
பொதுவாக காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்ற உபாதைகளுக்கு நாம் நாடும் முதல் மருந்து பாராசிட்டமால். எளிதாகக் கிடைக்கக்கூடிய இந்த மருந்து, சமீபத்திய ஆய்வுகளின்படி, அதிக அளவில் உட்கொள்ளும்போது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே சிறுநீரகப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இது அதிக ஆபத்தை விளைவிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், பாராசிட்டமால் அதிகப்படியான பயன்பாடு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. பாராசிட்டமால் ஒரு வலி நிவாரணியாகவும், காய்ச்சலைக் குறைக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. இருப்பினும், அதன் அதிகப்படியான பயன்பாடு குறுகிய மற்றும் நீண்ட கால உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
குறுகிய கால விளைவுகள்:
குறுகிய காலத்தில் அதிக அளவு பாராசிட்டமால் உட்கொள்வது கல்லீரலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு நாளைக்கு 4 கிராமுக்கு மேல் பாராசிட்டமால் உட்கொண்டால், கல்லீரல் பாதிப்பு, மஞ்சள் காமாலை போன்ற பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனால், தோல் வெடிப்பு, சுவாசிப்பதில் சிரமம், ஒவ்வாமை, வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகளும் சிலருக்கு ஏற்படலாம். அரிதான சந்தர்ப்பங்களில், சிறுநீரகமும் பாதிக்கப்படலாம்.
நீண்ட கால விளைவுகள்:
நீண்ட காலமாக பாராசிட்டமால் உட்கொள்வது நாள்பட்ட கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும், இது கல்லீரலை நிரந்தரமாக சேதப்படுத்தும். இதன் அதிக பயன்பாடு சிறுநீரக செயல்பாட்டை படிப்படியாகக் குறைக்கும்.
தொடர்ந்து பாராசிட்டமால் உட்கொள்பவர்களுக்கு, உடல் மருந்துக்கு எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ளும் அபாயம் உள்ளது. இதனால், தேவைப்படும்போது வழக்கமான டோஸ் பலனளிக்காமல் போகலாம். ஒரு சிலருக்கு இது மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும்.
பாராசிட்டமால் ஒரு பொதுவான மருந்து என்றாலும், அதை கவனமாகப் பயன்படுத்துவது அவசியம். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் அதிக அளவில் அல்லது நீண்ட காலத்திற்கு பாராசிட்டமால் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, ஏற்கனவே கல்லீரல் அல்லது சிறுநீரகப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வயதானவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பாராசிட்டமால் உட்கொள்ள வேண்டும்.
தேவைப்படும்போது மட்டுமே மருந்தைப் பயன்படுத்த வேண்டும். வலி அல்லது காய்ச்சல் தொடர்ந்து இருந்தால், மருத்துவரை அணுகி சரியான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது நல்லது.