

பழங்களைச் சாப்பிட்ட பிறகு நாம் சாதாரணமாகக் குப்பையில் வீசும் ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசிப் பழத்தோல்கள் எதிர்காலத்தில் வீணாகாமல் பயன்படக்கூடும். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் புதிய முயற்சி, இந்தப் பழத்தோல்களைப் பயன்படுத்தி பழைய லித்தியம்-அயன் பேட்டரிகளில் உள்ள மதிப்புமிக்க உலோகங்களை (பேட்டரி மறுசுழற்சி) மீட்டெடுக்க முடியுமா என்பதை ஆராய்ந்து வருகிறது.
நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (NTU) ஆராய்ச்சியாளர்கள், Se-cure Waste Management நிறுவனத்துடன் இணைந்து, பழத்தோல் கழிவுகளைப் பயன்படுத்தி பழைய லித்தியம்-அயன் பேட்டரிகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பத்தை ஆய்வகத்திலிருந்து பைலட் அளவுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
சிங்கப்பூரில் உள்ள இந்த முயற்சி, உணவுக் கழிவு மற்றும் மின்னணுக் கழிவு என இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு காணும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
பழைய பேட்டரிகள் முதலில் நசுக்கப்பட்டு, பிளாஸ்டிக், செம்பு, அலுமினியம் போன்ற பொருட்கள் பிரிக்கப் படுகின்றன. மீதமுள்ள ‘பிளாக் மாஸ்’ எனப்படும் பொருளில் லித்தியம், கோபால்ட், நிக்கல், மாங்கனீஸ் போன்ற முக்கிய உலோகங்கள் உள்ளன.
இவற்றை மீட்டெடுப்பதற்குப் பழத்தோல்களில் இருந்து பெறப்படும் கரைசல் பயன்படுத்தப்படுகிறது. பழத்தோல்களில் இயற்கையாகக் காணப்படும் கரிம அமிலங்கள், சர்க்கரைகள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் பீனாலிக் அமிலங்கள் உலோகங்களைப் பிரித்தெடுக்க உதவுகின்றன.
குறிப்பாக ஆரஞ்சுத்தோலைப் பயன்படுத்திய 2020-ஆம் ஆண்டின் ஆய்வகச் சோதனையில், பேட்டரி கழிவில் இருந்த மதிப்புமிக்க உலோகங்களில் எடையின் அடிப்படையில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவை மீட்கப்பட்டன.
பின்னர் எலுமிச்சை மற்றும் அன்னாசிப் பழத்தோல் களையும் பயன்படுத்தி இந்த முறையை ஆராய்ச்சி யாளர்கள் சோதித்துள்ளனர்.
மீட்கப்படும் உலோகங்கள் மீண்டும் புதிய லித்தியம்-அயன் பேட்டரிகளைத் தயாரிக்கப் பயன்படக்கூடிய உலோக உப்புகளாக மாற்றப்படுகின்றன. இதன் மூலம் பழைய பேட்டரியிலிருந்து பெறப்பட்ட பொருட்களை மீண்டும் புதிய பேட்டரிக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தும் சுழற்சி உருவாகிறது.
சிங்கப்பூரில் செயல்படும் பைலட் ஆலையில் ஒரே முறையில் சுமார் 2,000 லிட்டர் அளவிலான நசுக்கப்பட்ட பேட்டரி கழிவுகளைச் செயலாக்க முடியும். பாரம்பரிய மறுசுழற்சி முறைகளில் பயன்படுத்தப்படும் கடுமையான ரசாயனங்கள் மற்றும் அதிக வெப்பநிலைக்கு மாற்றாக, குறைந்த வெப்பநிலையில் இயங்கக்கூடிய இந்த அணுகுமுறை சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இந்த முயற்சியின் மற்றொரு முக்கியமான அம்சம், பேட்டரி கழிவுகளைப் பாதுகாப்பாக கையாள்வதாகும்.. மின்சார வாகனங்கள், மடிக்கணினிகள், கைபேசிகள் உள்ளிட்ட சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் லித்தியம் _ அயன் பேட்டரிகளின் தேவையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளை முறையாக மறுசுழற்சி செய்யாமல் குப்பையுடன் சேர்த்தால் அதில் உள்ள வேதிப்பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
மேலும் பேட்டரிகளில் உள்ள லித்தியம், நிக்கல், கோபால்ட் போன்ற உலோகங்கள் இயற்கை வளங்களிலிருந்து புதிதாகப் பெறப்பட வேண்டிய தேவையையும் குறைக்க முடியும். பழத்தோல் போன்ற உயிரியல் கழிவுகளை மதிப்பு மிக்க தொழில்துறை மூலப்பொருளாக மாற்றுவது "சுற்றுச்சூழல் பொருளாதாரம் என்ற கருத்துக்கும் பொருந்துகிறது.
அதாவது பயன்படுத்தப்பட்ட பொருள்களை கழிவாகக் கருதாமல், அவற்றிலிருந்து மீண்டும் பயனுள்ள பொருட்களை உருவாக்கி வளங்களைச் சுழற்சியில் வைத்திருப்பதே இதன் நோக்கம்.
இந்த தொழில்நுட்பம் பெரிய அளவில் நடைமுறைக்கு வந்தால், உணவுக் கழிவுகளை குறைப்பதோடு பேட்டரி தயாரிப்புக்குத் தேவையான சில மூலப்பொருட்களையும் மீட்டெடுக்க உதவலாம். இதனால் எதிர்கால மின்சார வாகன உலகில் மறுசுழற்சி க்கும் முக்கிய இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
நாம் வீணாக நினைக்கும் பழத்தோலும், பயன்படுத்த முடியாது என்று தூக்கி எறியும் பழைய பேட்டரியும் ஒன்றாக இணைந்து புதிய வளமாக மாறும் இந்த முயற்சி, மறுசுழற்சியின் புதிய பாதையை எடுத்துக்காட்டுகிறது. தொழில்நுட்பத்தின் செயல்திறன் மற்றும் பொருளாதாரச் சாத்தியக்கூறுகள் தொடர்ந்து மதிப்பிடப்பட்டு வருகின்றன.
எதிர்காலத்தில் இந்த முயற்சி பெரிய அளவில் வெற்றி பெற்றால், உணவுக் கழிவையும் மின்னணுக் கழிவையும் ஒரே நேரத்தில் பயனுள்ள வளமாக மாற்றும் புதிய வாய்ப்பு உருவாகலாம்.
இதுபோன்ற புதுமையான முயற்சிகள் வளரும் போது , கழிவுகளை வளமாக மாற்றும் சிந்தனை மக்களிடமும் அதிகரித்து சுற்றுச்சூழலுக்கு நன்மை சேர்க்கும். இயற்கையின் வளங்களைப் பாதுகாப்பதுடன் தொழில்நுட்ப வளர்ச்சியும் சுற்றுச்சூழல் நலனும் இணைந்து செயல்பட முடியும் என்பதற்கு இந்த முயற்சி சிறந்த உதாரணமாக அமைகிறது.