சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு வரை தகவல்களை ஆவணங்களாக்க டைப்ரைட்டர்களைத்தான் நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. தகவல் தொடர்புச் சாதனங்களில் டைப்ரைட்டர் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. நவீன கணினி யுகத்தில் டைப்ரைட்டர்கள் மெல்ல மெல்ல வழக்கொழிந்து வருகிறது. தற்போது இங்கொன்றும் அங்கொன்றுமாக டைப்ரைட்டிங் பயிலகங்கள் வழக்கத்தில் உள்ளன. இனி டைப்ரைட்டர் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றை சற்று பார்ப்போம்.
டைப்ரைட்டர் கண்டுபிடிப்பிற்கு மூல ஆதாரமாக இருந்தது கூட்டன்பர்க் வடிவமைத்த அச்சு இயந்திரமாகும். இங்கிலாந்தைச் சேர்ந்த ஹென்றி மில் என்பவர் முதன்முதலில் கி.பி.1714 ஆம் ஆண்டில் டைப்ரைட்டரைப் போன்ற ஒரு சாதனத்தை வடிவமைத்தார். இதற்கான காப்புரிமையையும் இவர் பெற்றார். இவர் இதன்பின்னர் இக்கருவியை எந்த விதமான முன்னேற்றமும் செய்யாமல் வைத்திருந்தார்.
இதன் பின்னர் வில்லியம் பர்ட் என்பவர் கி.பி.1829 ஆம் ஆண்டு ஒரு கருவியை வடிவமைத்தார். இதற்கு டைப்போகிராப்பர் (Typographer) என்ற பெயரையும் சூட்டினார். இந்த கருவியில் எழுத்துக்கள் சுற்றக்கூடிய ஒரு சட்டத்தில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இக்கருவியை உபயோகிப்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் எழுந்தன. இந்த கருவி தோல்வியைத் தழுவியது.
கி.பி.1867 ஆம் ஆண்டு கிரிஸ்டோபர் ஷோல்ஸ் என்பவர் ஒரு டைப்ரைட்டரை வடிவமைத்தார். இது ஒரு வெற்றிகரமான கருவியாக அமைந்தது. இதற்காக இவர் பெற்ற காப்புரிமையை நியூயார்க் நகரத்தில் புகழ் பெற்ற நிறுவனமான ரெமிங்டன் அண்டு சன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கினார். இந்நிறுவனம் உலகின் முதல் வியாபார ரீதியிலான வெற்றிகரமான டைப்ரைட்டர்களை கி.பி.1874 ஆம் ஆண்டில் தயாரித்து உலகத்திற்கு வழங்கியது.
ஷோல்ஸ்ஸின் மெக்கானிக்கல் டைப்ரைட்டரை அடிப்படையாகக் கொண்டு தாமஸ் ஆல்வா எடிசன் 1872 ஆம் ஆண்டு உலகின் முதல் எலெக்ட்ரிக் டைப்ரைட்டர்களை (Electric Typewriter) வடிவமைத்தார். இந்த கருவி 1950 ஆம் ஆண்டு வரை அவ்வளவாக நடைமுறையில் இல்லை. இதை அதிக விலைகொடுத்து வாங்க யாரும் முன்வரவில்லை. இதன் பின்னர் 1978 ஆம் ஆண்டு எலெக்ட்ரானிக் டைப்ரைட்டர் (Electronic Typewriter) வடிவமைக்கப்பட்டது. இதில் தகவல்களை சேமிக்கக் கூடிய மெமரி வசதி இருந்தது.
கிரிஸ்டோபர் ஷோல்ஸ் வடிவமைத்த டைப்ரைட்டரில் எழுத்துக்களும் எண்களும் நான்கு வரிசைகளில் அமைக்கப்பட்டிருந்தன. ரப்பரினாலான ஒரு உருளையும் மரத்தினாலான ஒரு ஸ்பேஸ்பாரும் (Spacebar) அமைக்கப்பட்டிருந்தன. எழுத்துக்கள் தற்போது உள்ளது போல சிறிய மற்றும் பெரிய எழுத்துக்களாக அப்போது அமைந்திருக்கவில்லை.
அனைத்து எழுத்துக்களும் பெரிய எழுத்துக்களாகவே (All Capital Letters) அமைக்கப்பட்டிருந்தன. இந்த குறையானது கி.பி.1878 ஆம் ஆண்டு ரெமிங்டன் நிறுவனத்தால் போக்கப்பட்டது. ஒரு ஷிப்ட் கீ அமைக்கப்பட்டு சிறிய மற்றும் பெரிய எழுத்துக்கள் அமைக்கப்பட்டன.
தொடக்கத்தில் தட்டச்சு செய்பவருக்கு தான் என்னென்ன வார்த்தைகளை டைப் செய்கிறோம் என்பது தெரியாமலே இருந்தது. தற்போது இருக்கும் இந்த வசதி அப்போது அமைக்கப்படவில்லை. இதனால் தட்டச்சு செய்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். தாங்கள் தட்டச்சு செய்வது சரியா தவறா என்பதே அவர்களுக்குத் தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். இக்குறை பிரான்ஸ் வாக்னர் எனும் ஜெர்மானியரால் கி.பி.1890 ஆம் ஆண்டு நிவர்த்தி செய்யப்பட்டது. ஜான் அண்டர்வுட் என்பவர் டைப்ரைட்டரில் பயன்படுத்தப்படும் இங்க் ரிப்பனையும் கார்பன் பேப்பரையும் கண்டுபிடித்தார்.
தற்போது அனைத்து கடிதங்களும் ஆவணங்களும் கணினியின் உதவியுடன் தயாரிக்கப்படுகிறது. டைப்ரைட்டரில் ஒரு பெரிய குறை என்னவென்றால் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால் அதை சரிசெய்வது மிகவும் கடினம். அப்படியே சரிசெய்தாலும் சரி செய்த இடத்தில் அந்த தவறு நன்றாகத் தெரியும்.
ஆனால் கணினியில் டைப்செய்யும் போது அதில் உள்ள வார்த்தைகளில் பிழையை கண்டுபிடிக்கும் அமைப்பின் மூலம் பிழைகளை கண்டுபிடித்து சுலபமாக திருத்திவிடலாம். டைப்ரைட்டரில் ஒரு நேரத்தில் அதிகபட்சமாக ஐந்து பிரதிகளுக்கு மேல் எடுக்கமுடியாது. முதல் பிரதியைத் தவிர மற்ற பிரதிகளில் எழுத்துக்கள் தெளிவில்லாமல் படிப்பதற்கு சிரமமாக இருக்கும். ஆனால் கணினியில் இந்த பிரச்சினை இல்லை.
மேலும் கணினியில் ஆவணங்களை ஒரு கோப்பின் மூலம் சேமித்து வைத்து எத்தனை முறை வேண்டுமென்றாலும் பிரதி எடுத்துக் கொள்ளலாம். தேவைப்படும் தகவல்களை சுலபமாக சேர்க்கலாம் அல்லது தேவையில்லாத தகவல்களை சுலபமாக நீக்கிவிடலாம். கணினியில் இத்தனை வசதி இருந்தாலும் கணினியின் கீபோர்டு டைப்ரைட்டர் கீபோர்டை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.