இந்தியாவின் முதல் ஆடம்பர ரயில்: டெக்கான் குயின் சாதனைப் பயணம்!

பிரிட்டிஷ் காலத்தில் தொடங்கிய டெக்கான் குயின் ரயிலின் 90 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்பு.
டெக்கான் குயின் - Deccan Queen
டெக்கான் குயின் - Deccan Queen
கலைமதி சிவகுரு

கலைமதி சிவகுரு, 1983-ல் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள் மங்கையர் மலர், தேவதை, தினத்தந்தி குடும்ப மலர் இதழ்களில் வெளியாகிப் பரிசுகள் பெற்றுள்ளன. தற்போது கல்கி குழுமத்தில் எழுதுகிறார். சமையல், ஆன்மிக வாசிப்பு, தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்.

Updated on: 

இந்திய போக்குவரத்து துறையில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு இன்று உலகின் மிகப்பெரிய ரயில்வே அமைப்புகளில் ஒன்றாக இந்தியா வளர்ந்து உள்ளதில், சில குறிப்பிட்ட ரயில்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அதில் மிகவும் முதன்மையானதும், இந்தியாவில் இயக்கப்பட்ட முதல் நீண்ட தூர ஆடம்பர எலக்ட்ரானிக் ரயிலுயமான டெக்கான் குயின் (Deccan Queen) பற்றி இங்கே பார்க்கலாம்.

வரலாறு மற்றும் தொடக்கம்: 1920 ன் இறுதியில் மும்பைக்கும் புனேவிற்கும் இடையே மின்சார ரயில் பாதைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, 1930- ஆம் ஆண்டு ஜீன் 1 அன்று கிரேட் இந்தியன் பெனின்சுலா ரயில்வே அமைப்பினால் டெக்கான் குயின் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் கலாச்சாரத் தலைநகரான புனே நகரம் “தக்காணத்தின் அரசி” (Queen of the Deccan) என்று அழைக்கப் படுகிறது. இந்த வரலாற்றுப் பெயரையே மையமாகக்கொண்டு இந்த ரயிலுக்கு “டெக்கான் குயின்” என்ற பெயர் சூட்டப்பட்டது. ஆரம்பத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் இயக்கப்பட்ட இந்த ரயில், பயணிகளின் பேராதரவு காரணமாக விரைவில் தினசரி சேவையாக மாற்றப்பட்டது.

தொழில்நுட்ப சிறப்புகளும் வடிவமைப்பு மாற்றங்களும்: பிரிட்டிஷ் காலத்தில் தொடங்கப்பட்டபோது இதில் முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மட்டுமே இருந்தன. அன்றைய காலத்திலேயே உயர்தர வசதிகளுடன் வடிவமைக்கப் பட்ட இந்தியாவின் முதல் டீலக்ஸ் ரயில் என்ற பெருமையை இது பெற்றது. ஆரம்பத்தில் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட பிரத்யேக பெட்டிகளுடன் 7 ரயில்கள் இயக்கப்பட்டன.

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) 1966 ல் தயாரிக்கப்பட்ட புதிய எஃகு பெட்டிகள் இதில் இணைக்கப் பட்டன. பயணிகளின் பாதுகாப்பையும் வேகத்தையும், உறுதி செய்ய சமீபத்திய ஆண்டுகளில் ஜெர்மன் தொழில்நுட்ப வடிவிலான அதிநவீன LBH பெட்டிகளுடன் இந்த ரயில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

டெக்கான் குயின் - Deccan Queen
டெக்கான் குயின் - Deccan Queen

இதன் தனித்துவமான சிறப்பம்சங்கள்: இந்திய ரயில்வேயின் வழக்கமான ரயில்களில் உணவருந்துவதற்கு என்றே மேஜை, நாற்காலி களுடன் கூடிய டைனிங் கார் வசதி கொண்ட ஒரே ரயில் இதுவே ஆகும்.

இதில் வழங்கப்படும் சுடச்சுட சுவையான சிற்றுண்டிகள் பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்றவை. அவை சீஸ் ஆம்லெட் வெண்ணெய் மற்றும் பாலாடைக்கட்டி தாராளமாகச் சேர்க்கப்பட்டு தயார் செய்யப்படும் ஆம்லெட்,

பன்னீர் கட்லெட் & காய்கறி கட்லெட் மொறுமொறுப்பான வெளிப்புறத்துடன், காரசாரமான மசாலா மற்றும் பன்னீர்/காய்கறிகள் நிறைக்கப்பட்ட கட்லெட்டுகள்,

பேடா மற்றும் சிற்றுண்டிகள் மகாராஷ்டிர பாரம்பரிய சுவையான உருளைக்கிழங்கு வடை, மிசால் பாவ் மற்றும் பட்டாடா வடை போன்ற சிற்றுண்டிகள்,

டோஸ்ட் மற்றும் காபி/டீ ரயிலின் காலை நேரப் பயணத்தின்போது வழங்கப்படும் ‘பட்டர் டோஸ்ட்’ மற்றும் சூடான ஃபில்டர் காபி/டீ.

மகளிருக்கான முதன்மைச் சேவை: 1966- ஆம் ஆண்டில், இந்திய ரயில்வே வரலாற்றிலேயே முதன் முறையாகப் பெண்களுக்காகப் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட தனித் காரை அறிமுகப்படுத்திய ரயில் இதுதான்.

மும்பை – புனே இடையே தினமும் பயணிக்கும் ஆயிரக்கணக்கான அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் முக்கிய போக்குவரத்து சாதனமாக இது விளங்குகிறது. 90 ஆண்டுகளைக் கடந்து இயங்கி வந்தபோதிலும், இதன் துல்லியமான நேரப்பராமரிப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது

டெக்கான் குயின் இந்திய ரயில்வேயின் மின்மயமாக்கல் மற்றும் அதிவேகப் பயணத்தின் முன்னோடியாகும். ஒன்பது தசாப்தங்களுக்கும் மேலாகத் தனது கம்பீரமான சேவையால் மகாராஷ்டிர மக்களின் பண்பாட்டு அடையாளமாகவும், இந்திய ரயில்வே வரலாற்றின் பொக்கிஷமாகவும் திகழ்கிறது.

இதையும் படியுங்கள்:
தண்ணீருக்கு அடியில் இருந்து வெளிவந்த 'மரண ரயில்வே' ரகசியம்: தாய்லாந்தில் தமிழர்களின் ரத்த வரலாறு!
டெக்கான் குயின் - Deccan Queen