

காலிங் பெல் எனப்படும் அழைப்பு மணி உருவாகி வந்த வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. பல நூற்றாண்டு களாக மனிதர்கள் தங்களின் வருகையை அறிவிக்கப் பயன்படுத்திய எளிய முறைகளில் இருந்து, இன்றைய அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் வரை வியக்கத்தக்க பரிணாம வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
காலிங் பெல் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு பல வீடுகளில் கதவுத் தட்டிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த எளிமையான சாதனங்கள் 16ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் பிரபலமடைந்து காலிங் பெல் கண்டுபிடிக்கப்படும் வரை கதவுப் பொருள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தின.
ஆரம்ப கால முறைகள்:
19 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு சீனாவிலும், ரோமிலும் உலோகத்தால் ஆன கதவு தட்டிகள் பயன்படுத்தப்பட்டன. வெளியில் இருப்பவர்கள் இதை கதவில் தட்டி சத்தம் எழுப்பினர். பண்டைய தமிழ் வரலாற்றில், தமிழ் பாரம்பரியத்தில் மனுநீதிச் சோழன் தனது அரண்மனை வாசலில் 'ஆராய்ச்சி மணி' எனப்படும் நீதி கேட்கும் மணி ஒன்றை அமைத்திருந்தார். இதுவும் ஒரு வகையான அழைப்பு மணி வடிவமே ஆகும்.
மெக்கானிக்கல் காலிங் பெல்:
1817 ஆம் ஆண்டில் வில்லியம் மர்டாக் என்பவர் அழுத்தப்பட்ட காற்றைக் (Compressed air) கொண்டு இயங்கும் எளிய மெக்கானிக்கல் அழைப்பு மணியை உருவாக்கினார். தொடர்ந்து 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கயிறு, சங்கிலி மற்றும் கம்பிகளால் இழுத்து ஒலிக்கச் செய்யும் இயந்திரவியல் மணிகள் பயன்பாட்டுக்கு வந்தன. கதவுக்கு வெளியே உள்ள கயிற்றை இழுக்கும்போது உள்ளே இருக்கும் மணி ஒலிக்கும் வகையில் இவை அமைக்கப்பட்டிருந்தன.
மின்சார காலிங் பெல் கண்டுபிடிப்பு:
1831இல் அமெரிக்க விஞ்ஞானியான ஜோசப் ஹென்றி மின்சாரத்தால் இயங்கும் முதல் எலக்ட்ரிக் காலிங் பெல்லைக் கண்டுபிடித்தார். மின்காந்தத் தூண்டல் (Electromagnetic induction) கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டது.
ஆரம்பத்தில் இவை விலை உயர்ந்த பேட்டரிகளில் இயங்கின. ஆனால் 1913 க்கு பிறகு வீடுகளில் மின்சார வசதி பரவலான போது மின்மாற்றிகள் (Transformers) மூலம் வீட்டு மின்சாரத்திலேயே இயங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டன.
ஒலி மாற்றங்கள்:
தொடக்கத்தில் காலிங் பெல்கள் வெறும் புஸ்ஸ் (Bzzz) என்ற ஒற்றை இரைச்சல் சத்தத்தையே எழுப்பின. 1930களில் மக்கள் கேட்க விரும்பும் இனிமையான "டிங்டாங்" போன்ற மியூசிக்கல் சத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றன.
வயர்லெஸ் மற்றும் ஸ்மார்ட் காலிங் பெல்:
சுவர்களில் வயர்கள் அமைக்க வேண்டிய தேவையில்லாமல் ரேடியோ அலைகள் மூலம் இயங்கும் வயர்லெஸ் காலிங் பெல்கள் அறிமுகமாகின.
Jamie Siminoff என்பவர் 2012-13 வாக்கில் ரிங் (Ring) என்ற பெயரில் வீடியோ கேமரா மற்றும் வைஃபை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் காலிங் பெல்லை உருவாக்கினார். இதன் மூலம் வீட்டு உரிமையாளர் உலகில் எங்கு இருந்தாலும், வாசலில் நிற்பவரைத் தனது ஸ்மார்ட்போன் வழியாகப் பார்க்கவும் பேசவும் முடியும்.
இன்றைய காலிங் பெல்கள் ப்ளூடூத் மற்றும் வைஃபை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கம்பி இல்லாமல் செயல்படக் கூடியவை. இந்த ஸ்மார்ட் அழைப்பு மணியை வாங்குவதில் பாதுகாப்பு ஒரு முக்கிய காரணியாக உள்ளது.
நவீன காலிங் பெல்களின் தொழில்நுட்பம் (Modern Wireless Bells):
இன்றைய காலகட்டத்தில் ஒயர்கள் இல்லாத வயர்லெஸ் பெல்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவை ரேடியோ அலைகள் மூலம் இயங்குகின்றன. வாசலில் உள்ள பட்டனை அழுத்தும் பொழுது ஒரு ரேடியோ சிக்னல் காற்றில் பரவி, வீட்டிற்குள் இருக்கும் ரிசீவரை அடைகிறது. அந்த ரிசீவரில் உள்ள மைக்ரோசிப் சேமித்து வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் இசையை ஸ்பீக்கர் வழியாக ஒலிக்கச் செய்கிறது.
கேமரா பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பெல் தொழில்நுட்பம்:
இது இணையத்துடன் இணைக்கப்பட்ட ஒரு நவீன தொழில்நுட்பமாகும். இதில் உயர் வரையறை கேமரா (HD camera), மைக்ரோஃபோன், ஸ்பீக்கர் மற்றும் மோஷன் சென்சார் ஆகியவை இடம் பெற்றுள்ளன. வாசலில் யாராவது நடமாடினால் மணி அடிக்காவிட்டாலும் கூட சென்சார் மூலம் நம்மை எச்சரிக்கும். இன்ஃப்ராரெட் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இருளிலும் தெளிவான வீடியோப் பதிவுகளை வழங்குகிறது.