
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்ற போயிங் 787 ட்ரீம் லைனர் என்ற விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறி அதில் பயணம் செய்தவர்களில் ஒருவரை தவிர மற்றவர்கள் உடல் கருகி இறந்த நிலையில் போயிங் 787 ட்ரீம் லைனர் என்ற விமானத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
787 - 8 ட்ரீம் லைனர் எனப்படும் ஏர் இந்தியா விமானம் உலகின் மிகவும் பாதுகாப்பான விமானமாக கருதப்படுகிறது. இந்த விமானம் எரிபொருள் சிக்கனத்திற்கும், சொகுசான பயணத்திற்கும், புதுமையான வடிவமைப்பிற்கும் பெயர் பெற்ற இரண்டு என்ஜின்களை கொண்ட நடுத்தர அளவிலான விமானமாக உள்ளது.
குறைவான எடை கொண்ட கார்பன் இழைக் கூட்டுப் பொருட்களால் இந்த விமானம் கட்டமைக்கப்பட்டுள்ளதால், இது குறைவான எரிபொருளை பயன்படுத்துகிறது. இலகுவாக பறப்பதற்கு ஏற்ற வகையில் இறக்கைகளின் முனைகள் சற்று வளைவாகவும், விமானத்தின் மூக்கு பகுதி மென்மையான வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் விமானங்களிலேயே 787-8 டிரீம் லைனர் விமானம் தான் பெரிய அளவிலான ஜன்னல்களைக் கொண்டதாக இருக்கிறது. விமானத்தின் வெளிப்புறத்தில் உள்ள வெளிச்சத்திற்கு ஏற்ற வகையில் ஜன்னல்கள் ஒளியை கூட்டவும், குறைக்கவும் செய்யும் தொழில்நுட்பம் இந்த விமானத்தில் இருப்பதால் விமானத்திற்குள் அதிக அளவு ஒளி ஊடுருவுவது தடுக்கப்படுகிறது.
அதிக உயரத்தில் பறந்தாலும் அதாவது 6000 அடி உயரத்தில் விமானம் பறந்தாலும், பயணிகளுக்கு காற்றின் அழுத்தம் அதிகரிக்காமல் சொகுசான பயணத்தை இந்த விமானம் வழங்குகிறது. ஒரு நாளின் இரவு, பகல் என்ற மாறுபாடுகளுக்கு ஏற்ப விமானத்திற்குள் ஒளியை சரிப்படுத்தும் தொழில்நுட்பத்தை இவ்விமானம் கொண்டுள்ளதால் 'ஜெட் லேக்' எனப்படுவது தவிர்க்கப்படுகிறது.
பயணிகள் அமைதியாக விமானத்தில் பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில் இரைச்சலை தடுக்கும் தொழில்நுட்பம் இந்த வகை விமானத்தில் உள்ளது.13,580 கிமீ பயண தூரத்தை கடக்கும் 787-8 ட்ரீம் லைனர் விமானத்தில் இரு வகுப்புகளிலும் மொத்தம் 242 பயணிகள் பயணம் செய்யலாம்.
13,580 கிலோ மீட்டர் பயணிக்கும் 787-8 விளானம், போயிங் 787-9 விமானத்திற்கு அடுத்த நிலையில் இருந்தாலும், 11,750 கிலோ மீட்டர் பயணிக்கும் 787-10 விமானத்தை விட கூடுதல் தொலைவிற்கு பயணிக்கிறது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஜப்பான் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா ஆகியவை பயன்படுத்தி வரும் 787-8 ரக விமானம் முதல் முறையாக கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வானில் பறந்தது. இவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த விமானம் விபத்துக்குள்ளானது துரதிஷ்டவசமானது.