நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோலில் எத்தனால் (Ethanol) கலக்கப்படுபடுகிறது என்பது அனைவருக்கும் தெரியுமா? அதனால் ஏற்படும் நன்மைகள் ஒரு புறம் இருந்தாலும்; அதனால் ஏற்படக்கூடிய தீமைகளைப் பற்றித் தெரிந்துகொள்வோமோ? எத்தனால் கரும்பு, சோளம், மொலாசஸ் (molasses) போன்ற புதுப்பிக்கத்தக்க உயிரி எரிபொருளிலிருந்து (renewable biofuel) பெறப்படுகிறது. கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும், புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதை (fossil fuels) குறைப்பதற்கும் பெட்ரோலுடன் எத்தனால் அதிகளவில் கலக்கப்படுகிறது.
இந்த செயல்முறை இந்தியாவில் எத்தனால் கலப்பு பெட்ரோல் (Ethanol Blended Petrol EBP) திட்டத்தின் கீழ் 2000களின் முற்பகுதியில் தொடங்கியது. இந்த முயற்சி 2014க்கு பிறகு வேகம் பெற்றது. 2022ஆம் ஆண்டுக்குள் 10% கலப்பு (E10) அடைந்து; 2025இல் 20% (E20) ஐ எட்டியுள்ளது. இந்த எத்தனால் நொதித்தல் (fermentation) மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரைகள் நொதித்தல் மூலம் ஆல்கஹாலாக (Alcohol) மாற்றப்பட்டு எத்தனலாக வருகின்றன.
இது பெட்ரோலைவிட அதிக ஆக்டேன் மதிப்பீட்டைக் (higher octane rating) கொண்ட தூய்மையான எரிபொருளாக (cleaner-burning fuel) அமைகிறது; விவசாயத்திற்கும் வலுசேர்க்கிறது.
அப்போ வாகனங்களுக்கு..?
இருப்பினும் எத்தனால் கலந்த எரிபொருள் குறிப்பிடத்தக்க சவால்களைத் தருகிறது. பெட்ரோலைவிட எத்தனால் குறைந்த ஆற்றல் அடர்த்தியைக் (lesser energy density) கொண்டுள்ளது; இது வாகனங்களின் மைலேஜைக் குறைக்க வழிவகுக்கிறது. பொதுவாக 2023 முந்தைய தயாரிக்கப்பட்ட வாகனங்களில் E10 பெட்ரோலால் 3–5% குறைபாடும், E20 பெட்ரோலால் 8–10% வரை மைலேஜ் குறைபாடும் இருக்கும். இதுவே 2023க்கு பின் தயாரிக்க வாகனங்களில் இதனால் 2–4% வரைதான் மைலேஜ் குறையக்கூடும்.
பின் எத்தனால் ஒரு ஹைக்ரோஸ்கோபிக் (hygroscopic) அதாவது இது ஈரப்பதத்தை உறிஞ்சக்கூடியது. இது எரிபொருள் அமைப்புகளில் (fuel systems) குறிப்பாக பழைய வாகனங்களில் அரிப்பை (corrosion) ஏற்படுத்தும். 2023க்கு முந்தைய வாகனங்களில் ரப்பர் குழாய்கள் (rubber hoses), கேஸ்கட்கள் (gaskets) மற்றும் எரிபொருள் பம்புகள் (fuel pumps) போன்ற விஷயங்கள் வேகமாக சிதைந்து, கசிவுகள் உண்டாக்கி வாகனத்தில் சேதத்தை ஏற்படுத்தலாம்.
பழைய வாகனங்களை எப்படி பாதுகாக்கலாம்?
2023க்கு முந்தைய பழைய வாகனங்களைப் பாதுகாக்க உரிமையாளர்கள் சில தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம். பாதிக்கப்படக்கூடிய பாகங்களை எத்தனால்-எதிர்ப்பு பொருட்களால் (ethanol-resistant materials) மாற்றி அமைக்கலாம். வாகனம் நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அதன் எரிபொருள் தொட்டிலில் (tank) fuel stabiliser ஐ பயன்படுத்தலாம். இது எரிபொருள் தொட்டிலில் நடக்கும் ஈரப்பத உறிஞ்சுதலைக் குறைக்க உதவும்.
இதற்கு மாருதி சுசுகி (Maruti Suzuki) போன்ற உற்பத்தியாளர்கள் 15 ஆண்டுகளான பழமையான கார்களுக்கு மலிவு விலையில் E20 மேம்படுத்தல் கருவிகளை (upgrade kits) வழங்குகிறார்கள்.
உலகளவில் இதன் நிலவரம்:
உலகளவில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் சீனா போன்ற நாடுகள் எத்தனால் கலவைகளைப் பரவலாக உபயோகிக்கின்றன. குறிப்பாக பிரேசில் நாட்டில் எத்தனால்-பெட்ரோல் (from pure petrol to 100% ethanol (E100)) என்று இரு கலவையிலும் நன்றாக இயங்கும் (flex-fuel vehicles) வாகனங்களைப் பெரும்பாலும் உபயோகிக்கின்றன.
சில பிராந்தியங்களில் வாகனங்களுக்கு எத்தனால் இல்லாத பிரீமியம் எரிபொருட்களை (E0%) வழங்குகின்றன. இருப்பினும் இது கிடைப்பது அரிது மற்றும் விலை உயர்ந்ததாகவும் உள்ளது. இந்தியாவில் XP100 by Indian Oil மற்றும் Power100 by HPCL இந்த வகை எத்தனால் இல்லாத பெட்ரோலை ஒரு லிட்டருக்கு ₹160 தருகிறார்கள்.