மீன் மழை: அமானுஷ்யமா? அறிவியலா?

அமெரிக்காவில் வானத்திலிருந்து மீன்கள் விழுவதும், அதைத் திருவிழாப் போல மக்கள் கொண்டாடுவதும் என விசித்திரமான நிகழ்வு நடைபெறுகிறது.
Fish rain
Fish rainAI Image
Published on

ஆலங்கட்டி மழை விழுவதை பார்த்திருப்போம். ஆனால் வானத்திலிருந்து மீன்கள் மழையாகக் கொட்டி பார்த்திருக்கிறோமா? உண்மையில் அமெரிக்காவில் இது நடக்கிறது. வானத்திலிருந்து மீன்கள் விழுவதும், அதைத் திருவிழாப் போல மக்கள் கொண்டாடுவதும் என விசித்திரமான நிகழ்வு நடைபெறுகிறது. நீர்நிலைகள் மீது உருவாகும் சூறாவளிகளான சக்தி வாய்ந்த நீர்ச்சுழல்கள், ஆறுகளிலிருந்து மீன்களை உறிஞ்சி நிலத்தின் மீது கொண்டு வந்து கொட்டுகின்றன என்று வானிலை ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டெக்சார்கானா(Texarkana) என்ற ஊரில் மீன்கள் வானிலிருந்து மழை போல விழுகின்றன. உண்மையில் மீன்கள் வானத்திலிருந்து விழுபவை அல்ல. ஏரி அல்லது குளங்களின் மேல் நீர்த்தாரை ஏற்படும் பொழுது அந்த நீர் சுழற்சியில் இந்த மீன்கள் உள்ளிழுக்கப்பட்டு நீர்த்தாரையோடு அதிகமாக காற்றடிக்க ஆரம்பித்தவுடன் இந்த சுழற்சியில் மீன்கள் பறக்க ஆரம்பிக்கும்.

பின்பு சிறிது நேரம் கழித்து சூழற்சியின் வேகம் குறைந்ததும் மீன்கள் கீழே விழத் தொடங்கும். இப்படி விழுவது தான் மீன் மழைப்பொழிவு போல் தோன்றும்.

இதையும் படியுங்கள்:
மீன் மழை உருவாக்கம்: அறிவியல் விளக்கம்!
Fish rain

இப்படி விலங்குகள் மழையாக விழுவதை விலங்கு மழை (animal rain) என்று அழைக்கின்றனர். இதில் மீன்கள் மட்டுமல்ல இதைப் போன்றே தவளைகள், பாம்புகள், நண்டுகள் போன்ற எந்த சிறிய விலங்கு வேண்டுமானாலும் மழையாகப் பொழிய வாய்ப்புள்ளது. கலிஃபோர்னியாவிலும், வடமேற்கு சைபீரியாவிலும் இப்படிப்பட்ட விலங்கு மழையாகப் பொழிந்த சம்பவங்களும் உள்ளன.

நம் நாட்டில் கூட 2019 ஆம் ஆண்டு கேரளாவில் ஒரு முறை மீன் மழை பொழிந்துள்ளது. இப்படி நிகழ்வது மிகவும் அரிதான செயலாக இருந்தாலும், இதற்கு சரியான சூழ்நிலை அமைந்தால் மட்டுமே இப்படி நடக்கும். நீர் சுழலின் வேகம் மீன்களைத் தூக்கும் அளவிற்கு இருக்க வேண்டும். அத்துடன் மீன்களும் மேல் நோக்கி பறக்கும் அளவிற்கு எடை குறைவாக இருக்க வேண்டும்.

உத்தரப்பிரதேசத்தில் 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் படோஹி மாவட்டத்திலும் இதுபோல் மீன் மழை பொழிந்துள்ளது. அங்கு பலத்த காற்றுடன் மழை பெய்த போது சிறு மீன்கள் மழையாகப் பொழிந்துள்ளன. அதேபோல் 2022ல் தெலுங்கானாவின் ஜக்தியால் நகரத்தில் வானத்திலிருந்து திடீரென மீன் மழை பொழிந்ததில் அந்த ஊர் மக்கள் குழம்பினர்.

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் விசித்திர நிகழ்வாக வானத்திலிருந்து விழும் மீன்கள், மக்கள் அதை ஒரு திருவிழாப் போல கொண்டாடுகிறார்கள். எங்கே என்கிறீர்களா? அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டுராஸ் (Honduras) நாட்டில் இருக்கும் யோரோ (Yoro) என்ற நகரம் தான் இந்த விசித்திர வானிலை மர்மத்தின் தாயகம். இதுவே புகழ்பெற்ற மீன் மழை அல்லது ல்ளுவியா டி பெசெஸ்(Lluvia de Peces) நிகழ்வாகும்.

இங்கு வருடத்தில் 1 அல்லது 2 முறை பெரும்பாலும் மே முதல் ஜூலை மாதங்களுக்கு இடையில் வானம் கருத்து, இருண்டு, பலத்த புயல் வீசி கொடூரமான கனமழை கொட்டும். புயல் முடிந்து பூமி அமைதியாகும் பொழுது தரை முழுவதும் சிறிய, வெள்ளி நிற மீன்களால் நிரம்பி இருக்கும். உள்ளூர் குடும்பங்கள் இந்த மீன்களை சேகரித்து சமைக்கிறார்கள். நகரம் முழுவதும் இந்தத் திருவிழாவைக் கொண்டாடுகிறது.

விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

இது ஒரு உண்மையான அறிவியல் நிகழ்வு. பெரும்பாலும் கனமழைக்குப் பிறகு நடக்கிறது. கடல்கள் அல்லது ஏரிகளின் மேல் உருவாகும் சக்தி வாய்ந்த காற்று சுழல்கள் (Waterspouts) இதற்குக் காரணம்.

கடுமையான மழையின் பொழுது உள்ளூர் நிலத்தடி நீரோடைகள் அல்லது குகைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, அங்கே வாழும் பார்வையற்ற மீன்கள் நீரின் அழுத்தத்தின் காரணமாக வலுக்கட்டாயமாக மேற்பரப்பிற்கு தள்ளப்பட்டு, வானத்திலிருந்து விழுந்தது போன்ற மாயையை உருவாக்கலாம்.

இதையும் படியுங்கள்:
சுனாமி மற்றும் பூகம்பம் வருவதை முன்கூட்டியே உணர்த்தும் மீன் - தமிழ்நாட்டின் நிலைமை..?
Fish rain

மத்திய அமெரிக்காவில் உள்ள விசித்திரமான காலநிலைகளில் ஒன்றான யோரோவின் திடீர், தீவிரப் புயல்கள் இந்த மீன் மழையின் மாயைக்கு ஏதோ ஒரு வகையில் பங்களிக்கின்றன என்று விளக்கம் தரப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com