

நாம் உணராமல் இருக்கும் நேரத்திலும் நியூட்ரினோ, ம்யூயான், பிரபஞ்ச கதிரலைகள் பூமியையும் மனித உடலையும் ஊடுருவிச் செல்கின்றன. ஒவ்வொரு மனிதரையும் தாக்கும் இத்துகள்களின் அளவு மார்பு எக்ஸ்ரே கதிர்வீச்சுக்கு நிகரான மிகச் சிறியது. மீன்பிடி வலை உவமை மூலம் இத்துகள்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது; இதன் மூலம் பிரபஞ்ச வரலாறு, மறைந்த விண்வெளி அமைப்புகள் குறித்து விஞ்ஞானிகள் புதிய தகவல்களைப் பெறுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் விண்ணிலிருந்து பிரபஞ்சத் துகள்களால் பூமி தாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவார்கள்?
சில துகள்களை நமது வளிமண்டலம் தடுக்கிறது. ஆனால் பெரும்பாலான விண்வெளித் துகள்கள் அனைத்தையும் துளைத்துக் கொண்டு பூமி மேல் பாய்கிறது. நம் மீதும்தான்!
இப்படித் துகள்களால் துளைக்கப்படுவதை நாம் அறிவதில்லை. நம் மீது இப்படி எத்தனை துகள்கள் பாய்ந்து நம்மை ஊடுருவுகின்றன, தெரியுமா? இவற்றில் விண்ணிலிருந்து வந்து நம்மை அதிகமாகத் தாக்குபவை நியூட்ரினோ என்னும் துகள்கள்தாம்!
ஒவ்வொரு விநாடியும் நூறு ட்ரில்லியன் நியூட்ரினோக்கள் நம் மீது பாய்கின்றன என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. (ஒரு ட்ரில்லியன் என்றால் ஒன்றுக்கு பக்கத்தில் 12 பூஜ்யங்களைப் போட்டால் வரும் எண்ணாகும்). லாஸ்வேகாஸில் உள்ள நெவேடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயற்பியல் பேராசிரியரான மைக்கேல் ப்ராவிகா இந்த மலைக்க வைக்கும் தகவலைத் தருகிறார். இவை பற்றி நாம் அறிவதே இல்லை என்கிறார் அவர்.
இந்த நியூட்ரினோக்கள் சூரியனிடமிருந்தும் சூரியனுக்கு அப்பாலுள்ள Galaxy எனப்படும் விண்மீன் மண்டலங்களிலிருந்து பூமிக்கு வருகின்றன.
பிரபல விஞ்ஞான பத்திரிகையான லைவ் ஸயின்ஸ் பத்திரிகைக்கு இது பற்றி விஸ்கான்ஸின் – மேடிஸன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துணைப் பேராசிரியையான லு லு ஒரு பேட்டியை அளித்துள்ளார்.
பிரபஞ்ச கதிரலைகளும் பூமியைத் தாக்கிக் கொண்டே இருக்கின்றன. இவற்றைப் பெரும்பாலும் காற்றுத்துகள்கள் தடுக்கின்றன என்கிறார் லு லு.
எதிர்மறை வினையாற்றும் ம்யூயான் (MUONS) துகள்கள் ஒன்றோ அல்லது இரண்டோ ஒவ்வொரு விநாடியும் கைகளின் மீது படுகின்றன.
பூமியில் கடல்மட்டத்தில் ஒரு சதுர செண்டிமீட்டரில் ஒரு ம்யூயான் ஒவ்வொரு நிமிடமும் ஊடுருவிச் சென்று கொண்டே இருக்கிறது. ஆக ஒவ்வொருவர் மீதும் பத்து முதல் நூறு என்ற எண்ணிக்கை வரை இவை பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.
பூமியில் எந்த இடத்தில் எவ்வளவு உயரத்தில் எந்த லேடிடியூட் என்பதையெல்லாம் பொறுத்துத்தான் இவற்றின் எண்ணிக்கையைச் சரியாகக் கணக்கிட முடியும்!
அண்டார்டிகாவில் ஐஸ்க்யூப் நியூட்ரினோ ஆப்ஸர்வேடரி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நியூட்ரினோவானது ஐஸுடன் மோதும் போது அவை செரன்கோவ் ஒளி என்னும் ஒளியை எழுப்புவதை சென்ஸர் மூலம் அறிய முடிகிறது என்கிறார் லு லு.
எத்தனை துகள்கள் என்பதை எப்படிச்சொல்ல முடியும்? கையில் ஒரு மீன்பிடி வலையை வைத்துக்கொண்டு வெள்ளமாக ஓடும் ஆற்றில் ஒன்றிரண்டு மீன்களைப் பிடித்து நழுவவிட்ட மீன்களையும் பார்த்து, ஆற்றில் ஓடும் மீன்கள் எவ்வளவு என்பதைக் கணக்கிட்டுப் பார்ப்பது போலத்தான் இதுவும் என்கிறார் அவர்.
இவை நம் மீது மோதுவதால் நாம் பாதிக்கப்படுவதே இல்லை. சாதாரணமான ஒரு மனிதருக்கு ஒரு வருடத்தில் மார்பு எக்ஸ்ரேயில் படரும் மிகச்சில கதிரலைகள் அளவேதான் இவை இருக்கின்றன.
ஒவ்வொரு விநாடியும் பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதர் மீதும் 100 டிரில்லியன் ம்யூயான் பட்டு அவை சென்றுகொண்டே இருக்கின்றன. இந்த பிரபஞ்ச துகள்கள் வெவ்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படை ஆதாரமாக அமைகின்றன. பிரமிடில் உள்ள மறைந்திருக்கும் வழிகளைக் கண்டுபிடிக்க இவை உதவுகின்றன. ப்ளாக் ஹோலைச் சுற்றி மறைந்திருக்கும் பகுதிகளை ஆராயவும் இவை உதவுகின்றன.
தொடர்ந்து இவை நம்மை ஊடுருவிச் சென்று கொண்டே இருப்பதால் பிரபஞ்சத்திலிருந்து நாம் ஒதுங்கி இருக்கவில்லை என்பதையும் நாம் பிரபஞ்சத்தின் ஒரு அங்கமேதான் என்பதையும் கணம்தோறும் உணர்ந்து கொண்டே இருக்கிறோம். அதாவது 13800 கோடி வருடங்கள் கொண்ட பிரபஞ்ச வரலாற்றில் நாமும் ஒரு அங்கம்தான் என்பதை அறியும்போது ஒரு பரவசம் ஏற்படுகிறது இல்லையா?
பிரபஞ்சத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஆச்சரியங்களுள் நம்மைத் தாக்கிக்கொண்டே இருக்கும் இந்த பிரபஞ்சத் துகள்களின் மோதலும் ஒன்று!