

Crows revenge science: காகத்தை காலையில் நாம் வைக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு கரையும் ஒரு சாதா பறவை என்றுதான் நாம் இதுவரை நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் மனிதர்களைப் போலவே அவற்றுக்கும் அதீத கோபம் வரும், முகங்களை நினைவில் வைத்து பழிவாங்கும் குணம் உண்டு என சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
காகங்களின் இந்த அசாத்தியமான மூளைத்திறன், அவற்றின் வித்தியாசமான வாழ்க்கை முறை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
அசாதாரணமான மூளைத்திறன்!
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சூழலியல் நிபுணர் ஜான் மார்ஸ்லஃப் ஒரு வித்தியாசமான பரிசோதனையை செய்து பார்த்தார். பேய் போன்ற ஒரு முகமூடியை அணிந்துகொண்டு சில காகங்களை பிடித்து அவற்றின் மீது சிறிய அடையாளங்களை வரைந்துவிட்டு பின்னர் விடுவித்தார். அந்த காகங்கள் தங்களை பிடித்த அந்த முகமூடி அணிந்த நபரை அதன் பிறகு மறக்கவே இல்லை.
அவர் எப்போது அந்த முகமூடியுடன் வந்தாலும் அந்த காகங்கள் அவரை சுற்றி வந்து ஆக்ரோஷமாக தாக்கத் தொடங்கின. மனிதர்களின் மூளையில் உள்ள உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் அமிக்டாலா (Amygdala) என்ற பகுதி காகங்களுக்கும் இருப்பதுதான் இதன் பின்னணியில் உள்ள மாபெரும் அறிவியல் ரகசியம். இதன் மூலம் மனிதர்களின் முகங்களை அவற்றால் மிக எளிதாக அடையாளம் காண முடிகிறது.
பரிசளிக்கும் குணம்!
காகங்களுக்கு வெறும் கோபம் மட்டும் வருவதில்லை, அபரிமிதமான அன்பும் நன்றியுணர்வும் கூட உண்டு. தங்களுக்கு தொடர்ந்து உணவளிக்கும் மனிதர்களிடம் இவை மிகவும் நெருக்கமாக பழகும். அந்த அன்பை வெளிப்படுத்த பளபளப்பான கற்கள், பாட்டில் மூடிகள் போன்ற சிறிய பொருட்களை தாங்கள் சாப்பிடும் இடத்தில் பரிசாக வைத்துவிட்டுச் செல்லும் பழக்கம் அவற்றுக்கு உண்டு.
தாங்கள் கொண்டு வரும் பொருள் அந்த நபருக்கு பிடித்திருக்கிறதா என்பதையும் அவை ரொம்பவே உன்னிப்பாக கவனிக்கும். இது அவற்றின் அபாரமான புத்திசாலித்தனத்தை நமக்கு தெளிவாக காட்டுகிறது. காட்டில் வாழ்ந்தாலும் சரி, நகர்ப்புறங்களில் வாழ்ந்தாலும் சரி, சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை சுலபமாக மாற்றிக்கொள்ளும் திறன் இவற்றுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது.
வித்தியாசமான இறுதிச்சடங்கு!
எங்காவது ஒரு காகம் இறந்து கிடந்தால் உடனே பத்து பதினைந்து காகங்கள் அந்த இடத்தில் வட்டமிட்டு மிக சத்தமாக கரையும் காட்சியை நாம் பார்த்திருப்போம். இதை நாம் காகங்களின் இறுதிச்சடங்கு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அது ஒரு எச்சரிக்கை மணி போல செயல்படுகிறது. இறந்த காகத்தை பார்க்கும் முதல் காகம் சத்தமிட்டு மற்ற காகங்களை அந்த இடத்திற்கு அழைக்கும்.
பின்னர் அந்த காகம் எப்படி இறந்தது, அந்த இடத்தில் வேறு ஏதேனும் ஆபத்து உள்ளதா என்பதை ஆராயவே அவை அப்படி கூட்டமாக கூடி பதற்றத்துடன் கத்துகின்றன. இது மற்ற காகங்களை பாதுகாப்பதற்கான ஒரு உயிர்வாழும் உத்தி என்று விலங்கியல் நிபுணர்கள் ஆணித்தரமாக கூறுகிறார்கள்.
காகங்கள் வெறும் சாதாரண பறவைகள் கிடையாது. மனிதர்களுக்கு இணையான ஞாபக சக்தி, உணர்ச்சிகள் மற்றும் ஆபத்தை முன்கூட்டியே உணரும் அறிவு என பல திறமைகளை தங்களுக்குள் ஒளித்து வைத்துள்ள ஒரு மாபெரும் இயற்கை அதிசயம்.