
தற்போது பிரபலமாக இருக்கும் மின்சாரத்தில் இயங்கும் மின்சார கார்கள் நவீன காலத்தில் உருவானது அல்ல. அவை பெட்ரோல் மூலம் இயங்கும் கார்களுக்கு முன்பே உருவானது. மின்சார வாகனத்தை உருவாக்குவதற்கான முதல் பதிவு செய்யப்பட்ட முயற்சிகள் 1828 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகின்றன, அப்போது குதிரை வண்டிகள் முக்கிய போக்குவரத்து முறையாக இருந்தன.
ராபர்ட் ஆண்டர்சன் 1832 ஆம் ஆண்டு வாக்கில் முதல் "குதிரையில்லா" மின்சார வண்டியை உருவாக்கினார். இது கால்வனிக் செல்கள் மூலம் இயக்கப்பட்டது. இதில் ஒரு சில மைல்கள் மட்டுமே பயணிக்க முடிந்தது, மேலும் ரீசார்ஜ் செய்ய முடியாத பேட்டரியாகவும் இருந்ததால், நீராவியால் இயங்கும் வாகனங்களுடன் ஒப்பிடும்போது. இது நடைமுறைக்கு ஏற்றதாக இல்லை.
அமெரிக்க ஆட்டோமொபைல் உற்பத்தியின் தலைநகராக டெட்ராய்ட் உலகப் புகழ் பெற்றிருந்தாலும், மின்சார கார்களைப் பொறுத்தவரை, டெஸ் மொய்ன்ஸ் வரக் காரணம் ,1850 ஆம் ஆண்டு பிறந்து ஸ்காட்டிஷ் பல்கலைக்கழகத்தில் படித்த வில்லியம் மோரிசன்.
இவருக்கு கண்டுபிடிப்புகள் மீது ஆர்வம் இருந்தது, சிறு வயதிலிருந்தே மின்சாரத்தின் மீது ஆர்வம் இருந்தது. 1880 ஆம் ஆண்டு டெஸ் மொய்ன்ஸில் குடியேறிய மோரிசன் ஒரு வேதியியலாளராகத் வாழ்க்கையை தொடங்கினார், ஆனால் அவரது முக்கிய ஆர்வம் மின்சாரம், குறிப்பாக பேட்டரிகள் மீது இருந்தது.
லோகஸ்ட் ஸ்ட்ரீட்டில் உள்ள லம்பார்ட் ஜூவல்லரிக்கு கீழே ஒரு சிறிய பட்டறையில் பணிபுரிந்த மோரிசன், மின்சார சேமிப்பு பேட்டரிகளின் வேதியியலில் கவனம் செலுத்தினார், மேலும் எடுத்துச் செல்லக்கூடிய, ஆனால் சக்திவாய்ந்த ரீ சார்ஜ் செய்யும் பேட்டரியை உருவாக்க முயன்றார். முடிவில் மோரிசனின் பேட்டரி சோதனைகள் அவரை 1890 ஆம் ஆண்டில் முதல் வெற்றிகரமான அமெரிக்க மின்சார காரை உருவாக்க வழிவகுத்தன. அமெரிக்காவில், முதல் வெற்றிகரமான மின்சார கார் 1890 ஆம் ஆண்டு வாக்கில் வேதியியலாளர் வில்லியம் மோரிசனால் அறிமுகமானது. அது மணிக்கு 14 மைல் வேகத்தில் 6 பேர் செல்லக்கூடிய வாகனமாக இருந்தது. அது மின்சார வாகனங்களில் ஆர்வத்தைத் தூண்ட உதவியது.
