இப்போதெல்லாம் எந்த ஆவணத்தையும் ஒரு சில நொடிகளில் நகலெடுத்து நம் கையில் கொடுக்க, ஜெராக்ஸ் எனும் போட்டோகாப்பி இயந்திரங்கள் கொண்ட கடைகள் நம் வசிப்பிடத்துக்கு அருகிலேயே இயங்கிவருகின்றன. ஆனால், அப்படி ஒரு சாதனம் கண்டறிவதற்கு முன்பு ஆவணங்களை நகலெடுப்பது என்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது.
1770-களில் ஜெர்மனியைச் சேர்ந்த இயற்பியலாளரான ஜார்ஜ் கிறிஸ்டோப் லிச்டென்பெர்க், நிலைமின்னியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நகலெடுக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். இன்றைய நவீன போட்டோகாப்பி இயந்திரத்துக்கு அது அடிப்படையான அம்சமாக அமைந்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த செஸ்டர் கார்ல்சன் தனிப்பட்ட முறையில் சோதனைகள் செய்யும் ஆய்வாளர். அவர் ஒரு மின்னனு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய போது ஒரு பிரச்சினை உருவானது. முக்கியமான தஸ்தாவேஜ்களுக்குப் போதிய அளவில் பிரதிகள் இல்லை. பிரதி வேண்டுமானால் முழு ஆவணத்தையும் டைப் அடிக்க வேண்டும். அல்லது புகைப்படம் எடுக்க வேண்டும். டைப் அடித்தால் காலதாமதம் ஏற்படும், புகைப்படம் எடுக்க நிறைய செலவு செய்ய வேண்டும். எளிதாகவும் செலவில்லாமல் விரைவில் நகல் எடுக்க வழிமுறைகளை அவர் தேடினார்."எலக்ட்ரோ ஃபோட்டோ கிராபி" என்ற புதிய அறிவியல் துறையில் அவருக்கு விடை கிடைத்தது. மின்சாரத்தால் ரசாயன மாறுதல்களை ஏற்படுத்த முடியும் என்பதை எலக்ட்ரோ ஃபோட்டோ கிராபி விளக்கியது.
ஹங்கேரியைச் சேர்ந்த பால் செலனி எனும் இயற்பியல் அறிஞர் இதுதொடர்பாக ஏற்கெனவே ஆராய்ச்சி செய்திருந்தார். அந்த ஆராய்ச்சிப் புத்தகத்தை வாசித்த செஸ்டர் கார்ல்ஸன் அதிலிருந்து பல முக்கிய நுணுக்கங்களை அறிந்துகொண்டார்.
நியூயார்க்கில் கார்ல்சன் தன்னுடைய வீட்டில் சமையலறையில் சோதனைகளை மேற்கொண்டு 1937 ம் ஆண்டு தனது 31 வயதில் தன்னுடைய நகல் எடுக்கும் இயந்திரத்தை உருவாக்கினார். அதனை பதிவும் செய்தார். வெற்றிகரமாக தன் முதல் பிரதியை கந்தகம் தடவிய துத்தநாக தகட்டை உபயோகித்து உலர் அச்சு முறையில் நகல் எடுத்தார். அது உடனேயே வெற்றி பெற்று அவரை பணக்காரராக மாற்றியதா?அது தான் இல்லை. அடுத்த ஆறு வருடங்கள் அவர் தன்னுடைய கண்டுபிடிப்பைத் தூக்கி கொண்டு ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கினார். எல்லோருமே அவரை உதாசீனப் படுத்தி திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
கடைசியாக அதிர்ஷ்ட தேவதையின் கண் பார்வை அவர் மீது விழுந்தது. ஓஹியோவிலுள்ள ஒரு ஆராய்ச்சி நிலையம் அவருக்கு உதவ முன் வந்தது. கார்ல்சனின் புதிய இயந்திரத்தின் திறனை அறிந்த மற்றொரு நிறுவனமும் இவர்களோடு இணைந்தது. பல பிரதிகள் எடுத்து பரிசோதனைகள் செய்யப்பட்டன.
பேட்டெல் நினைவு நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, 1944-ல் இருவரும் முதன்முதலாக ஒரு நகலெடுக்கும் சாதனத்தைக் கண்டுபிடித்தார்கள். அதற்கு பெயராக "எலக்ட்ரோ ஃபோட்டோ கிராபி"என்று வைத்தால் விற்பனையாகாது என்பதை உணர்ந்தனர்.நகலெடுக்கும் இயந்திரத்திற்கு புதுப்பெயராக க்ஸெரோகிராபி" என்பதை உருவாக்கினார்கள். "ஜெராகிராஃபி" (Xerography) எனும் கிரேக்க வேர்ச்சொல்லிலிருந்து உருவான பதம் அது. ஜெரா என்றால் உலர்ந்த என்றும், கிராஃபி என்றால் எழுத்து என்றும் அர்த்தம். அதாவது உலர் முறையில் எழுதுதல் என்பது அதன் பொருள். இதிலிருந்து உருவான பதம் தான் "ஜெராக்ஸ்".
1947-ல் அதன் உரிமத்தை ஹாலோய்டு எனும் நிறுவனத்துக்கு அவர்கள் விற்றுவிட்டனர். 1949-ல் முதன்முதலாக வணிகப் பயன்பாட்டுக்கான போட்டோகாப்பி சாதனத்தை ஹாலோய்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ‘ஜெராக்ஸ் மாடல் ஏ’ எனப் பெயரிடப்பட்டிருந்த அந்த சாதனம் பெரும் வரவேற்பைப் பெறவில்லை. அது மேலும் மேம்படுத்தப்பட்டது. 1958-ல் அது ஹாலோய்டு ஜெராக்ஸ் எனும் பெயர் மாற்றம் கண்டது.
அதேசமயம், போட்டோகாப்பி சாதனம் முதன்முதலாக ஒரு வணிக சாதனமாக வெற்றிகரமாக உலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டது 1959 செப்டம்பர் 16-ல்தான். நியூயார்க்கின் ஷெர்ரி - நெதர்லாந்து ஹோட்டலில் அந்த சாதனத்தின் செயல்பாடு நிகழ்த்திக் காட்டப்பட்டது. அந்த சாதனத்தின் பெயர் ‘ஜெராக்ஸ் 914’. அடுத்தடுத்த ஆண்டுகளில் அதன் மேம்படுத்தப்பட்ட வடிவங்கள் சந்தைக்கு வந்தன. அதன் பின்னர் ஆவணங்களை நகலெடுப்பது என்பது மிக எளிமையான செயலாகிப்போனது.
1968 ம் ஆண்டு செஸ்டர் கார்ல்சன் இறந்த போது அவர் உருவாக்கிய ஜெராக்ஸ் மெஷின் கண்டுபிடிப்பு அவரை ஒரு கோடிஸ்வராக்கி இருந்தது. தற்போது 40 வகையான ஜெராக்ஸ் மெஷின்கள் உள்ளது.