தண்ணீருக்கு நினைவாற்றல் உண்டா? அறிவியலும் உண்மையும்!

water
waterImg credit: AI Image
Published on

தண்ணீருக்கு ஞாபக சக்தி இருக்கிறது என்ற செய்தி பல காலமாக சமூக வலைதளங்களில் உலா வருகிறது. குறிப்பாக, தண்ணீரிடம் அன்பாகப் பேசினால் அது அழகாக மாறும் என்றும் சிலர் கூறுகிறார்கள். இது உண்மையா அல்லது வெறும் கற்பனையா எனத் தெரிந்துகொள்வோமா?

Water Memory என்றால் என்ன?

ஒரு பொருளைத் தண்ணீரில் கரைத்துவிட்டு, பிறகு அந்தப் பொருளை தண்ணீரிலிருந்து முழுவதுமாக நீக்கினாலும், தண்ணீர் அந்தப் பொருளின் குணத்தை ஞாபகம் வைத்திருக்கும் என்பதே இந்தக் கோட்பாடு.

1988-ல் ஜாக் பென்வெனிஸ்டு என்ற விஞ்ஞானி, ஒரு பொருள் அந்தத் தண்ணீரில் இல்லாத நிலையிலும் தண்ணீர் அந்தப் பொருளின் வீரியத்தைக் காட்டுகிறது என்று ஒரு கட்டுரையை வெளியிட்டார். இது அறிவியலின் அடிப்படை விதிகளுக்கே சவாலாக இருந்தது.

அறிவியலில் ஒரு பரிசோதனை உண்மையானது என்றால், அதை யார் செய்தாலும் ஒரே முடிவு வரவேண்டும். ஆனால், மற்ற விஞ்ஞானிகள் அதே பரிசோதனையைச் செய்தபோது ஜாக் சொன்ன முடிவுகள் கிடைக்கவில்லை. எனவே, நிரூபிக்க முடியாததால் இந்தக் கருத்து அறிவியல் பூர்வமாக ஏற்கப்படவில்லை.

தண்ணீரிடம் நல்ல வார்த்தைகளைச் சொன்னால் அழகான பனிப் படிகங்கள் உருவாகும் என்று மசாரு எமோட்டோ சில புகைப்படங்களை வெளியிட்டார். ஆனால், இவரது சோதனைகள் முறையான அறிவியல் கட்டுப்பாடுகளுடன் செய்யப்படவில்லை. அவர் தனக்குத் தேவையான படிகங்களை மட்டும் தேர்ந்தெடுத்துப் புகைப்படம் எடுத்தார் என்பதுதான் உண்மை. எனவே, இது வெறும் ஒரு கலை சார்ந்த விஷயமாகவே பார்க்கப் படுகிறதே தவிர, அறிவியலாக அல்ல.

இதையும் படியுங்கள்:
ChatGPT-யில் ஒரு கேள்வி கேட்டால் இத்தனை லிட்டர் தண்ணீர் காலியாகுமா... அதிர்ச்சியூட்டும் ஏஐ ரகசியம்!
water

தண்ணீர் உண்மையில் எப்படிச் செயல்படுகிறது?

தண்ணீர் மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று ஹைட்ரஜன் பிணைப்பு மூலம் இணைந்திருக்கும். இந்த இணைப்புகள் ஒரு விநாடியின் மிகச்சிறிய பகுதியில் (பிக்கோ விநாடி - 10−12) உடைந்து மீண்டும் சேரும். இதனால், தண்ணீரின் கட்டமைப்பு நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும். எனவே, ஒரு பொருளின் தகவலை நீண்ட நேரம் சேமித்து வைக்கும் அளவுக்கு தண்ணீருக்கு நிலையான கட்டமைப்பு கிடையாது.

தற்போதைய நவீன ஆய்வுகளில், தண்ணீர் மூலக்கூறுகள் சில குறிப்பிட்ட சூழல்களில் சிறிது நேரம் ஒரு ஒழுங்கான அமைப்பில் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இது நினைவாற்றல் அல்லது ஞாபக சக்தியுடன் தொடர்புடையது அல்ல. இது வெறும் வேதியியல் மாற்றம் மட்டுமே.

சுருக்கமாகச் சொன்னால், தண்ணீருக்கு மனிதனைப் போல நினைவாற்றல் கிடையாது. நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தைக்கும் தண்ணீருக்கும் நேரடித் தொடர்பு இருப்பதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை. அறிவியல் என்பது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது. அந்த வகையில் நீர் நினைவாற்றல் என்பது ஒரு நிரூபிக்கப்படாத உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com