

இன்றைய அவசர உலகில், ஸ்மார்ட்போன் இல்லாமல் நம்மால் ஒரு நிமிடம்கூட இருக்க முடியாது. அது நம்முடைய உலகமாகவே மாறிவிட்டது. ஆனால், காலப்போக்கில் நம் போனின் வேகம் குறைவதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். ஒரு ஆப் (APP) ஓபன் செய்யவே நீண்ட நேரம் எடுப்பது, டச் செய்தால் சரியாக வேலை செய்யாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளைச் சந்திக்கிறீர்களா? கவலை வேண்டாம்! இதற்கு முக்கிய காரணம், உங்கள் போனுக்குள் சேர்ந்திருக்கும் ‘ஜங்க்’ (Junk) எனப்படும் குப்பைகள்தான்.
ஆம், உங்கள் போனும் ஒரு குப்பைத் தொட்டி போலத்தான். நீங்கள் பயன்படுத்துவதைப் பொறுத்து, அதற்குள் தேவையில்லாத ஃபைல்கள், பயன்படுத்தாத டேட்டாக்கள் எனப் பலவும் சேர்ந்து, அதன் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இந்த குப்பைகளை எப்படி எளிதாக நீக்கி, உங்கள் போனுக்குப் புத்துயிர் அளிப்பது என்று பார்ப்போம்.
1. கேச் டேட்டா (Cache Data):
நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு ஆப்பும், தற்காலிகமாகச் சில ஃபைல்களை உங்கள் போனில் சேமிக்கும். இவைதான் கேச் டேட்டா எனப்படுகின்றன. உதாரணமாக, ஒரு வெப்சைட்டை நீங்கள் திறக்கும்போது, அந்த தளத்தின் சில பகுதிகள் உங்கள் போனில் சேமிக்கப்படும். அடுத்த முறை அதே தளத்திற்குப் போகும்போது வேகமாகத் திறக்க இது உதவும்.
ஆனால், இந்த தற்காலிக ஃபைல்கள் நாளாக நாளாக அதிகரித்து, உங்கள் போனின் ஸ்டோரேஜை நிரப்பிவிடும். இதனால், போனின் வேகம் குறைந்துவிடும்.
எப்படி சுத்தம் செய்வது?
1. உங்கள் போனின் Settings பகுதிக்குச் செல்லுங்கள்.
2. அதில் Apps அல்லது Application Manager என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. ஒவ்வொரு ஆப்பின் பெயரையும் கிளிக் செய்து, அதில் உள்ள Storage என்பதைத் தட்டவும்.
4. அங்கு காணப்படும் Clear Cache என்பதைத் தேர்வு செய்யவும். இப்படி அனைத்து முக்கிய ஆப்ஸ்களுக்கும் செய்தால், போனில் கணிசமான இடம் காலியாகும்.
2. தேவையற்ற ஆப்ஸ் (Unused Apps):
உங்கள் போனில் பல ஆப்ஸ்கள் இருக்கும். ஆனால், அவற்றில் எத்தனை ஆப்ஸை நீங்கள் தினசரி பயன்படுத்துகிறீர்கள்? பயன்படுத்தப்படாத ஆப்ஸ்கள் உங்கள் போனில் இடத்தைப் பிடித்துக்கொள்வதுடன், பின்னணியில் இயங்கி பேட்டரி மற்றும் டேட்டாவையும் உறிஞ்சலாம். இதுபோன்று நீங்கள் ஒருமுறை மட்டும் பயன்படுத்திய ஆப்ஸ், அவசியமில்லாத கேம்கள், மாற்று ஆப்ஸ் இருக்கும்போது, ஒரே வேலையைச் செய்யும் பழைய ஆப்ஸை உடனடியாக நீங்க வேண்டும்.
Settings பகுதிக்குச் சென்று, Apps பிரிவில் உங்களுக்குத் தேவையில்லாத ஆப்ஸ்களைத் தேர்ந்தெடுத்து Uninstall செய்யுங்கள்.
3. கேலரி (Gallery):
போன் ஸ்டோரேஜ் நிரம்பிப் போவதற்குக் கிட்டத்தட்ட 80% காரணம் நமது புகைப்படங்களும், வீடியோக்களும்தான். குறிப்பாக வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியது:
உங்கள் வாட்ஸ்அப் செட்டிங்ஸில் Media Visibility ஆன் செய்யப்பட்டிருந்தால், உங்களுக்கு வரும் ஒவ்வொரு புகைப்படமும், வீடியோவும் தானாக உங்கள் போன் கேலரியில் சேமிக்கப்படும். ஒரு நாளில் நூற்றுக்கணக்கான மெசேஜ்கள் வந்தால், ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் உங்கள் போனில் சேர்ந்துவிடும்.
என்ன செய்ய வேண்டும்?
1. முதலில், வாட்ஸ்அப் Settings சென்று, Chats என்பதைத் தேர்ந்தெடுத்து, அதில் உள்ள Media Visibility அம்சத்தை ஆஃப் (Off) செய்யுங்கள். இனி, நீங்கள் அனுமதித்தால் மட்டுமே ஃபைல்கள் சேமிக்கப்படும்.
2. பிறகு, உங்கள் கேலரியைத் திறந்து, தேவையில்லாத, பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மொத்தமாக நீக்குங்கள் அல்லது அவற்றை Google Photos அல்லது Drive போன்ற கிளவுட் ஸ்டோரேஜுக்கு மாற்றுங்கள்.
இந்த மூன்று எளிய வழிகளைப் பின்பற்றினால், உங்கள் ஸ்மார்ட்போன் இழந்த வேகத்தைப் பெறுவதுடன், அதன் செயல்பாடும் மேம்படும். இனி உங்கள் போன் புதிய போன் போல மாறிவிடும்.