மிகப்பெரிய தங்கச் சுரங்கத்தால் அழியும் பழங்குடி இனம்: அமும்னே மக்களின் அதிர்ச்சிகரமான கதை!

நவீன உலகத்தின் பேராசையால் தங்களது சொந்த நிலத்தை இழந்து தவிக்கும் பப்புவாவின் பூர்வகுடிகள்.
அமும்னே மக்கள் - Amungme tribe
அமும்னே மக்கள் - Amungme tribe
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

அமும்னே (Amungme) பழங்குடி மக்கள் என்பவர்கள் இந்தோனேசியாவின் மத்திய பப்புவா மாகாணத்தின் மலைப்பகுதிகளில் வாழும் ஒரு பூர்வகுடி மெலனேசிய பழங்குடி  இனக்குழுவினர் ஆவர். இவர்கள் 'அமுங்' (Amung) அல்லது உஹுந்துனி (Uhunduni) என்றும் அழைக்கப் படுகிறார்கள்.

சுமார் 17,700 மக்கள் தொகையைக்கொண்ட இந்த சமூகம் பப்புவா தீவின் பழமையான பூர்வகுடிகளில் ஒன்றாகும். இவர்கள் பப்புவா தீவின் மத்திய மலைத்தொடர்களில் உள்ள மிமிகா (Mimika) மற்றும் புன்சாக் (Puncak) ஆகிய மாவட்டங்களின் பள்ளத்தாக்குகளில் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களின் வாழ்க்கை முறை மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள்:

கலாச்சாரம் மற்றும் ஆன்மீக நம்பிக்கை: அமும்னே மக்கள் தங்களைச் சுற்றியுள்ள மலைகளை மிகவும் புனிதமானதாகக் கருதுகிறார்கள். குறிப்பாக பனி படர்ந்த நெமங்காவி (Mount Nemangkawi) மலையைத் தங்களது ஆன்மீகப் பிரபஞ்சத்தின் மையமாகவும், கடவுளின் இருப்பிடமாகவும் இவர்கள் வணங்குகிறார்கள். 

இயற்கை வழிபாடு (Animism):

இவர்கள் இயற்கையோடு இணைந்த அனிமிச (Animism) வழிபாட்டு முறையைக் கொண்டவர்கள். இவர்கள் இயற்கையையும் ஆன்மீகத்தையும் தனித்தனியாகப் பார்ப்பதில்லை.

தங்களைச் சுற்றியுள்ள மலைகளைத் தங்கள் முன்னோர்களின் ஆன்மாக்கள் வாழும் புனிதமான இடமாகவும், இயற்கையின் அனைத்து கூறுகளிலும் உறைந்திருப்பதாக நம்பும் இயற்கை வழிபாட்டு முறையைப் பின்பற்றுகிறார்கள்.

இவர்கள் அமுங்-கால் (Amung-kal) என்ற தனித்துவமான பப்புவான் மொழியைப் பேசுகின்றனர். புனித இடங்களுக்கென்று தேபோ-ஆ- கால் (Tebo-a-kal) என்ற குறியீட்டு மொழியையும் பயன்படுத்துகிறார்கள்.

வாழ்வாதாரம்: 

இவர்கள் பாரம்பரியமாக காடுகளில் இடப்பெயர்வு விவசாயம் (Shifting agriculture) செய்கிறார்கள். கிழங்கு வகைகள் மற்றும் பயிர்களைப் பயிரிடுவதுடன், வேட்டையாடுதல், பன்றி வளர்ப்பு மற்றும் காடுகளிலிருந்து உணவுகளை சேகரிப்பதன் மூலமும் தங்களின் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்கிறார்கள். கிழங்கு வகைகள் இவர்களின் முக்கிய உணவாகும்.

