

சீனா கடலுக்கு அடியில் அதிவேக ரயில்களை அமைக்கும் பிரம்மாண்ட திட்டங்களைைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக வட சீனாவின் போகாய் நீரிணையில் 123 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை அமைத்து, 6 மணி நேரப் பயணத்தை 40 நிமிடங்களாக குறைக்கும் நோக்கில் உலகின் மிக நீளமான நீருக்கடி அதிவேக ரயில் பாதையை உருவாக்குகிறது. இது தொழில்நுட்பத்தில் சீனாவின் திறமையைக் காட்டுகிறது.
இதன் நோக்கம்:
சீனாவின் போக்குவரத்து கட்டமைப்பு மற்றும் பொறியியல் திறனை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். இது உலகின் மிக நீளமான நீருக்கடி அதிவேக ரயில் பாதையாக இருக்கும். இத்திட்டம் சீனாவின் போக்குவரத்து துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும். அத்துடன் உலகிலேயே நீருக்கடியில் அதிவேக ரயில் போக்குவரத்துக்கான முன்னோடியாக சீனாவை நிலை நிறுத்தும். இந்த அதிவேக ரயில் பயணம் மூலம் கடலுக்கு அடியில் சில நிமிடங்களில் இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கும் ஒரு சாகச பயணத்தை அனுபவிக்க முடியும்.
உலகிலேயே மிக நீளமான நீருக்கடி ரயில்:
இரு கடற்கரைகளுக்கு இடையே பிரம்மாண்டமான பாலம் அமைத்து இரண்டு பகுதிகளையும் சுரங்க ரயில் இணைக்கப் போகிறது. உலகின் மிக நீண்ட அதிவேக நீருக்கடி ரயில் அமைப்பை சீனா கட்டத் தயாராகி வருகிறது. இந்த பிரம்மாண்டமான திட்டம் போஹாய் நீரிணையில் (Bohai Strait) அமைய உள்ளது. இது வடக்கு கடற்கரையில் உள்ள லியாவோடாங் (Liaodong) மற்றும் கிழக்கின் ஷான்டாங் (Shandong) தீபகற்பங்களுக்கு இடையே ஒரு இணைப்பை உருவாக்கப் போகிறது. 123 கிலோமீட்டர் (75 மைல்) நீளமுள்ள இந்த ரயில் பாதையில் வெறும் 40 நிமிடங்களில் கடல் மட்டத்திற்கு அடியில் பயணித்து விட முடியும். இது உலகளாவிய வர்த்தகத்தை உயர்த்தவும் உதவும்.
220 பில்லியன் யுவான் முதலீடு:
டாலியன் (Dalian) மற்றும் யாண்டை (Yantai) போன்ற முக்கிய தொழில்துறை நகரங்களுக்கு இடையே மக்கள் மற்றும் பொருட்கள் அடிக்கடி செல்ல வேண்டியது அவசியம். எனவே இந்த புதிய திட்டம் அந்தப் பகுதி பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் பெரும் அளவில் வேகப்படுத்தும். இந்த லட்சிய பாதைக்காக சீனா செலவிடும் தொகை மிகவும் அதிகம். சுமார் 36 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (220 பில்லியன் யுவான்). சீனாவின் தீவிர முயற்சியால் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் இந்த சுரங்கப்பாதை மக்கள் பயன்பாட்டுக்கு வரலாம். இது உலகின் நீளமான நீருக்கடி அதிவேக ரயில் பாதையாக இருக்கும்.
சுரங்கத்தின் அமைப்பு மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. இரண்டு இணையான அதிவேக ரயில் பாதைகள் மற்றும் மைய சுரங்கம். மைய சுரங்கம் அவசரநிலை பயன்பாடு, பராமரிப்பு பணிகள், பாதுகாப்பு அமைப்புகள் போன்றவற்றிற்காக அமைக்கப்பட உள்ளது.
சவால்கள் நிறைந்தது:
இந்தத் திட்டம் பிரம்மாண்டமானது; அதே சமயத்தில் பெரிய சவால்களைக் கொண்டது. கடல் நீரை தடுக்கும் மிக வலுவான நீர் போகாத சுரங்க சுவர்களை அமைப்பதும், பயணிகள் சுவாசிக்கத் தேவையான காற்றோட்ட அமைப்புகளை உருவாக்குவதும் என சில முக்கியமான பாதுகாப்பு முறைகளை உருவாக்க வேண்டியிருக்கும். அத்துடன் எதிர்பாராத ஆபத்துக்களுக்கான அவசர வெளியேற்றும் பாதையும், சுரங்கம் உடையும் அபாயத்தை குறைக்கும் வகையில் அதிநவீன உலோக மற்றும் கான்கிரீட் கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் வேண்டும்.