
நவீன தொழில்நுட்ப வளர்ச்சி நம்மை பிரமிக்க தான் வைக்கிறது. அதிலும் மருத்துவ துறையின் கண்டுபிடிப்புகள் மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றன.
பேஸ்மேக்கர் அல்லது இதயமுடுக்கி என்பது இதயத்தின் தாளத்தை சீராக்கப் பயன்படும் ஒரு சிறிய மருத்துவக் கருவியாகும். இதயத்தின் துடிப்பை சீராக்கப் பயன்படுகிறது. ஒரு மனிதனுக்கு இதயத்துடிப்பானது ஒரு நிமிடத்திற்கு 70 க்கு மேல் 100க்குள் துடிக்க வேண்டும். 70க்கு குறைந்தாலும், 100க்கு மேல் அதிகரித்தாலும் ஆபத்துதான். இந்த வகையில் பாதிக்கப்படுபவர்களுக்கு கை கொடுப்பது தான் இந்த ஃபேஸ் மேக்கர்.
இதயமுடுக்கி ஏன் பயன்படுத்தப்படுகிறது?
இதயத்துடிப்பு சீரற்றதாக இருக்கும் பொழுது, இதயத்துடிப்பு மிகவும் மெதுவாக இருக்கும்போது, இதய அடைப்பு இருக்கும்போது, இதய செயலிழப்பு ஏற்படும் போது அல்லது இதயத் துடிப்பு இயல்பான விகிதத்தில் இல்லாத பொழுது இதயமுடுக்கி பயன்படுத்தப்படுகிறது.
அரித்மியா எனப்படும் இதயத் தாள பிரச்சனைகளால் ஏற்படும் மிக வேகமாகவோ அல்லது மிக மெதுவாகவோ இதயம் துடிக்கும் நிலையை சரி செய்ய இது பயன்படுகிறது. இதன் மூலம் மயக்கம், மூச்சுத்திணறல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளைக் குறைத்து இதயத்தை இயல்பான தாளத்தில் துடிக்க உதவுகிறது.
ஃபேஸ் மேக்கர் எவ்வாறு செயல்படுகிறது?
இது ஒரு பேட்டரி மூலம் மின்சாரம் பெற்று, இதயத்தின் தசைநார்களைத் தூண்டும் மின் துடிப்புகளை உருவாக்குகிறது. இந்த மின் துடிப்புகள் இதயத் துடிப்பின் வேகத்தை கட்டுப்படுத்தி போதுமான இதயத் தாளத்தை பராமரிக்கின்றது. இதன் மூலம் இதயத்திற்கு தேவையான ரத்த ஓட்டம் தங்குதடையின்றி தொடர்ந்து கிடைக்கிறது.
இது பொதுவாக மார்பின் இடது புறத்தில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது. இதில் லீட்கள் எனப்படும் மெல்லிய கம்பிகள் இதயத்தின் உள்ளே வைக்கப்படுகின்றன. இந்த லீட்கள் இதயத்திற்கு மின் தூண்டுதல்களை அனுப்புகின்றன. இதனால் இதயம் சீராக துடிக்கிறது.
யாருக்கு பேஸ்மேக்கர் தேவைப்படும்?
இதயத்துடிப்பு மிகவும் குறைவாக இருக்கும் நோயாளிகளுக்கும், இதயத்தின் மின் கடத்தும் அமைப்பு சரியாக வேலை செய்யாதவர்களுக்கும், இதயத்தின் இயற்கை முடுக்கி போதுமான வேகத்தில் செயல்படாதவர்களுக்கும் இது தேவைப்படும்.
மருத்துவத்துறையின் நவீன கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் இந்த டிஜிட்டல் பேஸ்மேக்கர். டிஜிட்டல் தொழில்நுட்பம் பேஸ்மேக்கரை மேலும் சிறியதாகவும் ஆற்றல் திறனுடனும், நோயாளியின் உள்ளார்ந்த இதயத்துடிப்புக்கு ஏற்ப செயல்படவும் உதவுகிறது. இது மிகத் துல்லியமாக விவரங்களை டிஜிட்டல் முறையில் தெரிவிக்கின்றன. இது 4 முதல் 5 சென்டிமீட்டர் வரை தான் இருக்கும். இந்த கருவி பொருத்தியவர்கள் தொடர்ந்து ஆறு மாதங்கள் செக்கப் செய்து கொண்டே இருக்க வேண்டும். கருவி பொருத்தப்பட்டவர்கள் சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கக் கூடாது. அதற்கு இதய நோய் மருத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
ஒரு முறை பொருத்தி விட்டால் போதும். பேஸ் மேக்கர் 6 முதல் 7 ஆண்டுகள் வரை இருக்கும். டிஜிட்டல் 9 முதல் 10 ஆண்டுகள் வரை செயலாற்றும். இந்த காலகட்டத்திற்கு பிறகு பேட்டரியை மட்டும் மாற்றுவதற்கான கட்டணத்தை செலுத்தி மாற்றிக் கொள்ளலாம். பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்குக் கூட இந்தக் கருவியை பொருத்தலாம். இதைப் பொருத்துவதால் உடம்பில் வேறு எந்த மாற்றமும் ஏற்படாது. இயல்பாகவே வாழ முடியும்.
பேஸ்மேக்கரின் எதிர்காலம்:
வயர்லெஸ் பேஸ்மேக்கர்கள் இந்திய சந்தையில் பெரிய அளவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட ஃபேஸ்மேக்கர்களை எதிர்பார்க்கலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)