித்தனமாக நம்பிவிடக் கூடாது.
வானிலை என்பது பல இயற்கை காரணிகளை உள்ளடக்கிய ஒரு மிகப்பெரிய சுழற்சி ஆகும். அதை எந்த ஒரு தனி மனிதனாலும், எந்த ஒரு டெக்னாலஜியைப் பயன்படுத்தியும் அத்தனை சுலபமாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாது என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.