சாதாரண கல்லுக்குள் ஒளிந்திருக்கும் கோடிக் கணக்கான ஆண்டுகளின் அதிசயம்: ஜியோட் படிகங்களின் ரகசியம்!

சாதாரண கல்லை உடைக்கும்போது மின்னும் படிகங்கள் நிஜமா அல்லது தந்திரமா? முழு விவரம் இதோ!
படிகக் கல் - geode crystals
படிகக் கல் - geode crystals
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 7 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு நூல், ஒரு கட்டுரை நூல், ஒரு ஆய்வுக் கட்டுரை நூல், 5 சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதை மற்றும் நாவல் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். பொருளாதாரம் உட்பட பல்வேறு பிரிவுகளில் இவரது கட்டுரைகள் மற்றும் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் கல்கி ஆன்லைனில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

Updated on: 

சமூக வலைத்தளங்களில் உலாவும்போது சில குறுங்காணொளிகள் (Reels) நம்மை அப்படியே கட்டிப் போட்டுவிடும். ஓடைப் படுகைகள், ஆற்றங்கரை யோரங்கள் அல்லது பாறை இடுக்குகளில் கிடக்கும் மிகவும் சாதாரணமான, உருளைக்கிழங்கு வடிவமான சிறு கல்லை ஒருவர் சுத்தியலால் நேரடியாகவோ அல்லது உளி உதவியுடனோ கவனமாகத் தொடர்ந்து அடிக்கிறார். சில நொடிகளில் கல் இரண்டாகப் பிளக்கிறது. உள்ளே மாதுளைப் பழத்தின் முத்துக்களைப் போல அடர் ஊதா, சிவப்பு அல்லது பளிங்கு நிறங்களில் பளபளப்பான படிகங்கள் (Crystals) மின்னுகின்றன!

“இயற்கையில் இப்படியொரு அதிசயம் சாத்தியமா? அல்லது பார்வையாளர்களை ஏமாற்றச் செய்யப்படும் தந்திரமா?” என்ற வியப்பும் சந்தேகமும் பார்ப்பவர்கள் அனைவருக்குமே எழுகிறது.

புவியியல் மொழியில் ‘ஜியோட்’ (Geode) என்று அழைக்கப்படும் இந்தப் படிகக் கல், பல கோடி ஆண்டுகளாகப் பூமிக்கு அடியில் நிகழும் இயற்கையின் ரசாயன விந்தையாகும்.

இத்தகைய கற்களை உடைத்து உள்ளே இருக்கும் படிகங்களை வெளிப்படுத்தும் காணொளிகள் இன்று உலகளாவிய இணையத்தளங்களில் ஒரு தனித் துறையாகவே உருவெடுத்துள்ளன. ஒவ்வொரு தளத்திலும் இதன் பயன்பாடும் பார்வையாளர்களின் நோக்கமும் வெவ்வேறு விதமாக அமைந்துள்ளன:

யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்: இந்தியாவிலும் உலக அளவிலும் #GeodeCracking, #CrystalReveal, #Rockhounding ஆகிய ஹேஷ்டேக்குகளில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெறும் குறுங்காணொளிகள் தொடர்ந்து வெளியாகின்றன. ஆற்றங்கரைகளில் கற்களைத் தேடுவதும், உளியால் பிளந்து காட்டுவதும் இங்கே பொழுதுபோக்கு மற்றும் ஆச்சரியமூட்டும் உள்ளடக்கமாகப் பகிரப்படுகின்றன.

டிக்டாக் (TikTok): உலக அளவில் இந்தப் படிகக் கற்கள் உடைப்பதும், நேரலை விற்பனை (Crystal Live Scoops) செய்வதும் மிகப் பெரிய வணிகமாக நடப்பது டிக்டாக் தளத்தில்தான். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற ஆசிய நாடுகளில் வாடிக்கையாளர்கள் நேரலையில் பணம் செலுத்தி, தங்களுக்குப் பிடித்த கல்லை அப்போதே உடைத்துப் பார்க்கும் போக்கு (Trend) பரவலாக உள்ளது.

ஃபேஸ்புக் (Facebook Reels & Watch): யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியாகும் காணொளிகள் ஃபேஸ்புக் தளத்திலும் அதிக அளவில் பகிரப்பட்டு, சாமானிய மக்களிடமும் இயற்கை கனிமங்கள் குறித்த ஆர்வத்தைத் தூண்டி வருகின்றன.

