
இன்று காலை 8 மணியளவில் கடலூர் , செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் பலியாகினர். மேலும் டிரைவர் உட்பட இருவர் படுகாயம் அடைந்துள்ளார்கள். இந்த விபத்து தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர் வாகன ஓட்டிகளின் பேச்சை கேட்டு கேட்டை திறந்ததுள்ளதால் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. நடைபெற்ற இந்த விபத்திற்கு முக்கிய காரணம் ,"ரயில் வரும் நேரத்தில் ரயில்வே கேட் திறக்கப்பட்டது தான்" என்பது உறுதியாகி உள்ளது. இது போன்ற விபத்துக்களை தடுக்கதான் ரயில்வே துறையில் இன்டர்லாக்கிங் சிஸ்டம் என்ற பாதுகாப்பு தொழில் நுட்பம் பயன்படுத்தப் படுகிறது.
இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தால் மட்டுமே ரயிலுக்கு சிக்னல் செல்லும். இந்த சிக்னல் சென்றால் மட்டுமே ரயில் தொடர்ந்து பயணிக்கும். ஒருவேளை ரயிலுக்கு சிக்னல் செல்லாவிட்டால் அந்த ரயில்வே கேட்டை கடக்கும் முன்னரே ரயில் நிறுத்தப்படும். இந்த இன்டர்லாக்கிங் பாதுகாப்பு அமைப்பு பயன்படுத்தப்படும் ரயில் வழித்தடங்களில் ஒவ்வொரு ரயில்வே கேட்டும் சிக்னல்கள் மூலம் இணைக்கப்படுகின்றன.
ரயில் அந்தப் பாதையை கடக்கும் 5 நிமிடம் முன்னதாகவே ரயில்வே கேட் மூடப்படும். இவ்வாறு ரயில்வே கேட் மூடப்பட்ட உடன் ரயில் வரும் பாதையில் 1 கிமீ க்கு முன்னர் உள்ள சிக்னல்களில் பச்சை விளக்குகள் எரியும், இதைப் பார்த்து ரயில் ஓட்டுநர் தொடர்ச்சியாக ரயிலை ஓட்டுவார். ஒருவேளை ரயில்வே கேட் மூடப்படா விட்டால் அந்த சிக்னலில் சிகப்பு விளக்கு எரியும் , இதைக் கண்ட ரயில் ஓட்டுநர், ரயிலை முன் கூட்டியே நிறுத்தி விடுவார். தனது அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவலை தெரிவிப்பார். இதனால் நடைபெற உள்ள பெரிய விபத்துகள் தடுக்கப்படும்.
ரயில்வே துறையில் மனித தவறுகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க இன்டர் லாக்கிங் சிஸ்டம் பெரியளவில் உதவி செய்கிறது. இதன் மூலம் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளையும் , ரயில்வே பாதைகளை கடக்கும் வாகனங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும். இந்த பாதுகாப்பு அமைப்பு நாடு முழுக்க பல வழித்தடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. ஆயினும் இன்னும் சில பகுதிகளில் இந்த பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட வில்லை.
விபத்து நடைபெற்ற இந்த வழித்தடத்தில் இன்டர்லாக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட வில்லை. ஒருவேளை பொருத்தியிருந்தால் ரயில் ஓட்டுநர் முன்பே சிகப்பு விளக்கைப் பார்த்து ரயிலை நிறுத்தி இருப்பார். இதனால் மூன்று அப்பாவி உயிர்களும் பாதுகாக்க பட்டிருக்கும் . இந்திய ரயில்வே அமைச்சகம் இந்த நிகழ்ச்சியை ஒரு பாடமாகக் கொண்டு நாடு முழுவதும் உள்ள ரயில்வே பாதைகளில் இன்டார்லாக்கின் பாதுகாப்பு அமைப்பை நிறுவ வேண்டும்.
அது மட்டுமல்லாது ரயில்வே கேட்களில் பணிபுரியும் ஊழியர்கள் தூங்காமல் இருக்கவும் , அலட்சியமாக செயல்படாமல் இருப்பதையும் அடிக்கடி கண்காணிக்க வேண்டும். இது தவிர குடிமக்களும் தங்களது கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். மூடிய ரயில்வே கேட்டை திறக்க சொல்லி வற்புறுத்துவதும் , ரயில்வே கேட் அடியில் புகுந்து வாகனங்களை தள்ளிக் கொண்டு செல்வதும் முட்டாள்தனமின்றி வேறு என்ன?