

எரிக் கார்னெல் (Eric Cornell) நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி. (பிறப்பு 19-12-1961 வயது 65) போஸ் – ஐன்ஸ்டீன் கண்டன்சேட் பற்றிய இவரது ஆய்வுக்காக இயற்பியலில் 2001ம் ஆண்டிற்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது.
கார்னெலின் கடவுள் பற்றிய கட்டுரை உலகமெங்கும் விரைவாகப் பரவி அனைவரையும் ஈர்த்தது. 2005ம் ஆண்டு டைம் பத்திரிகையில் இவரது முழுக் கட்டுரை வெளிவந்தது.
அமெரிக்கன் அகாடெமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் ஸயின்ஸில் அவர் சேரும் போது அவர் ஆற்றிய உரை அனைவரையும் பிரமிக்க வைத்தது.
வானம் ஏன் நீல நிறத்துடன் இருக்கிறது என்ற கேள்வியை அவர் கேட்டார். இதற்கு இரண்டு விதமான தீர்வுகளைத் தான் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஒன்று ராலேயின் ஒளிச் சிதறல் பற்றிய ஆய்வின் முடிவுகள்.
ஒளியானது பலவிதமான ஒளிக்கதிர்களைக் கொண்டுள்ளது. சிவப்பில் ஆரம்பித்து நீலத்தில் முடியும் வரை பல வண்ணங்கள் அதில் உண்டு.
சிவப்பு பகுதியில் நீளமான அலைகளும் நீலப் பகுதியில் நீளம் குறைந்த அலைகளும் உள்ளன. சூரியனிலிருந்து கிளம்பி இந்த ஒளிக்கற்றைகள் பூமியை அடையும் போது சிதறுகின்றன.ஆகவே பூமிக்கு இவை வந்து சேரும் போது நீலக் கதிர்களே மிஞ்சுகின்றன. ஆகவேதான் வானம் நீல நிறமாய் இருக்கிறது. இதை ராலே கண்டு பிடித்து உலகிற்கு உணர்த்தினார். இதைத் தொடர்ந்தே ஒளி இயலில் ஏராளமான கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளிடம் இருந்த கடவுள் நம்பிக்கை:
சரி, கார்னெலில் அடுத்த தீர்வு என்ன?
அவர் கூறினார்: “ஒருவேளை கடவுள் வானமானது நீல நிறம் கொண்டிருப்பதையே விரும்பி இருக்கலாம். கடவுளை நீங்கள் ஏன் அப்படி விரும்பினீர்கள் என்று யாரும் கேள்வி கேட்க முடியாது.”
கார்னெல் அவையோரிடம் ராலே எப்படி வானம் நீல நிறமாக ஜொலிக்கிறது என்பதைக் கூறினாரே தவிர அது ஏன் நீல நிறமாக ஜொலிக்கப்பட வேண்டும் என்பதைக் கூறவில்லை என்றார்.
அறிவியல் எப்போதுமே எப்படி என்ற கேள்விக்கு பதிலைத் தருகிறது. ஆனால் ஏன் என்ற கேள்விக்கு பதிலை ஒருபோதும் தருவதில்லை.
நீல நிறமாக இல்லாமல் வேறு வண்ணத்தைக் கூட ஒளிக்கற்றை கொண்டிருக்கலாமே! இதைக் கூறிய கார்னெல் மதம் என்பது வேறு; அறிவியல் என்பது வேறு என்றார்.
மதம் கூறும் கோட்பாடுகளை அறிவியல் கொள்கை களுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது என்பதே அவரது அறிவுரை. தமிழுக்குள்ள இலக்கணம் வேறு; ஆங்கிலத்திற்குள்ள இலக்கணம் வேறு. அந்தந்த மொழிக்கு அதற்குரிய இலக்கணத்தைக் கடைப்பிடித்து பயனுற வேண்டும்.
தூங்கும்போது ஒரு சிங்கம் உங்களைத் துரத்தி வருவதாக கனவு காண்கிறீர்கள். உடல் படபடக்கிறது. ஆனால் விழித்து எழுந்தவுடன் எங்கே அந்த சிங்கம் என்று கேட்பதில்லை. அந்தந்த நிலையில் மனம் காண்பது உண்மை.
அதேபோல இருக்கின்ற ஒரே சத்தியமானது – கடவுளானது – மத ரீதியில் கோட்பாடுகளையும் அறிவியல் ரீதியில் கொள்கைகளையும் தருகிறது. எந்த நிலையில் இதை நாம் நம்ப விரும்புகிறோமோ அது நம் விருப்பத்தைப் பொறுத்திருக்கிறது.
கார்னெலின் உரையை அனைவரும் ஆரவாரித்து வரவேற்றனர். இது உலகெங்கும் இறை நம்பிக்கை உள்ளவர்களிடம் பரவியது.
நியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை வியந்த பேரண்டத்தின் கடவுள் நம்பிக்கை:
1900ம் ஆண்டு முதல் 2000 ஆண்டு முடிய நூறாண்டு காலத்தில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளில் 65 சதவிகிதம் அறிஞர்கள் கடவுள் இருப்பதை நம்புகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
நியூடன் முதல் ஐன்ஸ்டீன் வரை உலகின் பேரறிஞர்கள் இறைவனைப் பற்றிக் கூறும் விவரங்கள் பிரமிக்க வைப்பவை. இவற்றைப் படிப்போம், உயர்வோம்!
Reference: Time Magazine - Science and Religion Archive