தவறான இரத்த வகை உடலில் செலுத்தப்பட்டால் என்ன நடக்கும்? ஓர் அறிவியல் பார்வை!

இரத்தம் என்பது உடலின் தற்காப்புப் படை! தவறான இரத்தம் உடலில் செலுத்தப்படும்போது ஏற்படும் பாதிப்புகள் குறித்த முழுமையான தொகுப்பு.
Blood donation
Blood donationIamge credit: AI Image
Updated on

மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஒரு நுட்பமான தற்காப்பு அமைப்பைக் கொண்டுள்ளன. இதில் இரத்தம் (Blood) என்பது வெறும் திரவம் மட்டுமல்லாமல், அது நம் உடலின் முக்கிய அங்கமாக உள்ளது. மருத்துவ உலகில் இரத்த மாற்று என்பது ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றும் ஒரு அற்புதமான முறையாகும். விபத்துகள், பெரிய அறுவை சிகிச்சைகள், பிரசவ சிக்கல்கள் போன்ற சூழ்நிலைகளில் ஒருவர் உயிர் பிழைப்பதற்கு இரத்தம் அவசியமாகிறது.

ஆனால், அந்த இரத்தம் சரியான வகையைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும். ஒருவருக்குத் தற்செயலாகத் தவறான இரத்த வகை செலுத்தப்பட்டால், அது உடலில் ஒரு மிகப்பெரிய விளைவுகளைத் தூண்டிவிடும் மற்றும் உயிருக்கும் ஆபத்தானதாக மாறக்கூடும்.

இதனை மருத்துவ உலகில் 'ABO பொருத்தமின்மை எதிர்வினை' (ABO Incompatibility Reaction) என்று அழைக்கிறார்கள்.

இரத்த வகைகளின் பின்னணி:

நமது இரத்த சிவப்பணுக்களின் மேற்பரப்பில் ஆன்டிஜென்கள் எனப்படும் புரதங்கள் உள்ளன. 'A' இரத்த வகை கொண்டவருக்கு 'A' ஆன்டிஜென்களும், 'B' வகை கொண்டவருக்கு 'B' ஆன்டிஜென்களும் இருக்கும். 'O' பிரிவினருக்கு ஆன்டிஜென்கள் இல்லை. அதே சமயம், நமது பிளாஸ்மாவில் ஆன்டிபாடைகள் எனப்படும் தற்காப்பு வீரர்கள் உள்ளனர். இவர்கள் தங்களுக்குத் தெரியாத அந்நியப் புரதங்களைக் கண்டால் உடனே தாக்கத் தொடங்குவார்கள்.

தவறான இரத்தம் உள்ளே நுழைந்தால்...

உதாரணமாக, 'A' இரத்த வகை கொண்ட ஒருவருக்கு தவறுதலாக 'B' வகை இரத்தம் செலுத்தப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது, 'A' வகை நபரின் உடலில் ஏற்கனவே 'Anti-B' ஆன்டிபாடைகள் இருக்கும். தங்களுக்குப் பரிச்சயமில்லாத 'B' ஆன்டிஜென்கள் கொண்ட இரத்த சிவப்பணுக்கள் உள்ளே வந்ததும், இந்த ஆன்டிபாடைகள் அவற்றை எதிரிகளாகக் கருதித் தாக்குகின்றன.

இதையும் படியுங்கள்:
சடங்கல்ல அறிவியல்: தமிழ் மாதப் பிறப்புகளின் பின்னே இருக்கும் வானியல் ரகசியம்!
Blood donation

ஆன்டிபாடிகள் அந்தப் புதிய இரத்த அணுக்களுடன் ஒட்டிக்கொண்டு, அவற்றை உடைக்கத் தொடங்கு கின்றன. இந்த செயல்முறைக்கு ஹீமோலிசிஸ் என்று பெயர். இரத்தக் குழாய்களுக்குள்ளேயே இரத்த அணுக்கள் வெடித்துச் சிதறுவதால், இரத்த ஓட்டம் தடைபடுகிறது.

