
தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருவது நாம் அறிந்ததே. சாட்ஜிபிடி போன்ற முன்னணி ஏஐ தளங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், சீனாவைச் சேர்ந்த டீப்சீக் ஏஐ என்ற புதிய வரவு, டெக் ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த டீப்சீக் ஏஐ தற்போது ஸ்மார்ட்போன் சந்தையிலும் கால் பதிக்க தயாராகிவிட்டது என்பதுதான் லேட்டஸ்ட் செய்தி.
புகழ்பெற்ற ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹானர், டீப்சீக் ஏஐ நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இதன் விளைவாக, ஹானர் ஸ்மார்ட்போன்களில் டீப்சீக் ஆர்1 என்ற அதிநவீன ஏஐ மாடல் ஒருங்கிணைக்கப்படவுள்ளது. இது ஹானர் போன்களில் ஏற்கனவே உள்ள யோயோ அசிஸ்டன்ட் மூலம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் முதலில் சீனாவில் மேஜிக்ஓஎஸ் 8.0 மற்றும் அதற்குப் பின் வெளியான ஹானர் மாடல் போன்களில் அறிமுகமாகிறது.
டீப்சீக் ஏஐ, சாட்ஜிபிடிக்கு ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது மட்டுமல்லாமல், சில டெக் நிறுவனங்களின் பங்கு சந்தை மதிப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் பலவும் ஏஐ தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. இந்தியாவிலும் கூட புதிய ஏஐ மாடல் ஒன்று உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், டீப்சீக் ஏஐ ஸ்மார்ட்போன்களில் வருவது டெக் உலகை மேலும் உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளது.
சீனாவைத் தொடர்ந்து, ஹானர் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் தனது புதிய மாடல்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியிருப்பதால், இந்தியாவிலும் டீப்சீக் ஏஐ ஒருங்கிணைக்கப்பட்ட ஹானர் போன்கள் விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது. யோயோ அசிஸ்டன்ட் ஏற்கனவே இந்திய பயனர்களுக்கு அறிமுகமான ஒன்று என்பதால், டீப்சீக் ஏஐ உடன் இணைந்து இது எப்படி செயல்படப் போகிறது என்பதைக் காண அனைவரும் ஆர்வமாக உள்ளனர். கூகிள் அசிஸ்டன்ட் மற்றும் ஜெமினி ஏஐ கூட்டணி போல, யோயோ அசிஸ்டன்ட் மற்றும் டீப்சீக் ஆர்1 கூட்டணி ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் ஒரு புதிய அனுபவத்தை தரலாம்.
இருப்பினும், டீப்சீக் ஏஐக்கு சில நாடுகளில் தடை விதிக்கப்படலாம் என்ற செய்திகளும் வருகின்றன. ஆஸ்திரேலியா, இத்தாலி, தைவான் போன்ற நாடுகள் ஏற்கனவே தடை விதித்துள்ளன. அமெரிக்காவும் தடை விதிக்க பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சவாலான சூழலில், டீப்சீக் ஏஐ ஸ்மார்ட்போன்களில் ஒருங்கிணைவது ஒரு முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. சீன நிறுவன ஸ்மார்ட்போன்கள் ஆசிய நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்படுவதால், இந்த சந்தையை டீப்சீக் குறிவைக்கலாம்.
இந்தியாவில் கூகிள் ஜெமினி, மெட்டா ஏஐ, சாட்ஜிபிடி போன்ற ஏஐ மாடல்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. இந்த சந்தையில் டீப்சீக் ஏஐ எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.