தினசரி வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பல பொருட்களின் உண்மையான பயன்பாடுகள் என்னவென்று தெரியாமலேயே அவற்றைப் பயன்படுத்துகின்றோம். சாதாரணப் பொருட்கள் கூட மிகவும் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பூட்டுகளில் உள்ள சிறிய துளை முதல் பேனா மூடிகளில் உள்ள ஓட்டை வரை, பல பொருட்களின் வடிவமைப்புக்குப் பின்னால் சுவாரஸ்யமான காரணங்கள் உள்ளன. அந்த வகையில் 5 அன்றாடப் பொருட்களின் சுவாரஸ்யமானப் பயன்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பூட்டின் அடியில் ஒரு சிறிய துளை இருப்பதை நீங்கள் கவனித்ததுண்டா? இதை உற்பத்தி குறைபாடு எனப் பலர் நினைப்பார்கள். ஆனால், இந்த துளைக்கு இரண்டு முக்கியமான பயன்கள் உள்ளன. முதலாவதாக, மழை அல்லது நீரில் பூட்டு நனைந்தால், நீர் இதன் வழியே வெளியேறிவிடும். இதனால், பூட்டு துருப்பிடிக்காமல் இருக்கும். இரண்டாவதாக, இந்த துளை வழியாக பூட்டின் உள்ளே எண்ணெய் போட்டு, அதன் இயக்கத்தை சீராக வைத்திருக்க முடியும்.
பேனா மூடிகளில் உள்ள சிறிய துளைகளை நீங்கள் பார்த்திருக்கலாம். இது பேனா மை காய்ந்து போகாமல் இருக்கத்தான் என்று நினைத்தால் அது தவறு. இது ஒரு முக்கியமான பாதுகாப்பு நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை தவறுதலாக யாராவது, குறிப்பாக குழந்தைகள், பேனா மூடியை விழுங்க நேர்ந்தால், இந்தத் துளைகள் வழியாக காற்று உள்ளே சென்று, மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க உதவும். இது ஒரு சிறிய துளை என்றாலும், பல உயிர்களைக் காப்பாற்றும் திறன் கொண்டது.
உங்கள் ஜீன்ஸ் பேண்ட்டில் உள்ள பெரிய பாக்கெட்டிற்குள் ஒரு சிறிய பாக்கெட் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இது 1800களிலேயே வடிவமைக்கப்பட்டது. இந்த பாக்கெட் நாணயங்களை வைப்பதற்காக இல்லை.
அந்தக் காலத்தில் பாக்கெட் வாட்ச்களை பத்திரமாக வைக்கவே இது உருவாக்கப்பட்டது. இப்போது நாம் நாணயங்கள், பென் டிரைவ்ஸ் அல்லது இயர்பட்ஸ் வைக்கப் பயன்படுத்தினாலும், அதன் உண்மையான வரலாறு இதுதான்.
நீங்கள் அணியும் சில சட்டைகளின் கழுத்துப் பகுதியில், பின்புறமாக ஒரு சுருக்கு இருக்கும். இது வெறும் அலங்காரத்துக்காக இல்லை. அமெரிக்க கடற்படையினர் முதன்முதலில் இந்த சுருக்கை உருவாக்கினார்கள். கப்பலில் குறைந்த இடமே இருப்பதால், தங்கள் சட்டைகளை சுவர்களில் உள்ள கொக்கிகளில் தொங்கவிட இது உதவியது. காலப்போக்கில், இந்த அம்சம் சாதாரணமாக அணியும் சட்டைகளிலும் இடம்பெறுகிறது.
மைக்ரோவேவ் அடுப்பின் கதவில் உள்ள கருப்பு நிற வலையை பலரும் அது வெறுமனே ஒரு வடிவமைப்பு என்று நினைப்பார்கள். ஆனால், அந்த சிறிய வலை நமது பாதுகாப்பிற்காகவே வைக்கப்பட்டுள்ளது. மைக்ரோவேவ் அடுப்பு உணவை சூடாக்க மைக்ரோ அலைகளை (microwaves) பயன்படுத்துகிறது. இந்த அலைகள் கண்ணுக்குத் தெரியாதவை என்றாலும், அவை மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. இந்த அலைகள் வெளியே பரவாமல் தடுக்கவே அந்த கருப்பு வலை உதவுகிறது. இது எஃகு அல்லது வேறு உலோகத்தால் ஆனது. இந்த வலை, மைக்ரோ அலைகளை பிரதிபலித்து மீண்டும் அடுப்புக்குள்ளேயே திருப்பி அனுப்புகிறது. இதனால், ஆபத்தான கதிர்வீச்சு கண்ணாடி வழியாக வெளியே வராமல் தடுக்கப்படுகிறது.
இந்த சிறிய வடிவமைப்பு மாற்றங்கள், பொருட்களின் பயன்பாட்டை மேலும் பயனுள்ளதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றுகின்றன. இனிமேல், ஒவ்வொரு பொருளையும் பார்க்கும்போது, அதன் வடிவமைப்பின் பின்னணியில் உள்ள சுவாரசியமான தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்.