பின்டரெஸ்ட் (Pinterest): கைவினைப் பொருட்கள் மற்றும் நவீன உள்அலங்கார (Interior Design & Home Decor) ஆர்வலர்கள் பயன்படுத்தும் பின்டரெஸ்ட் தளத்தில், இத்தகைய படிகக் கற்களை உடைக்கும் காணொளிகள் (Pins) தொழில் ரீதியான வடிவமைப்புத் தேவைகளுக்காக அதிகம் பகிரப்படுகின்றன.

படிகக் கல் - geode crystals
படிகக் கல் - geode crystals

ரெடிட் (Reddit): இணையத்தில் உலவும் போலி வீடியோக் களுக்கு மத்தியில், நம்பகமான தகவல்கள் கிடைக்கும் இடம் ரெடிட். இதில் உள்ள r/geology, r/rockhounds, r/Crystals போன்ற புவியியல் மற்றும் கனிம ஆர்வலர்களின் குழுக்களில், நிஜமாகவே மலைப்பகுதிகளில் கற்களைத் தேடிக் கண்டுபிடித்து உடைப்பவர்கள் தங்களின் அறிவியல் பூர்வமான அனுபவங்களைப் பதிவிடுகிறார்கள். இங்கே போலி வீடியோக்கள் மிகக் குறைவு.

பாறைக்குள் படிகங்கள் உருவான ரகசியம்

பூமியில் எரிமலைக் குழம்பு (Lava) குளிர்ந்து பாறையாக மாறும்போது, அதிலுள்ள வாயுக் குமிழ்கள் வெளியேற முடியாமல் பாறைக்குள் சிக்கிக்கொண்டு சிறிய வெற்றிடங்களை (Hollow Cavities) உருவாக்குகின்றன. பல லட்சம் ஆண்டுகளாக, சிலிக்கா (Silica), இரும்பு, மாங்கனீசு போன்ற தாதுக்கள் கலந்த நிலத்தடி நீர் இந்தப் பாறையின் நுண்ணிய துளைகள் வழியே உள்ளே கசியும்.

உள்ளே இருக்கும் வெற்றிடத்தில், அந்தத் தாதுக்கள் மெதுவாகப் படிகங்களாக வளரத் தொடங்கும். ஒவ்வொரு தாதுவின் அணுக்களும் இயற்கையிலேயே குறிப்பிட்ட வடிவியல் அமைப்பில் (Geometric Lattice) அடுக்கப்படுவதால், யாரோ கூர்மையாகச் செதுக்கிவைத்தது போலத் துல்லியமான வடிவங்களில் இவை உருவாகின்றன. உள்ளே கலக்கும் தாதுக்களைப் பொறுத்து ஊதா நிற அமேதிஸ்ட் (Amethyst), இளஞ்சிவப்பு குவார்ட்ஸ் (Rose Quartz) எனப் பல வண்ணங்கள் உருவாகின்றன.

(குறிப்பு: இணையத்தில் வரும் எல்லா வீடியோக்களும் உண்மையானவை அல்ல. சிலர் ஏற்கனவே கடைகளில் வாங்கிய, செயற்கையாகச் சாயம் பூசப்பட்ட பளபளப்பான கற்களை மீண்டும் சிமெண்ட் பூசி ஒட்டி, ஆற்றங்கரையில் கிடப்பதுபோல வைத்து உடைத்து வீடியோ எடுக்கிறார்கள்).

உலக நாடுகளும் இந்தியாவும்: எங்கு அதிகம் கிடைக்கின்றன?

உலக அளவில் பிரேசில், உருகுவே, மெக்சிகோ, நமீபியா மற்றும் அமெரிக்காவின் அயோவா, கென்டக்கி பகுதிகளில் இத்தகைய ஜியோட் கற்கள் மிக அதிகமாகக் கிடைக்கின்றன. குறிப்பாக பிரேசில் மற்றும் உருகுவே நாடுகள் உயர்தர ஊதா நிற ‘அமேதிஸ்ட்’ (Amethyst) படிகக் கற்களுக்குப் புகழ்பெற்றவை.

இந்தியாவின் நிலை:

நமது நாட்டில் எரிமலைப் பாறைகள் நிறைந்த மகாராஷ்டிராவின் தக்காணப் பீடபூமி (Deccan Plateau) பகுதிகளான நாசிக், ஔரங்காபாத், புனே மற்றும் ஜல்கான் ஆகிய இடங்களில் இத்தகைய படிகக்கற்கள் இயற்கையாகவே அதிகம் கிடைக்கின்றன. இது தவிர குஜராத்தின் கட்ச் (Kutch) பகுதி மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில மலைப்பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன.

