விண்வெளி ஆர்வலர்களுக்கு உற்சாகமூட்டும் ஒரு புத்தகத்தை கனடா நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் மார்க் கார்னாவ் (பிறப்பு 23-2-1949 வயது 75) எழுதி வெளியிட்டுள்ளார்.
‘A Most Extraordinary Ride’ (ஒரு அசாதாரணமான பயணம்) என்ற இவரது புத்தகம் 2024ம் ஆண்டு வெளியீடாக வந்துள்ளது.
ராணுவ அதிகாரியான இவரை கனடா முதல் வீரராக தனது நாட்டின் சார்பில் விண்வெளி செல்ல வழி வகுத்தது. பின்னால் அவர் அரசியலுக்குத் திரும்பினார். லெஜிஸ்லேடர் ஆனார். கட்சியின் தலைமைப் பொறுப்புக்கும் போட்டி போட்டார்; ஆனால் அது வெற்றி பெறவில்லை.
அமெரிக்க வீரரான ஜான் க்ளென் எப்படி மெர்குரி 7-ல் பயணப்பட்டு பின்னர் செனேடர் ஆனாரோ பின்னால் டெமாக்ரடிக் கட்சியின் தலைமைப் பதவிக்கு 1984ல் ஆசைப்பட்டுத் தோற்றாரோ அது போலவே மார்க் கார்னாவ் இருப்பதாக விமரிசனங்கள் எழுகின்றன.
கடற்படை அதிகாரியாக மார்க் வேலை பார்த்தபோது ஒரு விளம்பரத்தைப் பார்த்தார். விண்வெளிக்குப் பறக்க யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்று இருந்த விளம்பரத்தைப் பார்த்த அவர் தான் அதற்காகவே பிறந்ததாக எண்ணி விண்ணப்பித்தார். 4300 பேர் விண்ணப்பித்தனர். அதில் தேர்வு பெற்ற ஆறு பேரில் இவரும் ஒருவர். 1984ல் STG-41G விண்கலத்தில் கனடா ஸ்பேஸ் ஏஜன்ஸியால் விண்வெளி செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்னும் இரு முறை பறந்த பின்னர் விண்வெளிக்கு டாட்டா காட்டிய அவர் அரசியலில் குதித்தார். STS-97 விண்கலத்தில் 2000ம் ஆண்டு பறந்தது தான் அவரது கடைசி விண்வெளிப் பயணம்
தனது அனுபவங்களை இந்தப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார் அவர். ‘நான் எதற்காக விண்வெளியில் பறக்கத் தேர்வு செய்யப்பட்டேன் என்பது இன்று வரை எனக்குத் தெரியாது” என்கிறார்அவர்.
விண்வெளியிலிருந்து திரும்பியவுடன் பெரிய ஹீரோ ஆன அவர் நாடெங்கும் சுற்றி எல்லா இடங்களிலும் பேசினார்.
இன்னொரு முறை விண்வெளிக்குச் செல்ல ஆசையில்லை என்று கூறும் அவர் ‘விண்வெளித்துறையில் கனடா பின் தங்கி இருக்கிறது; இன்னும் சாதிக்கவேண்டியது நிறைய இருக்கிறது’ என்கிறார்.
அரசியலில் புகுந்து போக்குவரத்துத் துறை அமைச்சரான அவர் வெளியுறவுத் துறையிலும் பிரகாசித்தார். விண்வெளி ஆர்வலர்களுக்கு அவரது விண்வெளி சாகஸங்கள் பிடித்திருக்கிறது. அவரது அரசியலை அவர்கள் பொதுவாக விரும்பவில்லை.
ஆனாலும் புத்தகம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. புத்தகத்தின் விலை 30 டாலர் (இந்திய ரூபாய் 2540)
சீனாவின் பேராசை – செங்கல்லால் சந்திரனில் ஒரு கட்டிடம்!
சந்திரனை முதலில் பிடித்து ஆக்கிரமித்து அதைத் தன்னுடையதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பேராசை சீனாவுக்கு நிரம்பவே உண்டு.
பூமியின் கீழ் ஓடு பாதையில் பூமிக்கு மேலாக 210 முதல் 280 மைலில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் டியாங்காங் விண்வெளி நிலயத்தை சீனா தனக்கென 2021ல் அமைத்துள்ளது.
இப்போது சீன விஞ்ஞானிகளுக்கு ஒரு பேராசை வந்து விட்டது
சந்திரனில் தமக்கென ஒரு கட்டிடத்தைச் செங்கல்லால் கட்ட வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர். சந்திரனுக்குப் பூமியிலிருந்து மண், செங்கல் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல ஆகும் செலவு மிக அதிகம் என்பதால் சந்திரனில் உள்ள மண்ணை எடுத்து அதிலேயே செங்கல்லைத் தயாரிக்கலாம் என்பது அவர்கள் முடிவு.
இதைக் காட்டும் ஒரு வீடியோ ஒன்றை சீன சென்ட்ரல் டெலிவிஷன் வெளியிட்டுள்ளது. ஒரு ரொபாட் இதற்காக வேலை செய்வதை அதில் காணலாம்.
சீனா தனக்கென அமைத்துள்ள டியாங்காங் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு சோதனைக் கற்களையும் அனுப்பி விட்டது.
இந்த சோதனை செங்கற்கள் விண்வெளி நிலையத்திற்கு வெளியே வைக்கப்படும். காஸ்மிக் கதிர்களால் அந்த செங்கற்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதைக் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். மூன்று விதமான உத்திகளால் ஐந்து விதமாக சந்திர மண் செங்கற்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது அழியாமல் இருக்கிறதா என்பதைப் பார்த்து விட்டு கட்டிட வேலை ஆரம்பிக்கப்படும். எதிர்கால சந்திரனின் சீனக் காலனிக்கு இப்போதே வழி வகுக்கிறது சீனா!
இதனால் எல்லா நாடுகளும் உஷாராகி விட்டன!