
மரபியல் ரீதியாக ஒரே மாதிரியான உயிரினங்களை உருவாக்கும் அறிவியல் செயல்முறைக்கு குளோனிங் என்று பெயர். இதில் உயிரினத்தின் டிஎன்ஏ தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. இம்முறையில் பல சோதனைகள் நடத்திய பின்பு தான், பல்வேறு உயிரினங்கள் குளோனிங் செய்யப்பட்டன. அவ்வகையில் இந்தியாவில் முதன்முறையாக குளோனிங் செய்யப்பட்ட பசுங்கன்று எது என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
இயற்கையாகவே சில வகையான உயிரினங்கள், பாலினப் பெருக்கத்தின் மூலம் குளோன்களை உருவாக்குகின்றன. பயோடெக்னாலஜி துறையில், டிஎன்ஏ மூலக்கூறுகள் மற்றும் செல்கள் ஆகியவற்றின் குளோன் செய்யப்பட்ட உயிரினங்களை அச்சு அசலாக நகலெடுப்பதை குளோனிங் என்பர். அறிவியல் உலகில் மிகப்பெரும் பேசுபொருளாக இருக்கும் குளோனிங் முறை குறித்து பல்வேறு நாடுகளில் தொடர் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆராய்ச்சியில் இந்திய விஞ்ஞானிகளும் உள்ளனர் என்பது பெருமைமிகு விஷயமாகும்.
முதன்முதலில் 1996 ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தான், டோலி என்ற செம்மறி ஆட்டை குளோனிங் முறையில் உருவாக்கினார்கள். இது அப்போதைய காலகட்டத்தில் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால், குளோனிங் முறை மற்ற நாடுகளிலும் பிரபலமடையத் தொடங்கியது. ஒருசில நாடுகளில் விலங்குகளைக் குளோனிங் செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை.
தொழில்நுட்பம் அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில், அறிவியல் ஆராய்ச்சிகளும் மேம்பாடு அடைந்துள்ளன. அவ்வப்போது வெளிவரும் புதுப்புது கண்டுபிடிப்புகள், உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் பெருமையை தலை நிமிர்த்துகிறது. அவ்வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு குளோனிங் செயல்முறையில் புதிய சாதனையைப் படைத்தனர் இந்திய விஞ்ஞானிகள். இந்தச் சாதனை குளோனிங் புரட்சியில் புதிய மைல்கல்லாக பார்க்கப்பட்டது.
குளோனிங் தொடர்பான ஆராய்ச்சியில், ஹரியானாவில் இருக்கும் தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் (NDRI) விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியில் சாஹிவால் மற்றும் கிர் ஆகிய இரண்டு மாட்டினங்களைக் குளோனிங் செய்தனர். இதில் கடந்த 2023 மார்ச் 16 ஆம் தேதி ஒரு பசுங்கன்று பிறந்தது. இதற்கு ‘கங்கா’ என்ற பெயரையும் விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர். இதுவே குளோனிங் முறையில் பிறந்த நாட்டின் முதல் பசுங்கன்று ஆகும். பிறக்கும் போது இந்தக் கன்று சுமார் 32 கிலோ எடையுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2009 ஆம் ஆண்டில் இதே தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தான், நாட்டில் முதல்முறையாக குளோனிங் செய்யப்பட்ட எருமைக் கன்றையும் உருவாக்கினார்கள். இந்த எருமைக்கு கரிமா என்று பெயர் சூட்டப்பட்டது. இரண்டு வருடங்கள் மட்டுமே உயிர் வாழ்ந்த கரிமா, 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உயிரிழந்தது. இதற்கு அடுத்த ஆண்டிலேயே 2 எருமைக் கன்றுகள் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் குளோனிங் செயல்முறை வளர்ச்சிக்கு, மத்திய அரசின் ஆதரவு தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.