குடிசைத்தொழிலும், சர்வதேச சந்தை விலையும்:

இயற்கை ஆர்வலர்கள் பொழுதுபோக்கிற்காக இதைச் சேகரித்தாலும், இது பல நாடுகளில் ஒரு பெரிய வணிகத் தொழிலாகவே நடக்கிறது.

இதையும் படியுங்கள்:
மிகப்பெரிய தங்கச் சுரங்கத்தால் அழியும் பழங்குடி இனம்: அமும்னே மக்களின் அதிர்ச்சிகரமான கதை!
படிகக் கல் - geode crystals

இந்தியாவில் குடிசைத் தொழில்:

மகாராஷ்டிராவின் நாசிக் மற்றும் குஜராத்தின் காம்பே (Khambhat) பகுதிகளில், உள்ளூர் மக்கள் மலைப் பகுதிகளிலிருந்தும் பாறைக் குவாரிகளிலிருந்தும் இவற்றைச் சேகரித்து, சுத்தம் செய்து, பட்டை தீட்டி விற்பனை செய்வதைக் குடிசைத் தொழிலாகவே செய்து வருகிறார்கள். பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்தக் கற்களை வெட்டுவது, மெருகூட்டுவது மற்றும் நகைகளாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ளனர்.

நகைகள் முதல் தொழிற்சாலைகள் வரை: இவற்றின் பயன்பாடுகள் என்ன?

இந்தப் படிகக் கற்கள் வெறும் காட்சிப் பொருட்கள் மட்டுமல்ல; பல்வேறு துறைகளில் இவை பயன்படுகின்றன:

நகைகள் மற்றும் ஆபரணங்கள்:

வைரம், மாணிக்கம் போன்ற உயர்தர ரத்தினங்களுக்கு மாறாக இவை விலை குறைவானவை (Semi-precious stones) என்பதால், நடுத்தர மக்களுக்கான நகை தயாரிப்பில் இவை பெருமளவில் பயன்படுகின்றன. குறிப்பாக ஊதா நிற அமேதிஸ்ட் மற்றும் குவார்ட்ஸ் கற்களைப் பட்டை தீட்டி மோதிரங்கள், கம்மல்கள், பதக்கங்கள் (Pendants) மற்றும் கழுத்து மாலைகளாகக் கோர்த்து அணியும் வழக்கம் உலகம் முழுவதும் உள்ளது.

வீட்டு அலங்காரப் பொருட்கள் (Home Decor):

இரண்டாகப் பிளக்கப்பட்ட பெரிய ஜியோட் கற்களை அப்படியே வரவேற்பறையில் அலங்காரப் பொருளாக (Showpiece) வைப்பதும், அவற்றை புத்தகங்களைத் தாங்கிப் பிடிக்கும் ‘புக்-எண்ட்ஸ்’ (Bookends), மேசை விளக்குகள் மற்றும் காகித அழுத்திகளாக (Paperweights) வடிவமைப்பதும் இப்போது நவீன உள்அலங்கார (Interior Design) துறையில் பிரபலமாக உள்ளது.

தொழிற்சாலைப் பயன்பாடுகள்:

ஜியோட் கற்களுக்குள் இருக்கும் ‘குவார்ட்ஸ்’ (Quartz) படிகங்கள் நிலையான மின் அதிர்வுகளை உருவாக்கும் திறன் கொண்டவை. இதனால், கைக்கடிகாரங்கள் (Quartz Watches), வானொலி அலைவாங்கிகள் மற்றும் மின்னணுச் சாதனங்களின் உதிரிபாகங்கள் தயாரிப்பிலும் தூய குவார்ட்ஸ் படிகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மண்ணுக்குள்ளும் கற்களுக்குள்ளும் ஒளிந்திருக்கும் இந்த இயற்கை அதிசயங்கள், பூமியின் வரலாற்றைச் சொல்லும் காலப் பெட்டகங்களாகவும், பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கின்றன.

இதையும் படியுங்கள்:
மிகப்பெரிய தங்கச் சுரங்கத்தால் அழியும் பழங்குடி இனம்: அமும்னே மக்களின் அதிர்ச்சிகரமான கதை!
படிகக் கல் - geode crystals