உடைந்த இரத்த சிவப்பணுக்களில் இருந்து ஹீமோகுளோபின் நேரடியாக பிளாஸ்மாவில் கலக்கிறது. பொதுவாக அணுக்களுக்குள் இருக்க வேண்டிய ஹீமோகுளோபின், வெளியே வரும்போது நச்சாக மாறுகிறது. இது சிறுநீரகங்களின் வடிகட்டும் திறனைப் பாதித்து, சிறுநீரகச் செயலிழப்பை உண்டாக்குகிறது.

உடலின் அறிகுறிகள்:

தவறான இரத்தம் செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே உடல் தனது எதிர்ப்பைக் காட்டத் தொடங்கும். அவை,

  • உடல் முழுவதும் நடுக்கம் மற்றும் கடுமையான காய்ச்சல்.

  • மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் நெஞ்சு வலி.

  • இரத்த அழுத்தம் திடீரெனக் குறைதல்.

  • முதுகு மற்றும் இடுப்புப் பகுதியில் கடுமையான வலி (சிறுநீரகப் பாதிப்பின் அறிகுறி).

  • சிறுநீர் அடர் சிவப்பு அல்லது கருப்பு நிறத்தில் வெளியேறுதல்.

இதையும் படியுங்கள்:
AI வீடியோவா? நிஜ வீடியோவா? - கண்டுபிடிப்பது எப்படி? இதோ சில ரகசியங்கள்!
Blood donation

தீவிர விளைவுகள்:

நிலைமை மோசமானால், Disseminated Intravascular Coagulation (DIC) எனப்படும் தீவிர நிலை ஏற்படும். இதில் உடல் முழுவதும் ஆங்காங்கே இரத்தம் உரையத் தொடங்கும். இதனால் இரத்தத்தை உறைய வைக்கும் காரணிகள் அனைத்தும் தீர்ந்துபோய், இறுதியில் உடலின் மற்ற உறுப்புகளில் இருந்து தடையற்ற இரத்தப்போக்கு ஏற்பட வழிவகுக்கும். இது உயிருக்கே ஆபத்தான சூழலாகும்.

நவீன மருத்துவத்தின் பாதுகாப்பு முறைகள்:

இன்றைய நவீன மருத்துவ உலகில் இத்தகைய தவறுகள் நடப்பது மிகவும் அரிது. இரத்தம் செலுத்துவதற்கு முன்னால் இரண்டு முக்கிய சோதனைகள் செய்யப் படுகின்றன.

  • Type Testing: நோயாளி மற்றும் கொடையாளியின் இரத்த வகையைத் துல்லியமாகக் கண்டறிதல்.

  • Cross-matching: நோயாளியின் பிளாஸ்மாவையும், கொடையாளியின் இரத்த அணுக்களையும் ஒரு தட்டில் வைத்துப் பரிசோதித்தல். இரண்டும் ஒன்றோடொன்று வினைபுரியவில்லை என்றால் மட்டுமே இரத்தம் செலுத்தப்படும்.

இரத்தம் என்பது உயிரைக் காக்கும் ஒரு திரவம். ஆனால், அது சரியான வகையாக இருக்க வேண்டியது மிக அவசியம். அறிவியலின் வளர்ச்சியால் இன்று நாம் இரத்த வகைகளைப் பிரித்தறியவும், பாதுகாப்பாகப் பரிமாறவும் கற்றுக் கொண்டுள்ளோம். 'Universal Donor' என்று அழைக்கப்படும் 'O நெகட்டிவ்' இரத்தம் அவசர காலங்களில் யாருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படலாம் என்பது இயற்கையின் மற்றொரு அதிசயம்.

ஆகவே, ஆரோக்கியமான முறையில் இரத்தம் தானம் செய்வோம். முறையான பரிசோதனைகளுடன் உயிர்களைக் காப்போம்.

logo
Kalki Online
kalkionline.com