டீக்கடை முதல் பெட்ரோல் பங்க் வரை: கூகுள் மேப்ஸின் 'Ask Maps' அம்சம் பற்றித் தெரியுமா?

ஜெமினி ஏஐ உடன் கைகோர்த்த கூகுள் மேப்ஸ்: உங்கள் பயண முறையே மாறப்போகிறது!
Google maps updates
Google maps updatesImg credit: AI Image
Published on

இன்றைய நவீன உலகில், தெரியாத இடங்களுக்குச் செல்வதற்கு நமக்கு உற்ற நண்பனாக இருப்பது கூகுள் மேப்ஸ் (Google maps). உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தினமும் வழிகாட்டுவதற்கும், அருகிலுள்ள இடங்களை கண்டுபிடிப்பதற்கும் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். தற்போது, இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு மிகப்பெரிய பரிணாம வளர்ச்சியை எட்டியுள்ளது. சமீபத்தில் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அப்டேட்கள், நாம் பயணிக்கும் முறையை முற்றிலும் மாற்றியமைக்கப் போகின்றன. வாருங்கள் அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஜெமினி ஏஐ உடனான இணைப்பு:

புதிய அப்டேட்டின் மிக முக்கியமான அம்சம் கூகுளின் சக்திவாய்ந்த Ask Maps எனப்படும் வசதி. இது ஜெமினி AI உடன் இணைக்கப்படுகிறது. இந்த புதிய அப்டேட்டில் ஒரு மனிதரிடம் கேள்வி கேட்பது போலக் கேட்கலாம். உதாரணமாக, அருகில் உள்ள நல்ல டீக்கடைப் பற்றிக் கேட்கும்போது, அது வெறும் இடங்களின் பட்டியலோடுச் சேர்த்து, அந்த இடத்தைப் பற்றிய மக்களின் விமர்சனங்கள், அங்குள்ள ஸ்பெஷல் உணவுகள் என அனைத்தையும் AI உதவியுடன் தொகுத்து ஒரு சுருக்கமான பதிலாக வழங்குகிறது.

இம்மர்சிவ் வியூ (Immersive View):

கூகுள் மேப்ஸின் (Google maps) 'இம்மர்சிவ் வியூ' அம்சம் தற்போது அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது. கணினி பார்வை மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பில்லியன் கணக்கான புகைப்படங்களை இணைத்து ஒரு இடத்தின் முப்பரிமாண காட்சியை இது உருவாக்குகிறது.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்வதற்கு முன்பே, அந்த இடம் எப்படி இருக்கும்; அங்குள்ள வானிலை எப்படி இருக்கிறது; குறிப்பிட்ட நேரத்தில் போக்குவரத்து நெரிசல் எப்படி இருக்கும் என்பதைத் தத்ரூபமாக உங்கள் மொபைலில் பார்க்க முடியும். இந்த அம்சம் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

இதையும் படியுங்கள்:
இனி கூகுள் மேப்ஸ் கிட்ட பேசலாம்..! – சுந்தர் பிச்சை அறிமுகம் செய்த புதிய மேஜிக்..!
Google maps updates

மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்:

வாகனம் ஓட்டும்போது சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பது சவாலான காரியம். குறிப்பாகப் பெரிய மேம்பாலங்கள் மற்றும் பல கிளைப் பாதைகள் உள்ள இடங்களில் குழப்பம் ஏற்படுவது வழக்கம். இதனைத் தவிர்க்க, கூகுள் மேப்ஸ் (Google maps) இப்போது 'லேன் கைடன்ஸ்' வசதியை மேம்படுத்தியுள்ளது. நீங்கள் எந்தப் பாதையில் செல்லவேண்டும் என்பதைத் திரையில் மிகத் தெளிவாக நீல நிறக் கோடுகள் மூலம் காட்டும். இதன் மூலம் கடைசி நேரத்தில் பாதையை மாற்றும் பதற்றம் குறையும்.

Landmark Navigation:

முன்பு கூகுள் மேப்ஸ் “300 மீட்டர் கழித்து வலப்பக்கம் திரும்புங்கள்” போன்ற வழிகாட்டுதலை வழங்கியது. ஆனால் தற்போது, “அந்த ரெஸ்டாரண்ட்க்கு அருகில் வலப்பக்கம் திரும்புங்கள்” போன்ற landmark-based navigation-ஐ அளிக்கிறது. இந்த வசதியின் மூலம், வழிகாட்டுதல்களை எளிதாகக் கையாக முடியும்.

Lens in Maps:

கூகுள் மேப்ஸ் இப்போது கேமராவை பயன்படுத்தி அருகிலுள்ள இடங்களை கண்டறியும் வசதியையும் மேம்படுத்தியுள்ளது. Lens in Maps எனப்படும் இந்த அம்சம் Augmented Reality தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

பயனர் தன் மொபைல் கேமராவை ஒரு தெருவில் உயர்த்தினால், அருகிலுள்ள, ATM, ரெஸ்டாரண்ட், கடைகள், பேருந்து நிலையங்கள் போன்ற தகவல்களைத் திரையில் நேரடியாக காட்டும். இதனால் புதிய நகரங்களில் வழியைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிதாகிறது.

இதையும் படியுங்கள்:
வெறும் ஒரு புல் மூலம் முழு நகரத்திற்கே மின்சாரம்... விஞ்ஞானிகளின் அதிரடி கண்டுபிடிப்பு!
Google maps updates

சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணங்கள்:

புதிய அப்டேட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் சிக்கனமான பாதைகளைத் தேர்ந்தெடுக்கும் வசதி இப்போது அதிக நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மின்சார வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு, சார்ஜிங் நிலையங்கள் எங்கு உள்ளன. அவை தற்போது காலியாக இருக்கின்றனவா என்ற விவரங்களையும் துல்லியமாக அறிய முடியும்.

அதோடு, கூகுள் நிறுவனம் இந்தத் தகவல்களை வழங்கும்போது அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்யப் பல்வேறு தரவுகளைப் பயன்படுத்துகிறது. 'லோக்கல் கைட்ஸ்' வழங்கும் தகவல்கள் மற்றும் ஏஐ உதவியுடன் சரிபார்க்கப்பட்ட புகைப்படங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி பயனர்களுக்குத் தவறான தகவல்கள் கிடைப்பதைத் தவிர்க்கிறது.

இந்த அம்சங்கள் தற்போது சில நாடுகளில் கட்டப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

தொழில்நுட்பம் வளர வளர, நமது அன்றாட வாழ்க்கையின் சிக்கல்கள் குறைந்து, பயணங்கள் இனிமையானதாக மாறுகின்றன என்பதற்கு இந்த மாற்றமே சாட்சி.

இனி நீங்கள் பயணத்தைத் திட்டமிடும்போது, கூகுள் மேப்ஸின் இந்த ஏஐ வசதிகளைப் பயன்படுத்திப் பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com