இப்போது புளூடூத் ஹெட்ஃபோன்கள் அல்லது புளூடூத் கழுத்துப் பட்டைகள் அணிந்துகொண்டு பேசுவது தான் நாகரீகமாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் புளுடூத் கழுத்து பட்டைகளை அணிய சொல்லி வலியுறுத்தப்படுகிறார்கள். பெரும்பாலும் புளூடூத் ஏர் பாடுகள் மற்றும் புளூடூத் நெக் பேண்டுகள் பாதுகாப்பானதாக இருந்தாலும் சில நேரங்களில் வெடிக்கும் அபாயம் கொண்டவை தான். அதனால் கவனத்துடன் பயன்படுத்த மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சமீபத்தில் உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் புளூடூத் கழுத்துப் பட்டை வெடித்து ஒரு இளைஞர் உயிரிழந்தார். லக்னோவின் இந்திரா நகரில் வசித்து வந்த 27 வயது நிரம்பிய ஆஷிஷ் என்ற இளைஞர் புளூடூத் கழுத்து பட்டை அணிந்துகொண்டு நீண்டநேரம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே கழுத்துப் பட்டை திடீரென வெடித்து சிதறியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அவரது குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
போன்கள் மட்டுமல்ல, புளுடூத் ஏர் பாட் கூட முன்பு பல முறை வெடித்துள்ளன. சிறிய சாதனங்கள் வெடிப்பது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இது முற்றிலும் உண்மை. புளூடூத் கழுத்து பட்டைகளும் வெடித்துள்ளன. லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்ட சாதனங்கள் வெடிக்கும் அபாயங்கள் கொண்டவையாக உள்ளன.
ஒரு புளூடூத் சாதனம் வெடிக்க நாம் செய்யும் சில தவறுகள் காரணமாக இருக்கலாம் அதைத் தவிர்க்க சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.
மொபைல் போன்களையோ அல்லது வேறு ஏதேனும் பேட்டரி கொண்ட சாதனங்களையோ சரியான சார்ஜரில் பொருத்தி சார்ஜ் செய்ய வேண்டும். பேட்டரி சாதனங்களை சார்ஜ் செய்த பிறகு மறந்துவிடுவது அல்லது சார்ஜ் ஏறியும் நீண்ட நேரம் சார்ஜரில் விடுவது பேட்டரியின் திறனை பாதிக்கக் கூடும். அதிக நேரம் சார்ஜ் ஆகும் பேட்டரிகள் உப்பி வெடிக்க தயாராக இருக்கின்றன. எப்போதும் 80% வரை சார்ஜ் செய்வது நல்லது. அதற்கு மேல் சார்ஜ் செய்ய அவசியம் இல்லை. இவ்வாறு செய்வதால் பேட்டரியின் ஆயுட்காலம் நீடிக்கப்படும்.
அனைத்து மொபைல் போன் புளூடூத் சாதனங்களிலும் வெப்பத்தினை கட்டுப்படுத்தும் ஒரு ஐசி உள்ளது. இது வெப்பத்தை குறைத்து, அந்த சாதனம் சூடாவதை தடுத்து, வெடிப்பிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
எந்த மொபைல் புளூடூத் சாதனங்களையும் 60 நிமிடங்களுக்கு மேல் சார்ஜ் செய்ய கூடாது. இது தவிர அந்த சாதனத்தின் கேட்கும் சப்தத்தின் அளவு டிஸ்மீட்டர் 16-க்கு மேல் இருக்கக்கூடாது; அதாவது, வால்யூம் இதை விட அதிகமாக இருக்கக்கூடாது. புளுடூத் சாதனங்களை ஒரு மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்த கூடாது. ஒரு மணி நேரத்திற்கு மேல் பயன்பாடு செய்யப்பட்ட பின்னர், அந்த புளுடூத் சாதனத்தை அணைத்து தூரமாக வைக்கவும்.
எப்போதும் சந்தையில் கிடைக்கும் ஒரிஜினல் புளூடூத் இயர் போன்களையே பயன்படுத்துங்கள். போலியான சாதனங்களையும் விலை மலிவான சாதனங்களையும் பயன்படுத்த வேண்டாம். எப்போதாவது புளூடூத் சாதனங்கள் சற்று சூடாவதை உணர்ந்தால் உடனடியாக கழட்டி ஆப் செய்து விடுங்கள். இறுக்கமான, அதிக வெப்பமான பகுதிகளில் புளுடூத் இயர் போன்களை பயன்படுத்த வேண்டாம். வயர் வைத்த இயர் போன்களை பயன்படுத்த பழகிக் கொள்ளுங்கள். அவை மிகவும் பாதுகாப்பானவை.