

நெதர்லாந்தில் வெள்ளம் வந்தால் வீடுகள் தண்ணீருக்கு மேலே மிதக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளஒரு நவீன தொழில் நுட்பம் ஆகும். இந்த தொழில்நுட்பம் நம்ம ஊரிலும் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் இல்லையா?
இது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போமா?
தாழ்வான நிலப்பரப்பைக் கொண்ட நெதர்லாந்து நாடு, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க இந்த அதிநவீன பொறியியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
மிதக்கும் வீடுகள்(Floating Houses):
நெதர்லாந்தில் பல பகுதிகள் கடல் மட்டத்திற்கு கீழே உள்ளன. இதனால் அங்குள்ள பொறியாளர்கள் வெள்ள பாதிப்பில் இருந்து தப்பிக்க இந்த அதிநவீன தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அங்கு சில வீடுகள் பிரத்யேகமான மிதக்கும் அடிப்பகுதி (Buoyant Base) அல்லது காங்கிரீட் அடிப்பகுதியுடன் கட்டப்பட்டுள்ளன.
வெள்ளமோ அல்லது நீரின் மட்டம் உயர்ந்தாலோ இந்த வீடுகள் தண்ணீரின் மேல் மிதந்து அப்படியே மேலே உயரும். நீர் வடிந்த பிறகு மீண்டும் பழைய இடத்திற்கே வந்து அமரும். இவை படகுகளைப்போல அடித்துக் கொண்டு செல்லப்படாமல் இருக்க, கரையில் உள்ள உறுதியான எஃகு தூண்கள் அல்லது நங்கூரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
கான்கிரீட் அடித்தளம்:
இந்த வீடுகளுக்கு நிலத்தில் இருப்பது போல ஆழமான அடித்தளம் (அஸ்திவாரம்) கிடையாது. அதற்குப் பதிலாக தண்ணீரில் மிதக்கும் தன்மையுடைய, வெற்றுப் பகுதியைக் கொண்ட ஒரு வலுவான கான்கிரீட் பெட்டி போன்ற அடித்தளம் அமைக்கப்படுகிறது. இது ஒரு படகைப்போல வீட்டை தண்ணீருக்கு மேலே தாங்கிப் பிடிக்கிறது.
நெகிழ்வான தூண்கள் (Flexible Steel Pillars):
வீடுகள் தண்ணீரின் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்படாமல் இருப்பதற்கு அவை தரையோடு இணைக்கப்பட்ட வலுவான எஃகு அல்லது இரும்புத் தூண்களுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
மேலே உயரும் தொழில்நுட்பம்:
வெள்ளம் வரும்பொழுது அல்லது நீர்மட்டம் உயரும்பொழுது வீட்டின் அடிப்பகுதி தண்ணீரை மேல்நோக்கித் தள்ளுவதால் முழு வீடும் அந்த இரும்புத் தூண்களின் வழியே தடையின்றி சீராக தண்ணீருடன் சேர்ந்து மேலே உயரும். வெள்ளநீர் வடியும்பொழுது வீடுகளும் தானாகவே பழைய நிலைக்குக் கீழே இறங்கி அமர்ந்து விடும். கப்பல் நங்கூரம் போல இந்த வீடுகள் கம்பிகளால் அல்லது தூண்களால் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இவை அடித்துச் செல்லப்படுவதில்லை.
நீர்மட்டம் உயர்ந்தாலும் வீட்டின் மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவுநீர்க் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்படாமல் இருக்கும் வகையில் இந்த மிதக்கும் அமைப்புக்கு ஏற்ப நெகிழ்வுத் தன்மையுடைய குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டு கட்டமைப்புகள் பயன்படுத்தப் படுகின்றன. இந்த வீடுகள் கான்கிரீட் மற்றும் இலகுரக பொருட்களால் ஆன மிதக்கும் அமைப்புகளின் மீது கட்டப்பட்டுள்ளன.
மிதக்கும் வீடுகள் மட்டுமல்லாமல் மாபெரும் அணைகள், புயல் தடுப்புச் சுவர்கள் மற்றும் காற்று மற்றும் நீரால் இயங்கும் தானியங்கி ராட்சத நீர்த்தடுப்பு சுவர்கள் போன்ற அதிநவீன வெள்ளத் தடுப்பு அமைப்புகளையும் நெதர்லாந்து நாடு பயன்படுத்தி வருகிறது.
நெதர்லாந்தின் தலைநகரமான ஆம்ஸ்டர்டாம் மிதக்கும் வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளது. ஒரு கால்வாயின் மீது கட்டப்பட்ட நவீன குடியிருப்புப் பகுதியான ஸ்கூன்ஷிப், நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட டஜன் கணக்கான மிதக்கும் வீடுகளைக் கொண்டுள்ளது. குடியிருப்பாளர்கள் சூரிய மின் தகடுகள், திறமையான வெப்பமூட்டும் அமைப்புகள் மற்றும் ஆற்றல்மிக்க உள்கட்டமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர்.
வழக்கமான அணைகள் மற்றும் கரைகளைக் கட்டி வெள்ளத்தை எதிர்த்துப் போராடுவதை விட இயற்கையோடு இணைந்து வாழும் இந்தப் புதுமையான முறையை டச்சு பொறியாளர்கள் உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளன.
சமீபகாலமாக சென்னை போன்ற நகரங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கோடு இதனை ஒப்பிட்டு, நெதர்லாந்தின் இந்தத் தொழில்நுட்ப வீடியோக்கள் தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. காலநிலை மாற்றம் மற்றும் கடல் மட்டம் உயரும் சவால்களை எதிர்கொள்வதற்கு நெதர்லாந்து போன்ற நாடுகளில் இத்தகைய புதுமையான கட்டடக்கலை பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
இவை நம் ஊருக்கும் வந்தால் நன்றாக இருக்கும் இல்லையா? நமது சுற்றுப்புறங்களில் இருந்து தண்ணீரை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு பதிலாக, எதிர்கால சமூகங்கள் அதனுடன் பாதுகாப்பாக இணைந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்படுவது பாராட்டுக்குரிய விஷயம்தானே!