

திரைப்படங்களில் விண்கலங்கள் மோதும்போது பெரிய சத்தங்கள் கேட்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் உண்மையில் விண்வெளியில் சத்தங்கள் கேட்குமா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
சத்தம் எப்படி பரவுகிறது?
முதலில் சத்தம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம். சத்தம் என்பது ஒரு அதிர்வு. இந்த அதிர்வு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரவுவதற்கு ஒரு ஊடகம் தேவை. அந்த ஊடகம் காற்றாகவோ, நீராகவோ அல்லது திடப் பொருளாகவோ இருக்கலாம்.
உதாரணமாக, பூமியில் நாம் பேசும்போது நமது குரல் காற்றின் மூலம் மற்றவர்களின் காதுகளுக்கு சென்று சேருகிறது. அதேபோல், கடலில் இருக்கும் திமிங்கிலங்கள் நீரின் மூலம் ஒன்றுக்கொன்று சத்தத்தை அனுப்புகின்றன.
விண்வெளியில் ஏன் சத்தம் இல்லை?
விண்வெளியில் பெரும்பாலும் வெற்றிடம்தான் உள்ளது. அதாவது அங்கு காற்று அல்லது வேறு எந்த ஊடகமும் மிகவும் குறைவாக இருக்கிறது. சத்தம் பரவ காற்று போன்ற ஊடகம் தேவைப்படுவதால், அந்த ஊடகம் இல்லாத இடத்தில் சத்தமும் பரவ முடியாது.
இதனால்தான் விண்வெளி அமைதியானது என்று கூறப்படுகிறது. உண்மையில், விண்வெளியில் நிகழும் பல பெரிய சம்பவங்களின் சத்தத்தைக் கூட நம்மால் கேட்க முடியாது.
உதாரணாமாக, பூமியில் ஒரு பெரிய எரிமலை வெடித்தால் கூட, விண்வெளியில் அதை ஒரு சிறிய சத்தமாகக் கூட கேட்க முடியாது.
ஏனெனில், அந்த சத்தம் பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டி விண்வெளிக்கு செல்ல முடியாது. காற்று இல்லாததால் அந்த அதிர்வு விண்வெளிக்கு பரவுவதில்லை.
அப்படியானால் விண்வெளி வீரர்கள் எப்படி பேசுகிறார்கள்?
விண்வெளியில் பணிபுரியும் விண்வெளி வீரர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போது அவர்கள் சாதாரணமாக குரல் எழுப்பி பேச முடியாது. அதற்குப் பதிலாக அவர்கள் ரேடியோ அலைகளை பயன்படுத்துகிறார்கள்.
ரேடியோ அலைகள் என்பது மின்காந்த அலைகள். இந்த அலைகள் காற்று இல்லாத இடத்திலும் பயணம் செய்ய முடியும். அதனால்தான் விண்வெளியில் உள்ள விண்வெளி வீரர்களும் பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையமும் ரேடியோ மூலம் தொடர்பு கொள்கின்றனர்.
விண்வெளி வீரர்களின் உடையில் இருக்கும் ஹெல்மெட்டில் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் இருக்கும். அவர்கள் பேசும் குரல் மைக்ரோபோன் மூலம் ரேடியோ சிக்னலாக மாற்றப்படுகிறது. பின்னர் அது மற்ற விண்வெளி வீரர்களின் கருவிகளுக்கு அனுப்பப்படுகிறது. அங்கே அது மீண்டும் சத்தமாக மாற்றப்படுகிறது.
இங்கு ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், விண்வெளி முற்றிலும் வெற்றிடம் என்றாலும், சில பகுதிகளில் மிகச்சிறிய அளவில் வாயுக்கள் மற்றும் துகள்கள் இருக்கலாம். அந்த இடங்களில் அதிர்வுகள் ஏற்படலாம். ஆனால், அந்த அதிர்வுகளை மனிதனின் காதுகளால் நேரடியாக கேட்க முடியாது.
சில நேரங்களில் விஞ்ஞானிகள் அந்த அதிர்வுகளை மின்னணு கருவிகளால் பதிவு செய்து பின்னர் அதை ஒலி வடிவமாக மாற்றி வெளியிடுகின்றனர்.