மோரிசனின் புதிய வாகனம் சேமிப்பு பேட்டரிகள் மற்றும் வலது பின்புற சக்கரத்திற்கு சக்தி அளிக்க ஒரு மின்சார மோட்டார் பொருத்தப்பட்டிருந்தது. இந்த ஆரம்பகால மாதிரி பெரிய வெற்றியைப் பெறவில்லை, ஆனால் மோரிசனின் குதிரை இல்லாத வண்டி பற்றிய செய்தி தி அயோவா ஸ்டேட் ரிஜிஸ்டரால் அறிவிக்கப்பட்டது, பின்னர் அசோசியேட்டட் பிரஸ்ஸால் முன்னிலை பெற்றது விரைவில் ஆயிரக்கணக்கானோர் இந்த டெஸ் மொய்ன்ஸ் மின்னணுவியல் முன்னோடி காரைப் பற்றிப் பேசத் தொடங்கினர்.
அடுத்த சில ஆண்டுகளில், பல்வேறு வாகன உற்பத்தியாளர்களின் மின்சார வாகனங்கள் அமெரிக்கா முழுவதும் பிரபலமடையத் தொடங்கின, நியூயார்க் நகரம் 60க்கும் மேற்பட்ட மின்சார டாக்சிகளைக் கொண்டிருந்தது. 1900 வாக்கில், மின்சார கார்கள் அவற்றின் உச்சத்தில் இருந்தன, சாலையில் உள்ள அனைத்து வாகனங்களிலும் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டிருந்தன. அடுத்த 10 ஆண்டுகளில், அவை தொடர்ந்து வலுவான விற்பனையைக் கொண்டிருந்தன.
1968 ஆம் ஆண்டில் உயர்ந்து வந்த எரிவாயு விலைகள் மீண்டும் மின்சார கார்கள் மீது ஆர்வத்தைத் தூண்டின, இறுதியாக 1970 ல் வணிக ரீதியாகக் கிடைக்கும் முதல் மின்சார கார்களை கொண்டு வந்தன. முதல் கலப்பின மின்சார கார் போர்ஷே நிறுவனத்தால் 1901 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் மலிவான எண்ணெய் விலைகள் மற்றும் ஃபோர்டின் பிரபலமான மாடல் டி போன்ற மலிவு விலை எரிவாயு மூலம் இயங்கும் கார்கள் 1900களின் பெரும்பகுதி மின்சார வாகனங்களை ஓரங்கட்ட வைத்தன.
ஆனால் 1997 ஆம் ஆண்டு பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் கலப்பின காரான "டொயோட்டா ப்ரியஸ் "அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே, உலகம் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மாறுவதை குறித்து பரிசீலித்தது. பின்னர், எலன் மாக்ஸின் டெஸ்லா மோட்டார்ஸ் 2006 இல் களத்திற்கு வந்து ஒரு புரட்சியைத் ஏற்படுத்தியது காரணம். ஆற்றல் மற்றும் நீடித்துழைப்பு மிகுந்த அவர்களின் மின்சார கார்கள். இது மின்சார வாகனங்களின் விலையைக் குறைக்க உதவியது, இதனால் அவை நுகர்வோருக்கு மிகவும் மலிவு விலையில் கிடைத்தன.
உலகளாவிய மின்சார வாகன (EV) இருப்பு 30 மில்லியனைத் தாண்டியது, டெஸ்லா உலகளாவிய வாகனத் துறையில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. மாடல் எஸ், மாடல் 3, மாடல் எக்ஸ் மற்றும் மாடல் ஒய் உள்ளிட்ட அதன் முதன்மை மாடல்கள், செயல்திறன், மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பில் சிறந்த விளங்குகிறது. தற்போது டெஸ்லா சந்தை மூலதனம் - 926.8 பில்லியன் டாலர்கள். தற்போது உலகின் சாலைகளில் உள்ள அனைத்து மின்சார வாகனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை சீனாவில் உள்ளன. கடந்த ஆண்டு விற்கப்பட்ட 7 புதிய கார்களில் 1 மின்சார கார், மேலும் 2030 ஆம் ஆண்டளவில், நம்மிடம் 138 மில்லியன் மின்சார வாகனங்கள் இருக்கும் என்கிறார்கள்.