
குண்டு துளைக்காத பொருளை உருவாக்கியவர் ஸ்டீஃபனி கோவலேக் என்பவர். இவர் துணிகள் மற்றும் நூல்களில் அதிக ஆர்வம் உள்ள திறமையான வேதியியலாளர். இவர் எஃகை விட வலிமையான, கண்ணாடி இழையை விட இலகுவான ஒரு திரவத்தை கண்டுபிடித்தார்.
அவருடைய கண்டுபிடிப்பு கெவ்லர். இது இன்றைய உலகில் டயர்கள், கையுறைகள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், விண்வெளி உடைகள் மற்றும் விண்கலங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு துணியால் நெய்யப்பட்டு அடுக்குகளாக அமைக்கப்பட்ட ஒரு செயற்கை இழை. எடையால் எஃகின் இழுவிசை வலிமையை விட ஐந்து மடங்கு அதிகம்.
அவர் கண்டுபிடித்த இந்த திரவத்தை ஓர் இயந்திரத்தில் சுழற்ற வேண்டும். இதன் மூலம் அதன் வலிமையை அறிந்து கொள்ள முடியும். ஆனால், இந்த படிக வடிவ திரவத்தை ஸ்டீஃபனி உருவாக்கிய பொழுது அவருடைய சக ஊழியர்கள் அவருடன் சேர்ந்து அதை உருவாக்கும் பணியை செய்ய மறுத்து விட்டனர். அவ்வாறு செய்வதால் தங்களுடைய இயந்திரங்களில் அந்த திரவம் சிக்கிவிடும் என்று கருதி ஒத்துழைக்க மறுத்தனர்.
அந்த நேரத்தில் அது வெற்றி பெறாமல் போய் இருக்கலாம். அதாவது அந்த சிந்தனைகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் வெற்றி பெறவில்லை. ஆனால் பின்னர் அது உலகையே மாற்றியது.
குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் என்பது காயங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக மனிதர்கள் பயன்படுத்திய பல நூற்றாண்டு கால முயற்சிகளின் தொடர்ச்சியாகும். இது ஆரம்பத்தில் விலங்குகளின் தோல், மரம் மற்றும் உலோகங்கள் போன்றவற்றை பயன்படுத்தி காயங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள பயன்படுத்தி வந்தனர்.
முதல் பாதுகாப்பு உடைகள் மற்றும் கேடயங்கள் விலங்குகளின் தோல்களால் செய்யப்பட்டன. நாகரீகம் முன்னேறியவுடன் மரக்கேடயங்களும் பின்னர் உலோகக் கேடயங்களும் பயன்பாட்டிற்கு வந்தன. உலோகம் உடல் கவசமாகவும் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதும் உலோக உடல் கவசம் பயனற்றதாக மாறியது.
1970களில் கெவ்லர் துணி கண்டுபிடிக்கப்பட்ட பின்பு குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளில் இது முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டது. கெவ்லர் துணியை ஜாக்கெட்டின் உட்புறத்தில் அடுக்கி தைத்து, குண்டுகள் உடலில் பாயும் பொழுது ஏற்படும் தாக்கத்தை உறிஞ்சி, துளைப்பதைத் தடுக்கும் வகையில் நவீன குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் உருவாக்கப்பட்டன.
அவருடைய கண்டுபிடிப்பான 'கெவ்லர்' தான் இன்றைய உலகில், கையுறைகள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், டயர்கள், விண்வெளி உடைகள் மற்றும் விண்கலங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
இவை பொதுவாக காவல் படைகள், ராணுவ வீரர்கள், காவல்துறை அதிகாரிகள், சுடப்படும் அபாயத்தில் உள்ள தேசியத் தலைவர்கள், பாதுகாப்பு காவலாளர்கள் மற்றும் மெய்க்காப்பாளர்கள் அணிவார்கள்.
இந்தியாவில் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள்:
இந்தியாவில் குறிப்பாக டிஆர்டிஓ (DRDO) போன்ற அமைப்புகள் இலகுரக மற்றும் அதிகமான பாதுகாப்புத் திறன் கொண்ட குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை உருவாக்கி வருகின்றன.
இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்படும் குண்டு துளைக்காத ஜாக்கெட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இறக்குமதி செய்யப்படும் ஜாக்கெட்டுகளுக்கு மாற்றாக, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஜாக்கெட்டுகள் செலவு குறைந்தவையாகவும், செயல் திறன் மிக்கவையாகவும் உள்ளன. அத்துடன் அதிக அச்சுறுத்தல் நிலைகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் திறன் கொண்டவையாகவும் உள்ளன.
குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளின் தொழில்நுட்பம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவை லேசானதாகவும், அதிக பாதுகாப்பானதாகவும் உருவாக்கப்பட்டு வருகின்றன.