எட்டுக் கோள்களின் கதை நமக்குச் சொல்லும் மிகப்பெரிய விண்வெளி ரகசியம் என்ன தெரியுமா?

கிரேக்கம், லத்தீன், பிரெஞ்சு மற்றும் தமிழ் வழியே வளர்ந்த கோள் பற்றிய அறிவியல் புரிதல்
சூரியக் கோள்கள் - Eight Planets
சூரியக் கோள்கள் - Eight Planets
கலைமதி சிவகுரு

கலைமதி சிவகுரு, 1983-ல் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள் மங்கையர் மலர், தேவதை, தினத்தந்தி குடும்ப மலர் இதழ்களில் வெளியாகிப் பரிசுகள் பெற்றுள்ளன. தற்போது கல்கி குழுமத்தில் எழுதுகிறார். சமையல், ஆன்மிக வாசிப்பு, தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்.

Updated on: 

வானம் எப்போதும் மனிதனின் வியப்பிற்கும் ஆய்வுக்குமான களமாக இருந்து வருகிறது. இரவு வானில் ஒளிரும் விண்மீன்களுக்கு இடையே சில வான்பொருள்கள் இடம் மாறி நகர்வதை கண்ட பண்டைய மனிதர்கள், அவற்றிற்குப் பெயரிட்டு அவற்றின் இயக்கங்களை ஆராயத் தொடங்கினர்.

இன்று நாம் பயன்படுத்தும் ‘பிளானட்’(planet) என்ற ஆங்கிலச் சொல்லும், ‘கோள்' என்ற தமிழ்ச் சொல்லும் வானியல் வரலாற்றையும் மொழி வளர்ச்சியையும் இணைக்கும் சுவாரசியமான பாகங்களாகப் திகழ்கின்றன.

'பிளானட்' என்ற ஆங்கிலச் சொல் பழங்கால கிரேக்க மொழியில் இருந்து தோன்றியது. கிரேக்க மொழியில் உள்ள ‘பிளானெட்டஸ் (planetes) என்ற சொல்லுக்கு ‘சுற்றித் திரிபவர்' என்று பொருள்.

பண்டைய வானியலாளர்கள் வானத்தைக் கவனித்த போது பெரும்பாலான விண்மீன்கள் தமக்குள் மாறாத அமைப்பில் நிலையாக இருப்பதைக் கண்டனர். ஆனால், சூரியன், சந்திரன், புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஏழு வான்பொருள்கள் மட்டும் பின்னணியில் உள்ள விண்மீன்களுக்கிடையே இடம் மாறிச் சுற்றித் திரிவதை உணர்ந்தனர். அவற்றை அவர்கள் 'அஸ்டெரெஸ் பிளானெட்டாய்' (சுற்றித் திரியும் விண்மீன்கள் என்று அழைத்தனர்.

இதையும் படியுங்கள்:
மணலுக்குள் புதைந்திருக்கும் ரகசியங்கள்: எகிப்து பிரமிடுகள் சொல்லும் வியக்க வைக்கும் கதை!
சூரியக் கோள்கள் - Eight Planets

காலப்போக்கில் இச்சொல் லத்தீனில் planeta மற்றும் பழைய பிரெஞ்சு மொழியில் planete என்றும் இருந்தது. இவை இரண்டின் வழியாக ஆங்கிலத்தில் planet என நிலைபெற்றது.

தமிழில் வான்பொருட்களைக் குறிக்கப் பயன் படுத்தப்படும் ‘கோள்’ என்ற சொல், ‘கொள்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து உருவானது. பற்றுவது, உள்வாங்குவது, வளைத்துக்கொள்வது என்பதே இதன் அடிப்படைப் பொருளாகும். ஒரு விண்மீனின் ஈர்ப்பு விசையால் கட்டுண்டு அதனைச் சுற்றிவரும் தன்மையையும், ஈர்ப்பு விசையின் வழியே தன் சுற்றும் பாதையில் உள்ள பொருட்களை ஈர்த்துக்கொள்ளும் இயல்பையும் இச்சொல் நுட்பமாகக் குறிக்கிறது.

பழங்காலத் தமிழில் ‘கோள்’ என்பது வான்பொருட்களை மட்டுமல்லாமல் கருத்து, நம்பிக்கை, பாம்பு, யானை பிடிக்கும் முறை, பருவநிலை மாற்றம், கொள்கை, பிறரைப் பற்றி புறங்கூறுதல் எனப் பல பொருட்களில் வழங்கப் பட்டுள்ளது. வானில் நகரும் கோள்களின் இயக்கங்களைத் தமிழர்கள் நுணுக்கமாகக் கண்காணித்து, பருவமாற்றங்கள், கடல் பயணங்கள் மற்றும் வேளாண்மைக் காலங்களைக் கணிப்பதற்குப் பயன்படுத்தினர்.

காலப்போக்கில் வானியல் அறிவியல் வளர்ந்தபோது, எது ‘கோள்' என்பதைத் துல்லியமாக வரையறுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் (IAU) வரையறைப்படி, ஒரு வான்பொருள் ‘கோள்’ எனக் கருதப்பட மூன்று தகுதிகள் அவசியம்:

அது ஒரு விண்மீனைச் சுற்றி வரவேண்டும்.

தனது சொந்த ஈர்ப்பு விசையால் கோள வடிவைப் பெற்றிருக்க வேண்டும்.

தனது வட்டப்பாதையில் உள்ள மற்ற சிறிய வான் பொருட்களைத் தனது ஈர்ப்பால் ஈர்த்தோ அல்லது விலக்கியோ சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இந்த வரையறையின் அடிப்படையில், நம் சூரியக் குடும்பத்தில் (சூரியக் கோள்கள்) 8 கோள்கள் உள்ளன. அவற்றின் அமைப்பு மற்றும் தன்மைகளைக் கொண்டு 2 வகைகளாக வகைப்படுத்தலாம்.

சூரியக் கோள்கள் - Eight Planets
சூரியக் கோள்கள் - Eight Planets

1) புவிநிகர் கோள்கள் (உட்புறக் கோள்கள்): புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் போன்ற கோள்கள் இடம் பெறும். இவை பாறைகளால் ஆனவை.

2) பெருங் கோள்கள் (வெளிப்புறக் கோள்கள்): வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் போன்ற கோள்கள் இடம் பெறும். இவை வளிமங்கள் (gas) மற்றும் பனிக்கட்டிகள் நிறைந்தவை.

‘சுற்றித் திரிபவர்’ என்ற பண்டைய கிரேக்கக் கண்ணோட்டத்திலிருந்து தொடங்கி, ‘ஈர்ப்பால் பற்றுவது’ என்ற தமிழ்ச் சொல்லின் பொருளாழம் வரை, கோள்கள் குறித்த புரிதல் மனித அறிவின் வளர்ச்சியைக் காட்டுகிறது. பண்டைய வானியலாளர்களின் வெற்றுக் கண் அவதானிப்புகள் இன்று நவீன அறிவியல் வரையறைகளாகவும் விண்வெளி ஆய்வுகளாகவும் விரிவடைந்து, பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ளும் நமது பயணத்தைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன.

இதையும் படியுங்கள்:
பூமி தட்டையா, உருண்டையா? பண்டைய மதங்களும் உண்மைகளும்!
சூரியக் கோள்கள் - Eight Planets