அமும்னே மக்கள் - Amungme tribe
அமும்னே மக்கள் - Amungme tribe

இவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள்: 

அமும்னே மக்களின் தாயகப் பகுதியின் மையத்தில் உலகப் புகழ்பெற்ற, உலகின் மிகப்பெரிய தங்கம் மற்றும் செம்பு சுரங்கங்களில் ஒன்றான கிராஸ்பெர்க் சுரங்கம் (Grasberg mine) அமைந்துள்ளது. அமெரிக்க நிறுவனமான 'Freeport - McMoRan' மற்றும் இந்தோனேசிய அரசால் நடத்தப்படும் இந்த சுரங்கத்தொழில் இவர்களின் புனித மலைகளையும் வாழ்விடங்களையும் கடுமையாக சிதைத்துள்ளது.

சுரங்க விரிவாக்கம் மற்றும் கழிவுகள் ஆறுகளில் கலக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பால் பல அமும்னே மக்கள் தங்கள் சொந்த நிலங்களை விட்டு வெளியேற்றப்பட்டு அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இந்தோனேசிய ராணுவத்திற்கும், பப்புவா விடுதலை இயக்கக் குழுக்களுக்கும் இடையே நடக்கும் ஆயுத மோதல்களுக்கு நடுவிலும் இவர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

புவி வெப்பமயமாதலால் அவர்களின் புனித மலையின் உச்சியில் இருக்கும் பனிப்பாறைகள் உருகி மறைந்து வருவது இவர்களின் ஆன்மீக நம்பிக்கைக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது.

இதையும் படியுங்கள்:
அலையாத்திக் காடுகள் என்றால் என்ன? அவை எவ்வாறு மண்ணரிப்பைத் தடுக்கின்றன?
அமும்னே மக்கள் - Amungme tribe

பாரம்பரிய ஆடை, நடனம் மற்றும் கலை வடிவங்கள்: 

ஆடைகள்:

ஆண்கள் சுரைக்காயின் காய்ந்த தோலை உள்ளீடற்றதாக மாற்றி செய்யப்படும் ஆடைகளையும், பெண்கள் மரப்பட்டைகள், புற்கள் மற்றும் தாவர இழைகளால் பின்னப்பட்ட பாவாடைகளையும் அணிகின்றனர். சொர்க்கப் பறவை (Bird of Paradise) மற்றும் கேசோவரி (Cassowary) போன்ற உள்நாட்டுப் பறவைகளின் வண்ணமயமான இறகுகளைக் கொண்டு தலைக்கிரீடங்களை செய்கின்றனர்.

நடன வடிவங்கள்: 

திருவிழாக்கள் மற்றும் சடங்குகளின் பொழுது ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து வட்ட வடிவில் ஆடும் பாரம்பரிய நடனங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

இந்த நடனங்களின் பொழுது பாரம்பரிய திஃபா (Tifa) எனப்படும் மர உருளை முரசுகள் இசைக்கப்படுகின்றன.

அறுவடை, வேட்டை மற்றும் போர் போன்ற வாழ்வியல் அம்சங்களை மையமாகக் கொண்டும், இயற்கை மற்றும் மூதாதையர் ஆன்மாக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் இவர்களின் நடன அசைவுகள் அமைகின்றன. 

நடனத்தின் பொழுது உடலிலும் முகத்திலும் களிமண் மற்றும் இயற்கை சாயங்களைப் பயன்படுத்தி கோடுகள் ஓவியமாக வரையப்படுகின்றன. நோகென் பைகள் (Noken Bags) மரப்பட்டைகளின் நாரிலிருந்து பின்னப்படும் பாரம்பரிய பைகள் பப்புவா மக்களின் கலாச்சார அடையாளமாக விளங்குவதுடன்  யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கலை வடிவமாகும்.

கடல் சிப்பிகள், விலங்குகளின் பற்கள் மற்றும் எலும்புகளைக் கொண்டு கழுத்தணிகள் மற்றும் வளையல்களை உருவாக்கி அணிகின்றனர். இந்த மக்கள் தங்களின் இந்த அரிய கலை வடிவங்களை 'அமும்னே காமோரோ கலாச்சார விழாக்கள்' (Amungme Kamoro Cultural Festival) மூலம் அடுத்த தலைமுறைக்கு கடத்தி தங்களுடைய பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
குளிர்கால உல்லாசப் பயணம்: படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்!
அமும்னே மக்கள் - Amungme tribe